எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 29 June 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை)


பயணம்...
“கிழிந்த
ரூபாய் நோட்டு
ஒன்று...

ஏமாற்றுக்காரர்களை
உருவாக்கிக்கொண்டே
செல்கிறது..!"

         -   (twitter.com/SENTHIL_WIN).

Friday, 26 June 2015

படித்ததில் பிடித்தவை (கவிஞர் மகுடேசுவரன் கவிதை)


நானும் அழுதேன்...
“பார்வையற்றவர்
நின்றுகொண்டிருந்தார்.

அவர் கண்களிலிருந்து
கண்ணீர் வடிந்தது.

சட்டைக் கீழ்முனையால்
கண்களைத் துடைத்தார்.

பார்வையிழந்தக் கண்களின்
நாமறியாப் பயனாக
உணர்ச்சிகளின் தூராத ஊற்றுகள்
வற்றாது சுரந்துக் கொண்டிருப்பதை கண்டேன்.

இறைமையின் நீர் வழிப் பாதைகளில்
அதுவுமொன்று என்று தோன்றிற்று.

ஏனோ
நானும் அழுதேன்."

                                      -   கவிஞர் மகுடேசுவரன்.

Sunday, 21 June 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை)


மருந்து
“எறும்பு மருந்து வாங்க
கடைவீதிக்குச் சென்றேன்
மகளுடன்.

ஏம்பா,
நம்ம வீட்டு எறும்புகளுக்கு
உடம்பு சரியில்லையா
என்று அப்பாவியாகக்
கேட்டாள்.

மருந்து வாங்காமல்
திரும்பிவிட்டோம்..!”

                                   -  தினேஷ்.

Friday, 19 June 2015

குட்டிப்பூனை


“எனக்கு பின்னே
வேகமாக பைக்கில்
வந்தவன்...

எனக்கு முன்னே
நடந்து வந்தவன்...

எல்லோருமே
மெதுவாகி போனார்கள்...

வேறு வழியின்றி
நானே முதலில்
தாண்டி சென்றேன்...

சற்றுமுன்
சாலையில்
குட்டிப்பூனை
குறுக்கே சென்ற
பாதையை..!”
     -     K. அற்புதராஜு.

Sunday, 14 June 2015

நகரத்து நட்பு...


‘அங்கிள்..! பந்து
உங்க வீட்டுக்குள்
விழுந்துவிட்டது...
எடுத்து கொடுங்க..!’

என உரிமையுடன்
கேட்டு வரும்
அடுத்த வீட்டு
குழந்தைகளில்
தொடங்குகிறது...

நகரத்தில்
நம் வீட்டுக்கும்
அடுத்த வீட்டுக்குமான
நட்பு..!

 - K. அற்புதராஜு.

Wednesday, 10 June 2015

ஒரு இலையின் இறுதிப்பயணம்...


“மரத்தில் தாவி தாவி
செல்லும் அணில்...

அணில் கால் பட்டு
கிளையிலிருந்து
விடுபட்டது பழுத்த இலை...

பழுத்த இலை மெல்ல
காற்றில் மிதந்து மிதந்து
தனது இறுதி பயணத்தின்
முடிவில் தொட்டது மண்ணை...

மண்ணில் விழும் இலையை
பாவ உணர்ச்சியோடு
நானும்...
குற்ற உணர்ச்சியோடு
அணிலும்...
பார்த்துக்கொண்டிருந்தோம்..!”

           -  K. அற்புதராஜு.

Thursday, 4 June 2015

அப்படி பார்த்தார்கள்..!


“கோடை விடுமுறைக்கு
கிராமத்திலிருந்து
நகரத்துக்கு வந்த
உறவினர்கள்
ஊர் திரும்பும் போது...

நகரத்து குடும்பமே
வழியனுப்ப வந்து
பஸ் ஏற்றி கையசைத்து
சந்தோசமாக அனுப்பி வைத்தது...

கிராமத்துடன் தொடர்பில்லாத
நகரத்துப் பயணிகளை சற்றே
ஆச்சர்யப்பட வைத்திருக்கும் போல...
அப்படி பார்த்தார்கள்..!”

    -     K. அற்புதராஜு.