எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 26 November 2019

படித்ததில் பிடித்தவை (‘குட்பை’ சொன்ன கிளி – ஞானக்கூத்தன் கவிதை)


குட்பை சொன்ன கிளி


பேசுங் கிளிமேல் எனக்கு ஆசை பிறந்தது.

நானொரு பேசுங்கிளியை வாங்கி வந்தேன்.

பேசுங்கிளியை என்னிடம் விற்றவன்
கிளியை எப்படி வளர்க்கணும் என்பதை
என்னிடம் விரிவாகச் சொன்னான்.

கூண்டில் கிளியை வளர்ப்பது
பாவமென்று கூறினார்கள்
பக்கத்துப் போர்ஷன் பெரியவர்கள்.
நானதைப் பொருட்படுத்தாமல்
நல்ல இடமாகப் பார்த்து
பேசுங் கிளியின் கூண்டை அமர்த்தினேன்.

கூண்டில் இருந்த கிளி
பழங்களை விதைகளை நன்றாகத் தின்றது
ஆனால் ஒருநாள் கூடப் பேசவே இல்லை.

என்ன குறையோ என்ன கோபமோ
பேசப் பிடிக்காமல் போயிற்றென்று
சும்மா இருந்தேன் சிலநாட்கள்.
என்னிடம் இல்லை என்றாலும்
வேறு யாரிடமாவது
பேச வேண்டும் அல்லவா அந்தக் கிளி..?

குட் மார்னிங் சொன்னேன்.

சுவையாய் இருந்தனவா பழங்கள் என்றேன்.
எதற்கும் பேசவில்லை அந்தக் கிளி.
வீட்டுக்கு வந்தவர்கள் கிளியிடம்
பேச்சுக் கொடுத்தார்கள். பதிலுக்குப்
பேசவே இல்லை அந்தக் கிளி.
பேசாத கிளியை வளர்ப்பானேன்
என்றார்கள் வீட்டில். நானும்
கிளியை விற்கலாம் என்று தீர்மானித்தேன்.

விலைக்கு வாங்க வந்தவர் கேட்டார்
பேசுமா..? என்று. பேசுமே என்றேன்.
வீட்டுக்குக் கொண்டுபோய்ப்
பழங்கள் தந்து பழக்குங்கள். இரண்டே நாளில்
நன்றாய்ப் பேசும் என்றேன்.
பொய் சொன்ன நெஞ்சில்
பூதங்கள் ஐந்தும் புன்னகை செய்தன.
விலைக்குப் பெற்றவர் கிளியுடன்
கூண்டைப் பெற்றுக்கொண்டு
புறப்படும் போது திடுக்கிட்டுப் போனேன்
குட்பை என்றது அந்தக் கிளி.

      -  ஞானக்கூத்தன்.

Saturday, 23 November 2019

படித்ததில் பிடித்தவை (“தொடர்பு எல்லைக்குள்” – கல்யாண்ஜி கவிதை)


*தொடர்பு எல்லைக்குள்*

ஒரு சிறு பறவை
எங்கள் வீட்டுக் கருவேப்பிலை மரத்திலிருந்து
எதிர் வீட்டு நெல்லி மரத்திற்கு
மாறி மாறிப் பறக்கிறது.
இப்போது எங்கள் வீட்டில் நெல்லிமரமும்
எதிர்வீட்டில் கருவேப்பிலையும்
வளர்ந்துகொண்டு இருக்கிறது
மாறி மாறி.
                        - கல்யாண்ஜி.

Sunday, 17 November 2019

படித்ததில் பிடித்தவை (“பிரதீப் IV STD ‘B’ Sec” – சூர்யா சுரேஷ் கவிதை)


*பிரதீப் IV STD B Sec*

எனக்கு
ஆட்டோ வரும் முன்பே
உனக்கு
பேருந்து வந்துவிடுகிறதே
அம்மா...
ஒவ்வொரு நாளும்!

பள்ளியிலிருந்து
வீடு திரும்புகையில்
யாருமே இல்லாத வீட்டை
பார்க்கையில்...
எதுவுமே இல்லாததுபோல்
தோன்றுகிறது
எனக்கு.

இரவு ஒன்பது மணிக்குள்
எப்படியும் வந்துவிடும்
உன்னையும்,
பதினோரு மணிக்குள்
வந்துவிட முயற்சிக்கும்
அப்பாவையும்,
பள்ளிக்கூடத்தில்
நினைக்கையில்...
மங்கலாய்த்தான்
ஞாபகம் வருகிறது.

இப்போதெல்லாம்
டாம் அண்ட் ஜெர்ரியும்,
போகோ டிவியும்
புளித்துவிட்டது.
ப்ரிட்ஜ்ஜின்
ஸ்நாக்சும்,
செல்போனில்
உன் குரலும்
அலுத்துவிட்டது.

வரவேற்பறையினை
அலங்கரிக்கத் தெரிந்த
உனக்கு,
உன் ஸ்பரிசங்களுக்கு
ஏங்கும் என்னை
ஏனம்மா
புரிந்துக்கொள்ள
இயலவில்லை?

வீட்டு வேலைகளை
ஞாயிற்றுக்கிழமைகளுக்கு
தள்ளிப்போடும்
உன்னைப்போலவே,
ஏக்கங்களை
தள்ளிப்போட
எனக்கும் தெரிந்துவிட்டது.

அன்பான
வார்த்தைகளால்,
தற்காலிக தாயாகிவிடுகிறாள்
வேலைக்கார ஆயா...
அப்போதெல்லாம்
தோன்றுகிறது எனக்கு...
அவளுக்கே – நான்
பிள்ளையாகியிருக்கலாம்.

உன் பிள்ளையென
உணர்த்த – நான்
நன்றாக படிப்பதாய்
மார்தட்டுகிறாய்...
என் அம்மாவென
உணர்த்த
என்ன செய்யப்போகிறாய்
நீ..?

சூர்யா சுரேஷ்.

Wednesday, 6 November 2019

படித்ததில் பிடித்தவை (“கூகுள் குருவிகள்” – கீர்த்தி கிருஷ்… கவிதை)


*கூகுள் குருவிகள்*

இரவுப் படுக்கையில்
இதமாய் போர்த்திக்கொண்டு
சிட்டுக் குருவியின் கதையொன்றை
சொல்லத் தொடங்கினேன்
மகளிடம்…

கதை கேட்டவள்
காட்டச் சொல்கிறாள்
சிட்டுக் குருவியொன்றை
இப்போதே என்னிடம்…

நானோ
அன்று அம்மா வீசிய
குருணைகளுக்காய்
முற்றம் நிறைத்த குருவிகளை
இப்போது
தேடிக் கொண்டிருக்கிறேன்
கூகுளில்…

பாவம் குருவிகள்
கூகுளிலாவது
கூடு கட்டி
வாழ்ந்து விட்டுப் போகட்டும்…

அங்கிருந்தும் யாரும்
அழித்து விடாதீர்கள்
அவைகளை..!”

     - கீர்த்தி கிருஷ்...

Tuesday, 29 October 2019

படித்ததில் பிடித்தவை (“ஒத்த ரூபாய்” – துரை கவிதை)*ஒத்த ரூபாய்*


அய்யாஎன்ற அவலக்குரல்
அவசரமாய் வாசல் வந்தேன்.

கையில் குழந்தையோடும்
கண்கள் நிறைய பசியோடும்
தட்டு நிறைய எதிபார்ப்போடும்
சுட்டெரிக்கும் வெயிலில்
எட்டுவயது சிறுமி பிச்சை கேட்டு.

போ..! போ..!! என உரைத்து
புறங்கையால் இல்லையென மறுத்து
உரத்து கதவடைத்து
உள்ளே திரும்பினேன்.
உள்ளம் அதிர திடுக்கிட்டேன்..!

மூடிய கையில் ஒத்த ரூபாய் காசுடனும்
திறந்த கண்ணில் அதிர்ச்சியோடும்
எதுசரி என்ற குழப்பத்தோடும்
என் முகத்தில் எதையோ தேடியபடி
எதிரே என் குட்டிக் குழந்தை.

ஒரு நொடியில் உறைந்து போனேன்...
மறு நொடியே உடைந்தும் போனேன்...
நல்ல அப்பா என்ற உருவத்தை
நானே கலைத்துவிட்டேனா..?

குற்ற உணர்வில் மூழ்கிப்போனேன்.
குழந்தை முகம் பார்க்கவே இல்லை.

பலவற்றை இழந்திருக்கிறேன்
வாழ்க்கையில்
பதறியதே இல்லை.

ஒத்த ரூபாய் காசு தான்...
பல நாள்
தூங்கவே இல்லை..!


- துரை.

Sunday, 29 September 2019

படித்ததில் பிடித்தவை (“ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்…” – ‘கதிர் அவன்’ கவிதை)


ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்


ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

அடைமழையின்
குளிரோடு அது
ஒத்திருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

இரவின் பேரமைதியை
கொண்டு நிகழ்த்தப்பட்டதாக
அவை இருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

உறங்கிக்கிடக்கும்
குழந்தையை தழுவி செல்லும்
தாயின் மூச்சுக்காற்றை போல
அவை இருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

மறந்திட நினைத்திடும்
சில நினைவுகளை
விழிகளில் பதிய
செய்திட வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

மனம் சுமந்தலையும்
பாரங்களை இலகுவாக்கி
இருதயத்தை பறந்திட
செய்ய வேணடும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

ஒரு மலரின் வெடிப்போசையை
செவிகளுக்குள்
அறிய செய்திட வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

வண்ணத்துப்பூச்சியின்
கனத்தில்
உயிரில் தங்கியிருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

கொஞ்சம் உணரும்படி,
கொஞ்சம் உணர்ச்சி நிறைந்து,
கொஞ்சம் அதிசயத்து,
கொஞ்சம் ஆச்சர்யத்தோடு,
கொஞ்சம் அழகில் கலந்து,
கொஞ்சம் வலியை உணர்த்தி,
கொஞ்சம் கண்ணீரை வரவழைத்து,
கொஞ்சம் மனதினை வருடி,
கொஞ்சம் உயிரினை தீண்டி,
கொஞ்சம் சுவாசத்தில் நிறைந்து,
கொஞ்சம் விழிகளில் பதிந்து,
கொஞ்சம் வியப்பில் ஆழ்த்த வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

நீங்கள் படித்து கொண்டிருக்கும்
இந்த கவிதையை போலல்லாமல்
கவிதை கவிதையாக
இருந்திட வேண்டும்..!

- கதிர் அவன்.