எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 30 April 2022

படித்ததில் பிடித்தவை (“தேடல்” – வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் கவிதை)

 


*தேடல்*

 

ஏதோ தேடலுக்காக

தொலைவு தொலைவு போகிறோம்.

தேடலின் சுழலில் சிக்கி

தொலைந்தும் போகிறோம்.

என்றாவது முற்றுப்பெறலாம்

நம் தேடலோ

நமக்கான தேடலோ..!

 

*வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்*


Friday 29 April 2022

படித்ததில் பிடித்தவை (“கனிவு” – கல்யாண்ஜி கவிதை)

 


*கனிவு*

 

அந்த வயலினுக்கு வயதாகியிருந்தது.

பழுதாகவே இல்லை நரம்புகள்.

அந்த வயலின் வாசிப்பவர்

வயோதிகர் ஆகியிருந்தார்.

பழுதாகவே இல்லை விரல்கள்.

இப்போது நாம்

புசித்துக்கொண்டிருப்பது...

ஒரு கனிந்த மரத்தின்

கனிந்த கிளையின்

கனிந்த இசையை..!

 

*கல்யாண்ஜி*




Thursday 28 April 2022

படித்ததில் பிடித்தவை (“பெருந்தொலைவு” – மகுடேசுவரன் கவிதை)


*பெருந்தொலைவு*

 

வலிக்காதா

பறவைக்கு..?

 

இரு மரங்களுக்கிடையில்

பெருந்தொலைவு..!

 

*மகுடேசுவரன்*




Wednesday 27 April 2022

படித்ததில் பிடித்தவை (“பறவையின் மரம்” – நேச மித்ரன் கவிதை)

 


*பறவையின் மரம்*

 

மீண்டும் மீண்டும்

அதே கிளையில்

அமர்கிறது பறவை.

அப்படி என்ன செய்து விட்டது

மரம்..?

தாங்கத் தெரிந்திருக்கிறது..!

 

*நேச மித்ரன்*

Tuesday 26 April 2022

படித்ததில் பிடித்தவை (“யாரோ” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*யாரோ*

 

மலையுச்சிக்கு வந்து

மலையோடு

ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டு

செல்போனைக் கீழே வைத்துவிட்டு

மெல்ல மூச்சை

உள்ளிழுத்து வெளிவிட்டு

குதித்துவிட்டான்.

 

சற்று நேரம் கழித்து

மேலேறி வந்த பெரியவர்

வியர்வையைத் துடைத்து

செல்போனைக் கையில் எடுத்து

சுற்றும் முற்றும் பார்த்துச் சொல்கிறார்

யாரோ மறந்து வச்சிட்டுப் போயிட்டாங்க…’

 

யாரோ வச்சிட்டுக் குதிச்சிட்டாங்க…’

நடுக்கத்துடன் மலை சொன்னது

அவருக்குக் கேட்கவில்லை..!

 

*ராஜா சந்திரசேகர்*



Monday 25 April 2022

படித்ததில் பிடித்தவை (“யாருக்கு பெரிய மனசு?” – செ.புனிதஜோதி கவிதை)



*யாருக்கு பெரிய மனசு?*

 

“விதவிதமா

சாமிக்கு பூக்கட்டி விக்கும் பூமாரிக்கு

ஒருமுழம் பூ

தலையில் ஏறாம

பார்த்துக்கிட்ட..

கடவுளுக்கு தான்

எம்புட்டு பெரிய மனசு..

 

 

ஆனாலும்

விடாம... பூமாரி

ஒருமுழம் பூவ

சாமி படத்தில வைச்சுட்டுத்தான்

வியாபாரத்தையே தொடங்குறா..!

 

*செ.புனிதஜோதி*


 

Sunday 24 April 2022

படித்ததில் பிடித்தவை (“மூதாட்டி” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மூதாட்டி*

 

ஆளரவமற்ற இடத்தில்

ஆலயத்தின் மூலையில்

இமைமூடி

தவம்போல் அமர்ந்திருக்கும்

மூதாட்டியின் கண்களிலிருந்து

வழிகிறது நீர்.

அவள் மேல்

அசைகிறது ஒளிக்கீற்று.

பெருவயதுக்காரி

கண் திறக்கும்போது

பிரபஞ்சம்  சிறிதேனும்

பேரன்பைத் தரக்கூடும்..!

 

*ராஜா சந்திரசேகர்*



Saturday 23 April 2022

படித்ததில் பிடித்தவை (“நாயகம்” – ஞானக்கூத்தன் கவிதை)

 


*நாயகம்*

 

மனிதர் போற்றும் சாமிகளில்

ஒற்றைக் கொம்பு கணபதியை

எனக்குப் பிடிக்கும். ஏனெனில்

வேறெந்த தெய்வம் வணங்கியபின்

ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க..?

 

*ஞானக்கூத்தன்*




Friday 22 April 2022

படித்ததில் பிடித்தவை (“மிச்சம் உள்ள ஆவி” – ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதை)

 


*மிச்சம் உள்ள ஆவி*

 

திருநெல்வேலி

டவுணில்

சந்திப்பிள்ளையார் முக்கின்

இடதுபுறம்

உள்ளடங்கி இருக்கும்

கல்லூர் பிள்ளைக் கடையில்

பின்னரவில்

பரிமாறப்படும்

இட்லியை விள்ளும்போது

ஆவி இப்போதும் வெளியேறுகிறது

இட்லியில் ஆவியைப் பார்த்து

ரொம்ப நாளாகி விட்டது

ஆவிகள் என்று சொன்னால்

அர்த்தம் விபரீதமாகி விடும்

இருந்தும்

திருநெல்வேலியின்

ஆவி

இட்லியில் மிச்சம் இருப்பதாகச்

சொல்லிக் கொள்ளலாம்..!

 

*ஷங்கர்ராமசுப்ரமணியன்*



Thursday 21 April 2022

படித்ததில் பிடித்தவை (“உணவு மேஜை” – ஞானக்கூத்தன் கவிதை)

 


*உணவு மேஜை*

 

ஓவியத்தில் தெரியும் சுடரைப் பார்த்துத்

தியானத்தில் உட்கார்ந்திருந்தார் சு.ரா

மௌனி சுசீலா உள்ளே நுழைந்தார்

சு.ரா.மனைவியைக் கூப்பிட்டு

இருவருக்கும் தோசை வார்க்கச் சொன்னார்

திருமதி சு.ரா. வியந்தார்

மௌனி ஒருவர்தான் இருந்தார்

இவரோ இருவர்க்கும் என்கிறார்

சு.ரா.வீட்டு சப்போட்டா மரத்தைப்

பார்த்துக் கொண்டே

மௌனி வெளியே போனார்

அவர் போன கையோடு

நகுலன் சுசீலாவோடு உள்ளே நுழைந்தார்

அப்போதும் தியானத்தில் இருந்தார் சு.ரா.

ஆனால் சு.ரா. மனைவியைக் கூப்பிட்டார்

இருவர்க்கும் தோசை வார்க்கச் சொன்னார்

திருமதி சு.ரா. இப்போதும் வியந்தார்

நகுலன் ஒருவர்தான் இருந்தார்

இவரோ இருவர்க்கும் என்கிறார்

தன் வீட்டில் மரத்தில் போல

சு.ரா. வீட்டு சப்போட்டா மரத்தில்

வாழும் பாம்பு இருக்குமோ என்று பார்த்தார்

பின்பு நகுலன் வெளியே போனார்

சு.ரா. எழுந்தார்

உணவு மேஜையைப் பார்த்தார்

அங்கே ஒருவரும் இல்லை..!

 

*ஞானக்கூத்தன்*