எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 27 September 2015

மதம் பிடித்த பைக்


“சற்றே கஷ்டப்பட்டுதான்
எடுக்க வேண்டியிருந்தது
மக்கா-மதீனா ஸ்டிக்கரை
ரஹ்மானிடமிருந்து வாங்கிய
அந்த பைக்கிலிருந்து...

எனக்கான இஷ்ட தெய்வம்
பிள்ளையார் ஸ்டிக்கரை
ஒட்டியப்பின் இரண்டு
மாதம்தான் இருந்தது
அந்த பைக் என்னிடம்...

வாங்கிய பீட்டர்
பிள்ளையாரை எடுத்து விட்டு
இந்நேரம் ஒட்டியிருப்பார்
வேளாங்கண்ணி மாதாவை..!”

     -     K. அற்புதராஜு.

Wednesday, 23 September 2015

படித்ததில் பிடித்தவை (பின்தொடர்தல் – தேவதச்சன் கவிதை)


பின்தொடர்தல்
என் தோட்டம் எங்கும்
ஏகப்பட்ட
ஒடிந்த செடிகள்
சாய்ந்த செடிகள்
ஒரு சிறு ண்த்துப்பூச்சி
அதை
நிமிர்த்தி வைத்தபடி
நிமிர்த்தி வைத்தபடி
செல்கிறது

எனக்கு அதை
பின் தொடர வேண்டும் போல்
இருக்கிறது…”                    
              - தேவதச்சன்.[இந்தக் கவிதையிலிருக்கும் மூன்று சொற்கள் வாசிப்பில் மோதுகின்றன. தோட்டம், செடிகள், வண்ணத்துப்பூச்சி. இவை அகராதியிலிருக்கும் பொருளில் அல்லது அறிவியல் சுட்டும் பொருளில் இல்லை. ஆனால் கவிதைக்குள்ளிருக்கும் வண்ணத்துப்பூச்சி செடிகளை நிமிர்த்தி வைத்தபடி, நிமிர்த்தி வைத்தபடி பறக்கிறது. பழக்கமான வண்ணத்துப்பூச்சியை நமது நினைவிலிருந்து அழித்துப் புதிய வண்ணத்துப்பூச்சியைக் கவிஞன் கொண்டுவருவதே இங்கு கவிதை.

கவிதை எப்போதும் எழுதாத பொருளையே பேசுகிறது. எழுதப்பட்ட வார்த்தைகளைத் தாண்டியே கவிதை இருக்கிறது. வார்த்தைகளின் வாயில்களைத் தாண்டும்போது புதிய வெளியொன்று காட்சியாகி விரியத் தொடங்குகிறது. கவிதையை வாசித்த பின்பு முன்பு துண்டிக்கப்பட்ட உலகத்தோடு மீண்டும் இணைகிறோம். புதிய இணைப்பு ஒரு வெளிச்சமாக மனதில் பரவுகிறது. வெளிச்சமாக வாசனையாக மனதில் பரவுவதே கவிதையின் வேலை.

ஒடிந்த சாய்ந்த செடிகளை நிமிர்த்தி வைத்தபடிச் செல்கிற வண்ணத்துப்பூச்சியை யாரும் பின்தொடரவே செய்வார்கள். நம்பிக்கை தருகிற எதுவும் மிக முக்கியமானது. மனம் கண்டடைந்த ஏதோ ஒன்று இத்தகைய மாயம் செய்கிறது. நவீன கவிதை ஒன்றை வாசித்து முடித்த பிறகு வார்த்தைகளுக்கு வேலையே இல்லை. வார்த்தைகள் வெளியேறிவிடுகின்றன. மனம் உணர்தலின் தளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. படைப்பின் ரகசியம், உருவம் மறைத்து தனது பேரழகின் துளியைத் தெறித்தபடி இருக்கிறது. கவிதையின் படைப்பாக்கச் செயல்பாடுதான் அந்தக் கவிஞனின் சுயம்.

கவிதைக்கு முந்தைய கணங்களின் மனவினைதான் கவிதையின் எழுத்து. வார்த்தைகளின் ஊடாகத் தன்னைப் பார்க்க முயல்கிறது கவிதை. வார்த்தைகள் பயனற்ற இடத்தில் வாசகனைத் தனது பிரத்யேக வார்த்தைகளின் மூலம் அணுகுகிறது கவிதை.


ஒரு கவிதையைப் பின்தொடர்வது... - க. வை. பழனிசாமி        (தி ஹிந்து, 13.09.2015)].


                        *** * ***

Sunday, 20 September 2015

படித்ததில் பிடித்தவை (அந்த நாட்கள் - கவிதை)


அந்த நாட்கள்
அந்த மூன்று நாட்களில்
கோயிலுக்குள் செல்வது
தீட்டாகவே இருக்கட்டும்...

எந்த மூன்று நாட்களில்
பெண் தெய்வங்கள்
கோயிலுக்குள் இருக்காதெனக்
கொஞ்சம் சொல்லுங்களேன்..?”

                          - க. பொன்ராஜ்.

Thursday, 17 September 2015

படித்ததில் பிடித்தவை (அப்பா – கனிமொழி கவிதை)


அப்பா

“சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா.

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது.

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது.

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது.

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது.

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது.

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?
                                
                                -  கனிமொழி.


[தேக்கா நிலையம் (Tekka Centre) என்பது சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பேரங்காடி. இதில் உணவகங்களும், பிற கடைகளும் உள்ளன.]

Sunday, 13 September 2015

படித்ததில் பிடித்தவை (விதி – கலாப்ரியா கவிதை)


விதி
“அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது...

எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை..!”

                                             -  கலாப்ரியா.

Wednesday, 9 September 2015

படித்ததில் பிடித்தவை (அந்த மழையில்... - கவிதை)


அந்த மழையில்...

“அந்த மழைநாளில்
மிகப்பெரிய ஆச்சர்யமொன்று
நடந்தது.

மொட்டை மாடியில்
காய்ந்த துணிகளை
அவசர அவசரமாக
அள்ளியெடுக்க விரைந்தபோது
அவளைப் பார்க்க நேர்ந்தது.

எதிர் வீட்டின் மொட்டை
மாடியில் இரு கைகளையும்
அகல விரித்தபடி
வானம் பார்த்து
நின்றிருந்தாள்.

அச்சிறுமியை இதற்கு
முன்னும் பார்த்திருக்கிறேன்
இன்றவள் புதிதாய்த் தெரிந்தாள்.

விரித்த இரு கைகளாலும்
ஏந்தி ஏந்தி எறிந்து
கொண்டிருந்தாள் மழைத்துளிகளை.

அவ்வப்போது ஒரு
அரை வட்டமடித்து
மழையின் அனைத்துத்
துளிகளையும்
மேனியெங்கும் வாங்கிக்
குதூகலித்தாள்.

இப்பெரு நகரத்தில்
இது பேராச்சர்யம் எனக்கு...

ஒரு கணம்
அவளாகியிருந்தேன் நான்.
என் பதினைந்து வருடங்களைப்
பின் தள்ளிவிட்டு.

மழை இரைந்துகொண்டே
இருந்தது.
குக்கர் விசில் சத்தம்
என்னைப் பதட்டப்படுத்த
அவசரமாகப் படியிறங்கினேன்.

அவளின் சிறு குழந்தைமையை
எக்கணத்திலும் நிராகரித்துவிடாத
புகுந்தவீடொன்று அமைய வேண்டுமென்ற
அவளுக்கான பிரார்த்தனைகளோடு...”

                                             - இரா.பூபாலன்.

Saturday, 5 September 2015

புன்னகைகள் விற்கப்படுகின்றன... சில நேரங்களில்...


“ஒருவரை எதிரே
பார்க்கும்போது
புன்னகைக்கும் நாம்
அவரைப்பற்றிய
எண்ணங்களில் மூழ்கி
கூகுள் தேடலில்
புன்னகைக்கும் நேரத்தை
நிரனைக்கிறது மனசு..!

பிடிக்காதவர் என்றால்
அவரை கடந்ததும்
புன்னகை மாறி
முகம் கடுகடு...

கொஞ்சம் பிடித்தவரானால்
கொஞ்ச நேரப் புன்னகை...

மிகவும் பிடித்தவரானால்
நிறைய நேரம்
அவர் நினைவுகளில்
மனசுக்குள் த்தாப்பூ
சில நேரங்களில்...
நாள் முழுவதும் கூட..!”

-     K. அற்புதராஜு.