எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 28 October 2023

படித்ததில் பிடித்தவை (“அவள் நைட்டி அணிந்ததில்லை...” – சாம்ராஜ் கவிதை)

 


*அவள் நைட்டி அணிந்ததில்லை...*

 

ஷேம் ஷேம் பப்பி ஷேம்என்று

சின்ன வயதில் ஓடியவள்....

எட்டு வயதில்

முழங்காலுக்கு மேலான காயத்தை

அப்பாவுக்கு காட்ட மறுத்தவள்...

உடை மாற்றும் அறைக்குள்

அம்மாவைக் கூட‍ அனுமதியாதவள்...

எக்ஸ்ரே அறையிலிருந்து ஓடிவந்தவள்...

அருவிகளில் ஒருபொழுதும் குளிக்காதவள்...

வெளிச்சத்தில் கணவனுடன் கூட சம்மதியாதவள்...

மரித்தலுக்கு பின்

அம்மணமாய்க் கிடக்கிறாள் மார்ச்சுவரியில்..!

ஈக்களும், கண்களும் அங்கேயேமொய்க்க

இப்படியாகுமெனில்

அன்புலட்சுமி தற்கொலையே

செய்திருக்க மாட்டாள்..!

 

*சாம்ராஜ்*

"என்றுதானே சொன்னார்கள்" கவிதை நூல்.




Wednesday 25 October 2023

படித்ததில் பிடித்தவை (“சமன்” – கல்யாண்ஜி கவிதை)


*சமன்*

 

பறிக்க முடியாத

பட்டாம்பூச்சியை

மறக்க

 

பறக்கமுடியாத பூக்களை

வெடுக்கெனக் கிள்ளி

வீசின

விரல்கள்..!

 

*கல்யாண்ஜி*



Monday 16 October 2023

*குடைக்குள் மழை*


 சிறு தூரலான மழை நாளில்

மடக்கிய குடையுடன்

ரயிலின் வருகைக்காக

நடைப்பாதை கூரையின் கீழே

காத்திருக்கிறேன் நான்.

 

எதிர் திசையில்

ரயிலிலிருந்து இறங்கி

மழையில் நனைந்தபடி

கையில் பெரிய பையுடன்

சிறு சிறு அடிகளாக

நடக்கும் முதியவர்.

 

மழையிலேயே

அவ்வப்போது நின்று

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

மெதுவாக நடக்கிறார்.

 

எனது குடையை விரித்து

அந்த முதியவரிடம்

பையை வாங்கிக் கொண்டு

நடைப்பாதை முடியும் வரை

அவரின் கைப்பிடித்து

அழைத்து செல்கிறது மனசு.

 

மனசு திரும்பும் வரை

எனக்கான ரயில்

சிக்னலில் காத்திருக்கிறது..!

 

*கி. அற்புதராஜு*