எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 31 August 2021

படித்ததில் பிடித்தவை (“சோதனைக்குழந்தை” – செ.புனிதஜோதி கவிதை)

 


*சோதனைக்குழந்தை*

 

தள்ளிப்போன மாதவிடாய்

கருவென்றே பகிரவேண்டும்.

மனுகொடுத்த இறைவன்

கண்திறந்துப் பார்க்க

கண்ணையும் தருவதாய்

வேண்டுதல் வைக்கிறாள்.

 

உயிர்துளியும் கருமுட்டையும்

தழுவலின்றி தாமதமாகும்

குழந்தைப்பேற்றில்.

 

சமூக குடைச்சலில்

இரு ஜீவனின் உள்ளூர ஓலமும்

சத்தமின்றி பூக்கும் கண்ணீரும்

எவரும் புரிந்துக்கொள்ளாதப் பக்கங்களாய்.

 

வாரிசு... வாரிசு... சத்தம்

அவளுக்குள் இறங்கும்

கத்திக்குத்து.

 

சோதனைக்குழாய் குழந்தை

பெற பரிசோதனை எலியாய்

வலியோடும் படுத்துக்கிடக்கிறாள்

மழலையின் சங்கீதராகத்திற்காக.

 

வராத மோகனத்தின்

வற்புறுத்தலில் உயிர்துளி

சேகரித்துத் தருகிறான் மருத்துவமனையில்.

 

கருப்பைக்குழாயில்

உயிரோடு சூடுவைக்கும் உயிரற்றகருவிகளின் குடைச்சலால் புண்ணாகிக்கிடக்கிறாள்.

 

கால்களைத் தூக்கி கட்டியதில்

மூச்சடைத்து முன்னூறுப்பிள்ளைகளைப்

பெற்ற

பிரசவ வலியை உணர்கிறாள்.

 

விழிகரையில் எழுதுகிறது கண்ணீர்.

நம்பிக்கையின்

நடைப்பயிற்சியில் தொடருது

இவ்வண்ணம்..!

 

*செ.புனிதஜோதி*


Monday 30 August 2021

படித்ததில் பிடித்தவை (“வரம் வாங்கிய சொற்கள்” – மணி அமரன் கவிதை)

 


*வரம் வாங்கிய சொற்கள்*

 

இதழ் பூட்டிய மௌன சிறைகளில்

சிறைபட்டுக் கிடக்கிறது

ஊடல் கொண்ட இதயத்தின் சொற்கள்.

 

இறுகிக் கிடக்கும் மௌனத்தையும்

உடைக்கும் உளியாகிறது

கண்ணீர் கண்டு கசியும் சொற்கள்.

 

புரட்டி படிக்க விழிகளின்றி

புத்தக பக்கங்களில் போர்த்தி துயில்கிறது

புத்தன் உதிர்த்த போதனை சொற்கள்.

 

ஆலகால விஷம் தடவி ஆயுளுக்கும் கொல்கிறது

என்னை மறந்து விடுங்கள் என்று

என்னவளின் இதழ் உதிர்த்த

அன்பை மறந்த சொற்கள்.

 

காலம் காலமாக ஓதப் பட்டும்

கண் விழிக்கச் செய்ய வில்லை

கடவுளின் காதுகளில் விழும்

புரோகிதர்களின் மந்திரச் சொற்கள்.

 

தப்பு தப்பாய் பேசினாலும்

தன்னை மறக்க செய்கிறது

அதோ...

தவழும் குழந்தையின் இதழ்களில் வழியும்

தவம் கிடந்து..!

 

*மணி அமரன்*

Sunday 29 August 2021

படித்ததில் பிடித்தவை (“அக்காவின் கைகள்” – மு.முருகேஷ் கவிதை)

 


*அக்காவின் கைகள்*

 

துடைப்பம்,

பால் பாக்கெட்,

கரண்டி,

காய்கறி,

அழுக்குத் துணி,

சோப்பு என

ஏதேனுமொன்று

அக்காவின் கைகளில்

எப்போதும் தென்படும்.

 

வீட்டுக்கு ஒதுங்கும்

அந்த நாட்களில் மட்டும்

அபூர்வமாய் பார்க்க முடிகிறது

அக்காவின் கையில்

புத்தகமொன்றை..!

 


*
மு.முருகேஷ்*



Saturday 28 August 2021

படித்ததில் பிடித்தவை (“உன் ஒற்றைச்சொல்” – இசை ப்ரியா கவிதை)

 


*உன் ஒற்றைச்சொல்*

 

இயல்பாய்

ஒரு சொல்லை

எனக்களித்தாய்

 

ஆரவாரமின்றி

இரண்டு சொற்களாக

திருப்பித் தந்தேன்

 

அவற்றிலிருந்து

அறுவடை செய்து

நான்கு சொற்களை

வழங்கினாய்

 

அந்த நான்கு சொற்களையும்

செதுக்கி அலங்கரித்து

உன் வீட்டு முற்றத்தில்

வைத்துச் சென்றேன்..

 

மறுநாள் காலையில்

என் சன்னலோரத்தில்

பதினாறு சொற்கள்

குவியலாயிருந்தன.

 

அன்றிரவு

அந்த பதினாறையும்

ஒருவழியாக்கி

உன் வயலில் விதைத்து திரும்பினேன்

 

அதிகாலையில்

என் மாந்தோப்பில்

160 மூட்டை சொற்கள்

கிடத்தப்பட்டிருந்தன

 

அவற்றை சுமந்து வந்து

பதினாறாயிரம் மூட்டைகளாக

உன் முல்லைக்காட்டில்

இறக்கித் திரும்பினேன்..

 

திணறியபடி வந்து

முன்னர் அளித்த

ஒற்றைச் சொல்லைத்

திரும்பக் கேட்டாய்..

 

எடுத்துக் கொள்ளென

எனதறையின் வாசலைத்

திறந்துவிட்டேன்..

 

உன் சொல்லிலிருந்து

பல்கிப் பெருகிய

கோடானுகோடி சொற்கள்

அடைபட்டிருந்தன..

 

அதிலிருந்து

உன் சொல்லைப்

பிரித்தெடுத்து

வெளியேறினாய்..

 

சில நொடிகளில்

வெடித்து சிதறி

பால் வெளிமுழுதும்

பரவிக் கிடந்தது

உன் ஒற்றைச் சொல்..!

 

*இசை ப்ரியா*

Friday 27 August 2021

படித்ததில் பிடித்தவை (“மின்னலின் தீண்டல்” – கரிகாலன் கவிதை)

 


*மின்னலின் தீண்டல்*

 

கருணையைக் கொண்டு வருகிறீர்கள்.

சொர்க்கத்தின் சாவியை எடுத்து வருகிறீர்கள்.

ஒரு மலரைத் தாங்கி வருகிறீர்கள்.

 

கேள்வியின் வெளிச்சத்தால்

உங்கள் இருளை அழிக்கும்

ஜோதியை ஏந்தி வருகிறீர்கள்.

 

அலுப்பெனும்

தீரா நோயின்

மருந்துடன் வருகிறீர்கள்.

 

அருவியின் குளிர்ச்சியை,

நதியின் மலர்ச்சியை,

நிலவின் ஒளியை,        

நட்சத்திரங்களின் அழைப்பை,

மின்னலின் தீண்டலை,

உன்னதத்தின் முழுமையை         

அள்ளியெடுத்து அரவணைத்து வருகிறீர்கள்.

 

ஒரு குழந்தையை ஏந்தி வரும் நீங்கள்..!

 

*கரிகாலன்*


Thursday 26 August 2021

படித்ததில் பிடித்தவை (“வார்த்தைகளுக்கு வசப்படாதவை” – அமீர் அப்பாஸ் கவிதை)

 


*வார்த்தைகளுக்கு வசப்படாதவை*

 

குழந்தைகளின் அழுகை

அழுகை சார்ந்ததது அல்ல..!

விருப்பமின்மையின் எதிரொலி..!

 

குழந்தைகளின் புன்னகை

மகிழ்ச்சி சார்ந்ததது அல்ல..!

மொழியின் தேவைகளற்றும்

புரிதல் நிகழ்ததன்

நன்றி தெரிவித்தல்..!

 

சொற்களை விடவும்

ஓசைகளும் சைகைகளும்

உயர்ந்த அர்த்தம் மிக்கவை.

என குழந்தைகள் நமக்கு

உணர்த்தி விடுகின்றன..!

 

குழந்தைகள் பிழைப்பட

பேசும் போதெல்லாம்

இலக்கணம் தவறி

இலக்கியமாகின்றன..!

 

குழந்தைகள்

படைப்பின் ரகசியங்களை

வியந்து இரசிக்கின்றன..!

 

தானே ஒரு வியக்கத்தக்க

படைப்பின் அதிசயம்

என்பதையும்

மறந்து இரசிக்கின்றன..!

 

*அமீர் அப்பாஸ்*