எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 23 October 2021

படித்ததில் பிடித்தவை (“அம்மாவின் கண்கள்” – கவிதா ஜவகர் கவிதை)

 

*அம்மாவின் கண்கள்*

 

வீடியோ காலில்

அழைத்துவிட்டு

மௌனமாய் என்னையே

பார்த்துக்கொண்டிருக்கும்

அம்மாவின் கண்களில்

ஒளிர்வதுதான்

பிரியத்தின் பேரொளி..!

 

*கவிதா ஜவகர்*




Friday 22 October 2021

படித்ததில் பிடித்தவை (“சிறு குருவி” – பழநிபாரதி கவிதை)

 


*சிறு குருவி*

 

நூறு கிளைநீட்டி

ஆயிரம் பூப்பூத்து

இலட்சம் இலையசைத்தால்

எங்கென அமரும்

இச்சிறு குருவி..!

 

*பழநிபாரதி*




Thursday 21 October 2021

படித்ததில் பிடித்தவை (“மரணப்படுக்கையில் கவிதைகள்” – நிலாப்பெண் புவனா கவிதை)


*மரணப்படுக்கையில்  கவிதைகள்*

 

நீ உயிருக்குள்

ஊடுருவியதால்,

உயிர் பெற்ற எழுத்துக்கள்

பிணைந்து நின்று,

கவிதைகளாக

வெறியாட்டம் போட்டன…

 

நீ பார்க்கும் வேளைகளில்,

பல்லிளித்து நின்றன…

 

நீ பேசிய ஒருசில

வார்த்தைகளை கேட்டு,

கோடி வார்த்தைகள்

முட்டிக் கொண்டன,

உன்பற்றிய கவிதைகளுக்குள்

எப்படியேனும் நுழைந்துவிட…

 

அழகான கவிதைகளென,

புன்னகைப் பூத்தாய்…

ஆரவாரமிட்டு கூச்சலிட்டன

உன்னால் பிறந்த,

கவிக் குழந்தைகள்…

 

மெள்ள நீ விலகிசெல்கையில்

வீரிட்டு அழுதன கைக்குழந்தையாய்

 

முற்றிலுமாக விட்டுச்சென்றாய்,

மரணப்படுக்கையில்

மெளனித்தன கவிதைகள்..!

 

*நிலாப்பெண் புவனா*


Wednesday 20 October 2021

படித்ததில் பிடித்தவை (“காற்றோடு விளையாடி” – தபூ சங்கர் கவிதை)


*காற்றோடு விளையாடி*

 

காற்றோடு விளையாடிக்

கொண்டிருந்த

உன் சேலைத்தலைப்பை

இழுத்து

நீ இடுப்பில்

செருகிக்கொண்டாய்.

 

அவ்வளவுதான்...

 

நின்றுவிட்டது காற்று..!

 

*தபூ சங்கர்*



Tuesday 19 October 2021

படித்ததில் பிடித்தவை (“கனமுள்ள சோகங்கள்” – ஞானக்கூத்தன் கவிதை)

 


*கனமுள்ள  சோகங்கள்*

 

மனிதன் எங்கும்

போக விரும்பவில்லை.

ஆனால் போய்க் கொண்டுதான் இருக்கிறான்.

 

மனிதன் யாருடனும் போக விரும்பவில்லை.

ஆனால் யாருடனாவது

போய்க் கொண்டுதான்

இருக்கிறான்.

 

மனிதன் எதையும்

தூக்கிக் கொண்டு போக விரும்பவில்லை.

ஆனால் எதையாவது

தூக்கிக் கொண்டுதான்

போகிறான்.

 

குன்றுகளைக் காட்டிலும் கனமுள்ள

சோகங்களைத் தூக்கிக் கொண்டு

நடக்க மனதில்

பயிற்சி வேண்டாமா..?

 

*ஞானக்கூத்தன்*




Monday 18 October 2021

படித்ததில் பிடித்தவை (“மஞ்சள் சுடிதார்” – லதா மகன் கவிதை)

 


*மஞ்சள் சுடிதார்*

 

முந்நூற்று அறுபத்து ஏழாவது

முறையாய்

மஞ்சள் சுடிதாரில் வருகிறாய்

ஏன் வேறு நிறமில்லையா..?

என்றேன் கெளரியிடம்.

 

இப்படி நீ

நியாபகம் வைத்திருப்பதை

கேட்பதற்காகத்தான்

என்றாள்..!

 

*லதா மகன்*


Sunday 17 October 2021

படித்ததில் பிடித்தவை (“உச்சரிக்கும் சொல்” – அ.வெண்ணிலா கவிதை)

 


*உச்சரிக்கும் சொல்*

 

உள்ளுக்குள் ஊறுகின்றன

ஓராயிரம் வார்த்தைகள்.

 

தோன்றுமிடமும் முடியுமிடமும் தெரியாமல் தோன்றிய கணத்தில் மறைகின்றன.

 

உச்சரிக்கும் சொல்லிலிருந்து கிளைக்கிறது

வாழ்வின் அமுதமும் நஞ்சும்..!

 

*அ.வெண்ணிலா*




Saturday 16 October 2021

படித்ததில் பிடித்தவை (“எதை எப்போது” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*எதை எப்போது*

 

நாவின் அடியில்

கத்திகள்.

 

நாவின் மேல்

பூக்கள்.

 

பேசிடும் நாவுக்குதான்

தெரியும்

 

எதை எப்போது

எடுக்கும் என்று..!

 

*ராஜா சந்திரசேகர்*




Friday 15 October 2021

படித்ததில் பிடித்தவை (“குழந்தையின் பூந்தோட்டம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*குழந்தையின் பூந்தோட்டம்*

 

குழந்தை வரைந்தாள்

பூந்தோட்டம்.

 

அசலாய்

அப்படியே.

 

பட்டாம்பூச்சி வந்து

ஏமார்ந்து போகும்படி.

 

உற்று கவனித்தால்

வாசனை நாசி தட்டும்.

 

வண்ணம் விதைத்து

வளர்ந்த தோட்டம்.

 

அவளிடம் மெல்லக் கேட்டேன்

 

உன் தோட்டத்திற்கு

இரவு காவலிருக்கலாமா..?

 

கண்கள் மலரச் சொன்னாள்

 

உங்களை வரைந்து வேண்டுமானல்

காவலுக்கு வைக்கலாம்

அப்படியே முடியாது..!

 

*ராஜா சந்திரசேகர்*




Thursday 14 October 2021

படித்ததில் பிடித்தவை (“ஒரு பூ” – ராஜா சந்திரசேகர் கவிதை)


*ஒரு பூ*

 

சிதறிக் கிடந்த

உதிரிப்பூக்களை

மிதிக்காமல்

கடந்து போனதில்

பூத்துப் போனது

மனதில்

ஒரு பூ..!

 

*ராஜா சந்திரசேகர்*