எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 31 May 2021

படித்ததில் பிடித்தவை (“கடைசிச் சந்திப்பு” – மகுடேசுவரன் கவிதை)


*கடைசிச் சந்திப்பு*

 

எவருடன் என்றாலும்

வழக்கமான சந்திப்பே என்றாலும்

பிரியும்போது

சற்றே தொலைவில்

நின்று திரும்பி

அவரைப் பார்த்துச் செல்லுங்கள்.

 

முன்னெப்போதுமில்லாமல்

நிலையாமை

தலைவிரித்தாடும் இவ்வுலகில்

அதுவே பலருக்குக்

கடைசிச் சந்திப்பாகிவிடுகிறது..!

 

*மகுடேசுவரன்*




Sunday 30 May 2021

படித்ததில் பிடித்தவை (“பேரின்பம்” – மகுடேசுவரன் கவிதை)

 


*பேரின்பம்*

 

யார் வேண்டுமானாலும்

எழுதலாம்

காவியம் படைக்கலாம்.

 

ஆனால்

தன் பேத்தியிடம்

கற்றுக்கொண்டு

கையெழுத்திடுகின்ற

பாட்டி

அடைந்த பேரின்பத்தை

யாரும் அடைய முடியாது..!

 

*மகுடேசுவரன்*



Saturday 29 May 2021

படித்ததில் பிடித்தவை (“இழிவு” – பாலபாரதி கவிதை)



*இழிவு*

 

எவரிருத்தலையும் உணராது

எல்லார் முன்னிலையிலும்

மேல் சட்டை கழற்றி

பனியனை உதறி

கைகளுக்குள் புகுந்து

தொப்பை தடவி

கால் மீது கால் போட்டமர்ந்து

உரக்க பேசி சிரிக்கும்

ஆண்களின் பயணம்

தொடர்கிறது.

அப்போதெல்லாம்

தலை குனிந்து

நகம் கடித்து

புத்தகம் தேடுவது போல்

பாவனை செய்து

பார்வையை வெளியேற்றி

சமூக அடிமையாய்

ஒடுங்கச் செய்கிறது

பெண் பயணிகளை..!

 

*பாலபாரதி*

{சில பொய்களும் சில உண்மைகளும் 

– கவிதை தொகுப்பிலிருந்து}





Friday 28 May 2021

படித்ததில் பிடித்தவை (“தாமத வலி” – ஆண்டன் பெனி கவிதை)

 


*தாமத வலி*

 

அம்மாவின் ஒரேயொரு இருமல்

இரண்டு மூன்றாகத் தொடர்கிறது...

அருகில் சென்று

தலையை ஆறுதலாகப்பற்றி

என்னம்மா..? என்றதும்

ஒண்ணுமில்லப்பா... இப்ப

சரியாகிடுச்சி என்கிறார்.

முதல் இருமலிலேயே

நான் கேட்டிருக்கலாம்...

எத்தனையோ வலிகளைத் தந்துவிடுகிறது

தாமதமாகும் ஒற்றை ஆறுதல்..!

 

*ஆண்டன் பெனி*



Thursday 27 May 2021

படித்ததில் பிடித்தவை (“இயலாமை” – கீர்த்தி கவிதை)

 


*இயலாமை*

 

அவன் செதுக்கிவைத்த

எல்லா சிலைகளும்

அடிக்கடி வந்து

மண்டியிட்டு நன்றி தெரிவிக்கின்றன

சிற்பியின் முன்.

கோடி முறை வந்தனம்

என்கின்றன.

பாறைகளின் உள்ளிருந்த தங்களை

உயிர்ப்பித்தது குறித்து

தாயென்றும் தந்தையென்றும்

தன்னை அழைக்கும்

சிற்பங்களின் முன்

அவனும் கர்வப்பட்டுக்கொள்கிறான்

கற்களின் கல்பத்தில்

தானே பிரம்மன் என்று.

 

மூலையில்

முடங்கிக்கிடக்கின்ற

கையொடிந்த சிற்பம் ஒன்று

எப்போதாவது

வேண்டுகோளிடுகிறது

தன்னை மீண்டும் பழைய வடிவில்

பாறையாக்கிவிடும்படி.

யாரும் அறியாதபடி

மண்டியிடுகிறான் சிற்பி..!

 

*கீர்த்தி*


Wednesday 26 May 2021

படித்ததில் பிடித்தவை (“கடவுளின் புனைபெயர்” – பி.வேல்முருகன் கவிதை)

 


*கடவுளின் புனைபெயர்*

 

கிராமத்துக்கு வந்த நகரத்திடம்

இப்படி அர்த்த ராத்திரியில்

தனியாளா வரக் கூடாது.

சாமி வேட்டைக்குப் போற நேரம்

ஆளைப் பார்த்தா அடிச்சிடும் என்றதாம்.

ஓ... இதுக்கு உங்க ஊர்ல

சாமின்னு பேரா?

நாங்க ரௌடின்னு சொல்வோம்

என்றதாம் நகரம் அதுக்கு..!

 

*பி.வேல்முருகன்*


Tuesday 25 May 2021

படித்ததில் பிடித்தவை (“அவளின் பறவைகள்” – க.அம்சப்ரியா கவிதை)

 


*அவளின் பறவைகள்*

 

தன்னுடைய மரத்தில்

பறவைகள் வந்தமருமாவென்று

ஆச்சர்யமாய் கேட்டாள் சிறுமி அதிஸ்யா.

இதன் பூக்கள் எத்தனை அழகென்று

தானே வியந்துகொண்டாள்.

பழங்களைப் பறித்து

எல்லோருக்கும் பசியாற்றினாள்.

இதன் நிழலில் இளைப்பாறலாமென்று

தன் மழலைச் சொற்களால்

எல்லோருக்கும்

அறிவித்துக்கொண்டிருந்தாள்.

இறுதியில் தூக்கம் கண்களைச் சுழற்ற

தான் வரைந்த மரத்தை

தலையணைக்கடியில் பத்திரப்படுத்தினாள்.

ஒரு தோட்டத்தை ஏந்திக்கொண்டு

உலா வரத் தொடங்கிற்று இரவு..!

 

*க.அம்சப்ரியா*

Monday 24 May 2021

படித்ததில் பிடித்தவை (“அம்மன் வீதி உலா” – காசாவயல் கண்ணன் கவிதை)

 


*அம்மன் வீதி உலா*

 

வீதிப்பெண்களுக்கு

அம்மன் வீதி உலாவென்றால்

அலாதிப் ப்ரியம்.

மனசின் ஆசையெல்லாம்

குழைத்து மாக்கோலம் தீட்டுவார்கள்.

இன்று எந்த வாகனத்திலென்று

தவிப்போடு

தெருமுக்குவரை தேடுவார்கள்.

அருகே வந்ததும்

உருகித்தான் போவார்கள்.

சிங்க வாகனத்தில் அம்மன்கூட

மங்கலாய்த்தான் தெரிவாள்

பிரியமானவர்களின்

பவனி கடக்கும்வரை..!

 

*காசாவயல் கண்ணன்*



Sunday 23 May 2021

படித்ததில் பிடித்தவை (“மாலையில் யாரோ...” – மு.மகுடீசுவரன் கவிதை)


 *மாலையில் யாரோ...*

 

சுமதி அக்காவுக்கு

மாலையில் யாரோ மனதோடு பேச

பாடல் ரொம்பப் பிடிக்கும்.

எப்போதும்

முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள்.

அவள் கல்யாணக் கேசட்டில்கூட

சின்னு மாமாவிடம் சொல்லி

முகூர்த்தப் பின்னணியில்

இந்தப் பாடலைத்தான் பதியச் சொன்னாள்.

இது யாரு பாட்டுக்கா என்றால்

பானுப்ப்ரியா பாட்டு என்பாள்.

 

சுமதி அக்காவை பின்னாளில்

சந்தித்தப்போது

பேச்சுவாக்கில்

இதே பாடலை நினைவுகூர்ந்து

இது யாரு பாட்டுன்னு

நினைவிருக்கா என்றேன்.

இளையராசா பாட்டு என்றாள்.

 

சமீபத்திய சந்திப்பில்

விளையாட்டாய்

இதே பாடலை பாடச் சொல்லிக் கேட்டேன்.

சிரித்தபடியே பாடியவள்

இது ஸ்வர்ணலதா பாட்டு தெரியுமா என்றாள்.

தெரியாது என்றேன்.

 

மாலையில் யாரோ... எப்போதும்

எனக்கு சுமதி அக்கா பாட்டுதான்..!

 

*மு.மகுடீசுவரன்*