எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 28 February 2021

படித்ததில் பிடித்தவை (“ஞானசேகரனை கொத்தித் தின்னும் ஞானசேகரன்” – இரா.பூபாலன் கவிதை)

 


*ஞானசேகரனை கொத்தித் தின்னும் ஞானசேகரன்*

 

ஞானசேகரன் செத்து

பதினாறாம் நாள் காரியத்தில்

படையலிட்டிருந்தார்கள்.

அவனே காகமாகி வந்து

முதல் பருக்கையை

தின்றால்தான்

தின்பதாக காத்திருந்தோம்.

உச்சந்தலையில் அடிபட்டு

புண்ணோடு வந்த காகம்

முதல் பருக்கையைக் கொத்த

ஞானசேகரனே வந்து விட்டானென

கண்ணீர் கோர்க்க

சிலாகித்தனர்.

 

விபத்தில் அடிபட்டு

இறந்து போனவனின்

உடல்திசுக்களை

தார்ச்சாலையில்

இதே காகம்

கொத்திக் கொண்டிருந்ததைப்

பார்த்திருந்தேன்..!

 

*இரா.பூபாலன்*


Saturday 27 February 2021

படித்ததில் பிடித்தவை (“மறதியாக/ஞாபகத்துடன்” – கல்யாண்ஜி கவிதை)

 


*மறதியாக/ஞாபகத்துடன்*  

 

எப்போதும் விளையாடுவதற்கு

இரண்டு பேராக வரும் சிறுமி

விபத்தில் அக்கா இறந்து விட்ட

துக்கத்தின் இடைவெளிக்குப் பின்

முதன் முறையாக வருகிறாள்

இறகுப் பந்து மைதானத்திற்கு

தான் மட்டும்.

சைக்கிள் கேரியர் கவ்வலுக்குள்

செருகிவைக்கப்பட்டிருக்கின்றன

இரண்டு மட்டைகள்

மறதியாக/ஞாபகத்துடன்..!

 

*கல்யாண்ஜி*


Friday 26 February 2021

படித்ததில் பிடித்தவை (“சுற்றுச் சுவர்களில்...” – கல்யாண்ஜி கவிதை)

 


*சுற்றுச் சுவர்களில்...*

 

எதிர்பார்க்கவே இல்லை

அந்தக் கவிஞரின் புதியவீட்டுச்

சுற்றுச் சுவர்களில்

எந்தப் பறவைகளும்

பூனைக்குட்டிகளும்

அமர முடியாதபடி

கண்ணாடிச்சில்லுகள்

பதிக்கப்பட்டிருக்கும் என..!

 

*கல்யாண்ஜி*


Thursday 25 February 2021

படித்ததில் பிடித்தவை (“வடை மழை” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*வடை மழை* 

 

வயற்காட்டிலிருந்து திரும்பும்போது

கணக்கு வைத்திருக்கும் மளிகைக் கடையில்

தேன் மிட்டாயோ வரிக்கியோ

மறக்காமல் வாங்கி வருவார் அப்பா.

 

வானம் இருட்டிக்கொண்டு

மழை வரும் அறிகுறி தெரிந்தால்

உளுந்தை ஊறவைத்துவிடுவாள் அம்மா.

 

மழை வரும் நாளில் கண்டிப்பாக

வடை சுடுவாள் என்று

தூறலோடு ஓடிவருவார் அப்பா,

அன்றைக்கு மட்டும் வெறுங்கையோடு.

 

என்ன வாங்கி வந்தேப்பா?’ என்று

ஓடிவரும் பிரியாக்குட்டியிடம்

அம்மா சொல்வாள்

இன்னைக்கு உங்கப்பா

உனக்கு மழை வாங்கி வந்திருக்கார் என.

 

அதையும் நம்பிவிடுவாள்

மின்னல் கண்ணைப் பறிக்கும் என்ற பயமின்றி

ஜன்னல் வழியே கைநீட்டி

மழை வாங்கிக்கொள்ளும் பிரியாக்குட்டி..!

 

 

*சேயோன் யாழ்வேந்தன்*

Wednesday 24 February 2021

படித்ததில் பிடித்தவை (“நினைவின் எடை” – அரவிந்த்குமார் கவிதை)

 


*நினைவின் எடை*

 

சட்டென்று உடல் எடை

கூடியதாகக் காட்டியது

எடை பார்க்கும் கருவி.

 

எதை அகற்றினால்

எடை குறையும்..?

நினைவுகள்தான் சுமை..!

 

சிறகு இருப்பதை

நினைவில் கொள்ளாத

பறவைதான் பறக்கிறது..!

 

*அரவிந்த்குமார்*

Tuesday 23 February 2021

படித்ததில் பிடித்தவை (“உறவு” – அறிவுமதி கவிதை)

 


*உறவு*

 

ஒவ்வொரு செடிக்கும்

ஒவ்வொரு கொடிக்கும்

ஒவ்வொரு மரத்திற்கும்

பெயர்ச்சொல்லி,

உறவு சொல்லி

வாழ்ந்த வாழ்க்கை

வற்றிவிட்டது..!

 

*அறிவுமதி*



Monday 22 February 2021

படித்ததில் பிடித்தவை (“மரம் உதிர்க்கும் இலைகள்” – ஞானக்கூத்தன் கவிதை)

 


*மரம் உதிர்க்கும் இலைகள்*

 

பச்சைத் தழையுடன்

நின்றிருந்த மரத்தில்

காற்று புகுந்தது.

எண்ணி எண்ணி

துறக்கிறாற் போல

விளையாடி விழுந்தன

பழுப்பிலைகள்.

 

விழுந்த இலைகளில்

இன்னமும் பசுமை

குன்றாதவை

இருந்தது கண்டேன்.

அவ்விலைகள்

மரத்தில் மேலும்

சில நாள் இருந்திருக்கலாம்

என நினைத்தேன்.

 

விழுந்தன அவ்வகை இலைகள்

ஆனால் நான் யார் அதைக்கூற..?

 

மரமே அறியும்

இலைகளில் எவ்வெவ்

இலைகளை உதிர்க்கலாம்

அன்றைக்கென்று..!

 

*ஞானக்கூத்தன்*


Sunday 21 February 2021

படித்ததில் பிடித்தவை (“மாற்றங்கள் அவசியம் அய்யனார்” – கார்த்தி கவிதை)

 

*மாற்றங்கள் அவசியம் அய்யனார்*

 

நுனியில்

குத்திவைத்த எலுமிச்சை

சாறுகளற்று

மஞ்சள் மறந்து சூம்பிப்போய்.

 

சிலையின் கீழ்

நிழலுக்கு ஒதுங்கும்

வழிதப்பிய கிடைமாட்டின் கழுத்தில்

மெல்ல இறங்குகிறது

கறுத்த கூர் நிழல்.

 

கீறிய அதன் கைப்பிடியில்

ஏதோ போதிக்கிறது

இளைப்பாறும் பட்டாம்பூச்சி

ரொம்ப நேரமாய்.

 

ஆறுபேர் தூக்கிவந்து

சொருகி வைத்த கருவி

பார்த்துவிட்டது

மழை வெயிலென

நிறையப் பருவங்கள்.

 

எல்லைக்குள் நுழையும்

சாணை பிடிப்பவன்

நேர்த்திக்கடன் முடிந்து

நிமிர்ந்து பார்ப்பான்

ஆச்சரியமாய் அதன் நீளம்.

 

ஓங்கி உயர்ந்த ஆகிருதி

தடித்த முறுக்கு மீசை

ஊர்காக்கும் பணியாளர்

பிடித்திருக்கும் புஜபலமெனப்

பெருமூச்சுவிடுபவரால்

கண்டுகொள்ளப்படாதது

அத்தனையும் சுமக்கும் மண்குதிரையே.

 

என்றாவதொருநாள்

யார் கனவிலோ வந்து

துருவேறிய

அம்மாம்பெரிய அரிவாளை

மாற்றச்சொல்லவிருப்பவர்

கேட்கப்போவது

பலியாடுகளை மட்டுமே..!

 

*கார்த்தி*