எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 31 October 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


அன்பின் விலைகள்
“எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.
சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன்
திரும்பிப் பார்த்துத் தயங்கி
அழாதிங்க என்றான்.
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு
எட்டு ரூபாய் சில்லறை
எண்ணிக் கொடுத்துவிட்டுச்
சென்று விட்டான்.

அந்த மீதி சில்லறையாவது
வாங்காமல் விட்டிருக்கலாம்..!”

                             -  அனிதா ஜெயக்குமார்.

Thursday, 30 October 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


ஆறாத சொல்..!
“உனக்கென்ன
ஒரு சொல்
வீசிவிட்டுப் போகிறாய்...

இதயச் சுவர்கள் அறுபட்டு
வேர்கள் தளர்ந்து
உற்சாகக் கிளைகள் ஒடிந்து
சுவாசத்தின் தடம் புரண்டு
வெற்றுடல் சுமந்து
கண்ணீர் தவிர்க்கவே
மௌனம் காக்கிறேன் நான்!

நீயே மாலையில்
மென் விரல்கள் பற்றி
புது சிநேகம் வளர்த்து
மன்னிக்கவும் வேண்டுகிறாய்...

கடந்து போகிறது 
நம் வாழ்க்கை
சொற்களைச் சுமந்த வடுக்களுடன்
என் மனமும்...

மன்னிப்பைச் சுமந்த வடுக்களுடன் 
உன் தோள்களும்..!”

                                                          -  பிரேமபிரபா.

Wednesday, 29 October 2014

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்1. புதுமைப்பித்தன் மனித இயந்திரம் 
2. கு.ப.ராஜகோபலன் விடியுமா? 
3. தி. ஜானகிராமன் சிலிர்ப்பு  
4. கு. அழகிரிசாமி அன்பளிப்பு 
5. சுந்தர ராமசாமி பிரசாதம் 
6. கிருஷ்ணன் நம்பி மருமகள் வாக்கு 
7. அசோகமித்திரன் புலிக்கலைஞன் 
8. தங்கர்பச்சான் குடி முந்திரி 
9. பிரபஞ்சன் மீன் 
10. திலீப்குமார் கடிதம் 
11. வண்ணநிலவன் எஸ்தர் 
12. ஜெயமோகன் பல்லக்கு 
13. வண்ணதாசன் நிலை 
14. ஆ. மாதவன் நாயனம் 
15. பாமா அண்ணாச்சி 
16. நாஞ்சில் நாடன் வாக்குப் பொறுக்கிகள் 
17. சுஜாதா மகாபலி 
18. இந்திரா பார்த்தசாரதி அசலும் நகலும்
19. இரா. முருகன் உத்தராயணம்
20. கிருஷ்ணமூர்த்தி மனிதர்கள்
21. லா.ச.ரா. கொட்டு மேளம்
22. ரா.கி. ரங்கராஜன் செய்தி
23. ராஜம் கிருஷ்ணன் மாவிலைத் தோரணம்
24. ராமசந்தர வைத்தியநாதன் நாடகக்காரர்கள்
25. சிவசங்கரி செப்டிக்
26. சோ. தருமன் நசுக்கம்
27. சுந்தர பாண்டியன் கனவு
28. சு. சமுத்திரம் நான்காவது குற்றச்சாட்டு
** ** ** ** **

[நன்றி: http://siliconshelf.wordpress.com]

Tuesday, 28 October 2014

படித்ததில் பிடித்தவை (கலாப்ரியா கவிதை)


“திறந்து மூடி திறந்து மூடி
மேய்ப்பனின்
பொழுதுபோக்கிய
தொட்டாற்சிணுங்கி
கடைசியாய் விரித்தபோது...

தூரத்துப் புற்கள்
தேடிப் போயிருந்தனர்
பசுக்களும், மேய்ப்பனும்..!”

                                                  -  கலாப்ரியா.

Monday, 27 October 2014

வெங்காய வெடி


“தீபாவளி முடிந்த
வாரத்தின்
வெள்ளிக்கிழமை.
அலுவலகம் முடிந்து
நகரத்திலிருந்து புறநகர்
நோக்கிய பயணம்
அலுவலக நண்பரின்
இருசக்கர வாகனத்தில்...

வீட்டுக்கு சீக்கிரம்
போகும் எண்ணத்தில்
சிக்னல்களை தவிர்த்து
மாற்று வழிகளில்
சென்றும்...

குறுகலான சந்தில்
ஒரு சிறுமியால்
ஐந்து நிமிடங்கள்
நிறுத்தப்பட்டோம்
வெடிக்காமல் 
புஸ்ஸ்...என்ற
வெங்காய வெடிக்காக..!”

                                   
                             -  K. அற்புதராஜு.

Saturday, 25 October 2014

படித்ததில் பிடித்தது (எழுத்தாளர் சுஜாதாவை பற்றிய கட்டுரை)


ஜாகரண்ட பூக்கள் - சுஜாதா தேசிகன் (25.02.2011).

17.11.2006 அன்று எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்... (ஒலிப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து)

"நடு ராத்திரி ஒருத்தர் வந்து கதவை தட்டி ஒரு கதையை கொடுத்து இதில என்ன தப்பு சொல்லுங்க... நீங்க எழுதற குப்பைய எல்லாம் போடறாங்க.. எவ்வளவோ முறை நான் எழுதி திரும்ப வந்துவிட்டது" என்றார்.

அந்தக் கதையைப் படித்த போது, அது ஒரு காலேஜ் காதல் கதை.

"எந்த காலேஜ்?" என்று கேட்டேன். ஏதோ பேர் சொன்னான்.

"சரி அந்த காலேஜுல நுழையும் போது, என்ன இருக்கும்?"

"என்ன... உள்ளே போகும் போது மரங்கள் எல்லாம் இருக்கும்"

"சரி அந்த மரத்துக்கு பேர் என்ன ?"

"அதெல்லாம் தெரியணுமுங்களா ?"

"ஏம்பா, நீ தினமும் ஒரு காலேஜ் போற. அந்த மரத்தை எப்பவாவது நிமிர்ந்து பார்த்திருக்கியா? என்ன மரம்னு கூட சொல்ல முடியலை. அந்த Detail இல்லைன்னா நீ எப்படி எழுத்தாளன் ஆறது?"

"ஏங்க நீங்க கூட நிறைய கொலை கதை எழுதியிருக்கீங்க. நீங்க என்ன கொலையா செய்திருக்கீங்க?" என்றார்.

என்னால பதிலே சொல்ல முடியலை.தி.ஜானகிராமன் சொல்லுவார்.. ஒரு தடவை டெல்லியில் Barakhamba சாலையில் போய்கொண்டு இருந்த போது இரண்டு பக்கமும் சோலை போல மரங்கள். தி.ஜா என்னிடம் கேட்டார், "நீ எப்பவாவது நிமிர்ந்து மேலே பார்த்திருக்கியா? அந்த மரம் பேர் தெரியுமா?"

He was very precise and was remembering every tree. அதனாலதான் அவருடைய கதைகளில் அவ்வளவு டிட்டேய்ல் இருக்கும். எனக்குக் கூட மரங்களை அடையாளம் காணமுடியும். சங்ககாலப் பாடல்களை பார்த்தால் எல்லா மரமும் இருக்கும். What is important is that look at nature and know something.

அப்படித்தான் பெங்களூரில் இருக்கும் போது... நீங்க கூட பார்த்திருப்பீங்க, ஒரே நாள்ள பூக்கும்.. அதன் கலர் கூட

"மோகலர்..."

"ஆமாம் மோகலர்.. Have you seen it? பேர் தெரியுமா?"

"பார்த்திருக்கேன், பேர் தெரியாது... ஆனா நீங்க 'இருள் வரும் நேரம்' கதையில முதல் பாராவில அதை பத்தி எழுதியிருப்பீங்க"

"Exactly"

"அதனுடைய பேர் Jakaranda. அந்தப் பூவோட பேர் எனக்கு எப்படி தெரிஞ்சதுன்னா-- ஒரு வெளிநாட்டுகாரர் வந்திருந்தார். அவருடைய பேர் Thomas Dish. He was a science fiction writer. அவர் இந்தப் பூவை பார்த்திட்டு, இது என்ன 'பூ'ன்னு கேட்டார். எனக்குத் தெரியலை, அப்பறம் எங்கல்லாமோ தேடி கடைசியில Botany Professor கிட்ட கேட்டு அதன் பெயர் Jakaranda அப்படீன்னு கண்டுபிடிச்சோம். He then wrote a small Haiku like கவிதை. அந்த கவிதை எனக்கு இன்னும் கூட நினைவு இருக்கு

இந்த ஜாகரண்ட மாதிரி பூக்கள், மரங்கள் பேர்களை எல்லாம் தெரிஞ்சுக்கணும். நீங்க கூட என்னுடைய எழுத்துல பார்க்கலாம், ஒரு விஷயம் தெரியலைன்னா அதன் டீட்டெய்ல் தெரியும் வரை வெயிட் பண்ணுவேன். This is one of the secrets of writing. யாரிடமாவது கேட்பேன், இல்ல தேடுவேன்... இப்ப ரொம்ப சுலபம்

"கூகிள் இருக்கிறது"


"(சிரிப்பு) ஆமாம்"

** ** ** ** **


2003 ஆம் ஆண்டு ஒரு சனிக்கிழமை சுஜாதா அவர்களைப் பார்த்த போது, "நேற்று ஒரு கதை எழுதினேன், கொஞ்ச நேரத்துல கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டது" என்றார். ஸ்ரீரங்கத்துக் கதைகளில் கடைசி கதையான "மாஞ்சு" என்ற கதை அது.

"சில கதைகளில்தான் இந்த மாதிரி அனுபவம் கிடைக்கும். நாம ஒன்றுமே செய்ய வேண்டாம் அதுவா எழுதிக்கொள்ளும். அப்படி எழுதப்பட்ட கதைகள் எல்லாம் நல்ல கதைகளாக இருக்கும்" என்றார்.

"கதையை சொல்லாதீங்க விகடனில் வரும் போது படித்துக்கொள்கிறேன்" என்றேன்.

அடுத்த வாரம் அவரைச் சந்தித்த போது விகடனில் அந்தக் கதையை கொஞ்சம் எடிட் செய்து தரச் சொல்லிவிட்டார்கள். 2-3 பக்கம் அதிகமா இருக்காம். சின்னது செய்து அனுப்பியிருக்கேன். ஆனா புத்தகமா வரும் போது முழுக் கதையும் போட வேண்டும்" என்றார்.

மாஞ்சு அவர் எழுதிய கடைசி கதை என்று கூட சொல்லலாம். மாஞ்சுவிற்கு பிறகு 7-8 கதைகள் எழுதியிருப்பார் ஆனால் இது கிளாசிக். ஆண்டாள் என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்து, இளம் வயதில் விதவையாகி, இரண்டு பையன்கள் அதில் மூத்தவன் படிப்பு இல்லாமல், கல்யாணம் ஆகாமல்... இளையவன் புத்திசாலி; நன்கு படித்து அமெரிக்கா சென்று... என்று கதை செல்லுகிறது கடைசியாக ஆண்டாள் எடுக்கும் முடிவு என்பது படிக்கும் நமக்கு என்னவோ செய்யும்.

விகடனில் அந்தக் கதையைப் படித்துவிட்டு சுஜாதா அவர்களிடம் இந்த கதையின் முடிவை முன்பே முடிவு செய்து எழுதினீர்களா என்றேன். "இல்லப்பா, எழுதும் போது கடைசியில் அதுவே முடித்துக்கொண்டது" என்றார்.

நமக்கு பிடித்த கதை எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலனவருக்கு பிடிக்கலாம் என்று சொல்லலாம். இருவத்தைந்து வயது உடைய ஒருவருக்கு மாஞ்சு பிடிக்கும் என்று சொல்ல முடியாது அதே நாற்பது அல்லது அதற்கு மேல் இருக்கும் ஒருவருக்கு மாஞ்சு நிச்சயம் பிடிக்கும். அதற்குக் காரணம் கதையில் வருபவர்களையோ, அல்லது கிட்டதட்ட அதே மாதிரி சூழ்நிலையையோ பார்த்திருப்போம். அம்மாவிற்கு எந்தப் பையன் முன்னுக்கு வரவில்லையோ அந்தப் பையனிடம் ஆசை அதிகமாக இருக்கும். எதார்த்தத்தை கதையில் ஆண்டாள் மூலமாக அழகான வர்ணனைகளுடன் சொல்லியிருப்பார். உதாரணம் "பாச்சாவின் பெயர் இங்கிலிஷ் கல்யாண பத்திரிகையில் பார்த்திஸச்ந்தா என்று போட்டிருந்தது" Well crafted story. சின்னக் குழந்தைகளை படிக்க வைப்பது, கல்யாணம் செய்துகொடுப்பது, பேரன் பிரசவத்துக்கு அமெரிக்கா போவது, மூத்த மகன் இறந்து போவது, கடைசியில் ஆண்டாள் முடிவு என்று இரண்டு தலைமுறைக் கதையை ஒரு சிறுகதையில் அடக்குவது என்பது பெரிய வேலை. எப்படியாவது சிறுகதை எழுத வேண்டும் என்று துடிப்பவர்கள் ஸ்ரீரங்கத்துக் கதைகளை ஒரு முறை படிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்வேன். நிச்சயம் மாஞ்சு படித்தாகவேண்டும்.

** ** ** ** **

2008, பிப்ரவரி 28- விடியற்காலை இரண்டு மணி இருக்கும். ஆஸ்பத்திரியிலிருந்து மொத்தமாக வெளியே வந்து, பார்க் செய்த பைக்கை எடுக்கும்போது அங்கே இருந்த வாட்ச்மென் ஒரு சலாம் போட்டுச் சிரிக்க, பையிலிருந்த பத்து ரூபாயைக் கொடுத்தேன். கையிலிருந்த பிரபந்தப் புத்தகத்தை எடுத்து பெட்ரோல் டாங்க் மேல் இருக்கும் பையில் சொறுகிவிட்டு கிரீம்ஸ் ரோட்டில் பைக் ஓட்டிக்கொண்டு நேராக மவுண்ட் ரோடு வந்தபோது சில வாகனங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. இடது பக்கம் திரும்பி சத்தியம் தியேட்டர் பக்கம் வந்த போது பெட்ரோல் டாங்க் பையில் பிரபந்தப் புத்தகம் இல்லை. திரும்பவும் மவுண்ட் ரோடு போய் இருட்டில் எங்கே விழுந்திருக்கும் என்று தேட- லாரிகளும், வெளியூர் பேருந்துகளும் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தன.. யாரையாவது கேட்கலாம் என்றால் சாலை மனித நடமாட்டம் இல்லாமல் காலியாக இருந்தது. சென்ற பாதை முழுவதும் பார்க்கலாம் என்று பைக்கை ஒன்வேயில் ஓட்டிக்கொண்டு சென்றபோது ஒரு ஆட்டோ நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தது. ஆட்டோ டிரைவர் கையில் கந்தலாக அந்தப் பிரபந்த புத்தகம்.

"சார் அது என்னுடையது!" என்றேன்.

"சாரி கீழே கடந்தது.. லாரியோ பஸ்ஸோ ஏற்றிட்டது."

கொத்தாக அவரிடம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அந்தப் புத்தகத்தை இன்னும் ஒட்டாமல் அப்படியே ஒரு பையில் வைத்திருக்கிறேன். பிரபந்தம் புத்தகம் கிழிந்ததற்கான காரணம்தான் இன்னும் தெரியவில்லை!

[நன்றி: http://sujathadesikan.blogspot.com]


** ** ** ** **