எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 29 September 2019

படித்ததில் பிடித்தவை (“ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்…” – ‘கதிர் அவன்’ கவிதை)


ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்


ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

அடைமழையின்
குளிரோடு அது
ஒத்திருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

இரவின் பேரமைதியை
கொண்டு நிகழ்த்தப்பட்டதாக
அவை இருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

உறங்கிக்கிடக்கும்
குழந்தையை தழுவி செல்லும்
தாயின் மூச்சுக்காற்றை போல
அவை இருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

மறந்திட நினைத்திடும்
சில நினைவுகளை
விழிகளில் பதிய
செய்திட வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

மனம் சுமந்தலையும்
பாரங்களை இலகுவாக்கி
இருதயத்தை பறந்திட
செய்ய வேணடும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

ஒரு மலரின் வெடிப்போசையை
செவிகளுக்குள்
அறிய செய்திட வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

வண்ணத்துப்பூச்சியின்
கனத்தில்
உயிரில் தங்கியிருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

கொஞ்சம் உணரும்படி,
கொஞ்சம் உணர்ச்சி நிறைந்து,
கொஞ்சம் அதிசயத்து,
கொஞ்சம் ஆச்சர்யத்தோடு,
கொஞ்சம் அழகில் கலந்து,
கொஞ்சம் வலியை உணர்த்தி,
கொஞ்சம் கண்ணீரை வரவழைத்து,
கொஞ்சம் மனதினை வருடி,
கொஞ்சம் உயிரினை தீண்டி,
கொஞ்சம் சுவாசத்தில் நிறைந்து,
கொஞ்சம் விழிகளில் பதிந்து,
கொஞ்சம் வியப்பில் ஆழ்த்த வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

நீங்கள் படித்து கொண்டிருக்கும்
இந்த கவிதையை போலல்லாமல்
கவிதை கவிதையாக
இருந்திட வேண்டும்..!

- கதிர் அவன்.

Thursday, 26 September 2019

படித்ததில் பிடித்தவை (“வேம்பாழ்வார்...!” – நம்மாழ்வார் கட்டுரை)வேம்பாழ்வார்...!

வேம்பு எங்களுடையதுஎன்று காப்புரிமைச் சட்டத்தைக் காட்டி வெளிநாட்டினர் சொந்தம் கொண்டாடிய நேரம் அது. வேம்பு என்பது இந்திய மண்ணுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்க, 2000-ம் ஆண்டு, மே மாதம் 9,10 தேதிகளில் ஜெர்மனி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த இந்தியக் குழு ஒன்று சென்றது. அதில் நம்மாழ்வாரும் இடம்பெற்றார். வெற்றிகரமாக காப்புரிமையை மீட்டுவந்த பிறகு, வெற்றி விழாக் கூட்டம்  செங்கல்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் எளிய முறையில் நடந்தது.கோர்ட்டுக்கு வெளியே பல நாட்டுக்காரனும் நின்னுக்கிட்டு இருக்கான். நான் வேப்பங்குச்சியை எடுத்து வாயில் வெச்சு நல்லா கடிச்சேன். ஒருத்தன், என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?’னு கேட்டான். பிரஷ் பண்றேன்னேன். எது பிரஷ்?’னு கேட்டான். வாயில மென்னுக்கிட்டிருந்த வேப்பங்குச்சியைக் காட்டினேன். பேஸ்ட் எங்கே?’னு கேட்டான். குச்சிக்குள்ளயே இருக்குற கசப்புச் சாறுதான் பேஸ்ட்னு சொன்னேன். கடைசியா, என்னோட பிரஷை தூக்கிப் போட்டா, நுண்ணுயிரிங்க தின்னுட்டு மண்ணை வளமாக்கும், உன்னோட பிளாஸ்டிக் பிரஷை தூக்கிப் போட்டா, மண்ணுல இருக்கிற நுண்ணுயிரிகளைக் கொல்லும்னு சொன்னேன் எல்லாரும் பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டாங்க. கோர்ட்டுக்குள்ள, எங்க ஊர் விவசாயிங்க வேப்பந்தழையையும், மாட்டுக் கோமியத்தையும் கலந்து, பூச்சி விரட்டியா தெளிக்கிறான். உங்களுக்கு, மேரி மாதாமாதிரி எங்களுக்கு, மாரியாத்தா பொம்பளைதெய்வம். அவளுக்கு வேப்ப இலையிலதான் மாலை போடுவோம்னு சொல்லி சங்கப்பாடல் தொடங்கி, கூழ் வார்க்கும்போது பாடும் கும்மிப்பாட்டு வரை எல்லாத்தையும் பாடிக்காட்டினேன்!என்று அப்படியே மேடையில் நடித்தும் காட்டினார் நம்மாழ்வார். இந்த நிகழ்வில்தான் வேம்பாழ்வார்என்ற பட்டம் நம்மாழ்வாருக்கு சூட்டப்பட்டது.

-         நம்மாழ்வார்.
   (“நான் நம்மாழ்வார் பேசுகிறேன்... - புத்தகத்திலிருந்து)
   (நன்றி: பசுமை விகடன்)

Monday, 23 September 2019

படித்ததில் பிடித்தவை (“ஜி.டி. நாயுடு... தமிழகம் கண்டுகொள்ளாமல் விட்ட விந்தை விஞ்ஞானி...” – நம்மாழ்வார் கட்டுரை)


ஜி.டி. நாயுடு... தமிழகம் கண்டுகொள்ளாமல் விட்ட விந்தை விஞ்ஞானி...

ஜி.டி. நாயுடு பேச ஆரம்பித்தார். இந்தியா பெரிய விவசாய நாடு. இங்கு விவசாயம் பின்தங்கியுள்ளது. விஞ்ஞானிகளாக ஆகப்போகும் நீங்கள் தொண்டாற்ற நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதோ... என் முன்னே உட்கார்ந்து இருக்கிறானே... பாண்டுரங்கன். இவனைப்போல் இருக்காதீர்கள். இவன், வேளாண் கல்லூரியில் படித்த காலத்தில், கோடை விடுமுறையில் என்னிடம் மோட்டார் தொழில் பற்றி கற்றுக் கொள்ள வந்தான்.

நீதான் வேளாண் கல்லூரியில் படிக்கிறாயே உனக்கு மோட்டார் தொழில் பற்றிய கல்வி எதற்கு? இது இன்னொருவனுக்குக் கிடைக்கிற வாய்ப்பைத் தடுத்ததாக ஆகாதா?’ என்று நான் இடங்கொடுக்க மறுத்தேன். இவன் உடனே, தொகுதி எம்.பி-யை அழைத்துக் கொண்டு வந்தான். இனி நான் வேளாண் படிப்பை விட்டுவிடப் போகிறேன். மோட்டார் தொழிலில்தான் முற்றிலுமாக இறங்கப் போகிறேன்என்று சொல்லி என்னிடம் எப்படியோ பயிற்சியில் சேர்ந்து விட்டான். ஆனால், இப்போது வேளாண் பட்டதாரியாக மாறி வேளாண் கல்லூரியில் வந்து அமர்ந்திருக்கிறான். இதுபோல அடுத்தவரது வாய்ப்பைப் பறிப்பதாக உங்கள் வாழ்க்கை அமைந்து விடக்கூடாது என்று நாயுடு பேசியதும், பலரது பார்வை... அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவாக்கத்துறைத் தலைவர் பாண்டுரங்கன் பக்கம் திரும்ப... அவர் அசடு வழிந்தார். 

தொடர்ந்து பேசிய ஜி.டி. நாயுடு, விஞ்ஞானியாக வேண்டுமானால், விஞ்ஞான மனப்பான்மை நமக்குத் தேவை. நம் நாட்டில் ஏராளமானப் பொருட்கள் உள்ளன. அவற்றின் பயன்பாடுகளை நாம் அறிந்திருக்கவில்லை. இதோ என்னுடன் வந்திருக்கிற ஜெர்மன்காரனைப் பாருங்கள். இவனோடு சேர்ந்து சுற்றுவதில் சங்கடம் உள்ளது. இவனுக்கு நமது கருவேல மரத்து விதையை அனுப்பித்தான் நான் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த கருவேல மரம் ஏராளமாக நிற்கின்றன. கருவேல மரம் இல்லாத இடமாகப் பார்த்து இவனை அழைத்துக் கொண்டு வருகிறேன். 'இவ்வளவு மலிவாகக் கிடைக்கிற இந்த விதையை நமக்குக் கொடுத்து நாயுடு நிறைய சம்பாதிக்கிறானேஎன்று வெள்ளையன் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக கருவேல மரம் இல்லாத இடமாக அழைத்து வருகிறேன் என்று விகடமாகப் பேசியதில் கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது.ஜி.டி நாயுடு, தான் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர் என்பதற்கு, ஓர் எடுத்துக்காட்டை முன் வைத்தார். அவர், பலமுறை வெளிநாடு சென்று வந்திருக்கிறார். அப்படி ஒரு முறை சென்று வந்த பொழுது, மேஜையறையில், ஒரு கைத் துப்பாக்கி இருந்திருக்கிறது. அதை சோதித்துப் பார்க்க எண்ணியவர், வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த ஒவ்வொரு வாழை மரத்தையும் துப்பாக்கியால் சுட்டு துளையிட்டு இருக்கிறார். பிறகு, ஒரு மரத்தின் துளையில் ரசாயன உரம்; ஒரு மரத்தின் துளையில் ரம்பத் தூள்; ஒரு மரத்தின் துளையில் களிமண்; ஒரு மரத்தின் துளையில் மாட்டுச் சாணம் என வைத்து, அனைத்து மரங்களின் துளைகளையும் அடைத்திருக்கிறார். அதன் பிறகு மரங்களின் வளர்ச்சியை கண்காணித்து வந்திருக்கிறார். ஆனால், மரங்களின் வளர்ச்சி பற்றிய முடிவை அவர் யாரிடமும் சொல்லவில்லை. விஞ்ஞானிகள், கேட்டு அறிபவர்களாக இருக்கக் கூடாது; சோதித்து அறிபவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த விஞ்ஞானி ஜி.டி நாயுடுவின் கருத்து.

மனிதர்களுடைய புரதத் தேவையைப் பெருமளவில் நிறைவு செய்யும் துவரை, இந்தியாவில் மிக முக்கியமான உணவு. இது, பெரும்பாலும் மானாவாரியாகத்தான் விளைவிக்கப்படுகிறது. அதனால், மழை தப்பும் காலங்களில் விளைச்சல் சரிந்துவிடும். அப்போது துவரை இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலை உயர்ந்து விடும். அதை யோசித்துப் பார்த்த ஜி.டி நாயுடு, ஒரு துவரை மரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். செடியாக இருந்தால்தானே மழையை எதிர்பார்த்து விதைக்க வேண்டும். அதை மரமாக்கி விட்டால், மழையில்லா விட்டால் விளைச்சல் குறையும், மற்றபடி மரம் அழியாதுஎன்பது நாயுடுவின் கருத்து. பல உழவர்களது நிலங்களில் வரப்பு ஓரங்களில் ஜி.டி. நாயுடு துவரைகுடியேறியிருந்தது.

எங்கள் கல்லூரி மாணவர்கள் கல்விச்சுற்றுலா போயிருந்தபோது, கோவையில் ஜி.டி.நாயுடு விடுதியில் தங்குகிற வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொழில்கூடத்தின் வளாகம் முழுவதும் தூய்மை பராமரிக்கப்பட்டது. பல இடங்களிலும் சுவர்களில் பல அறிவிப்புகள் பளிச்என தென்பட்டன.

குப்பைத் தொட்டி தவிர, தரையில் குப்பையைப் போடுபவர்கள் ஒரு வாரம் முழுவதும் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும்என்பது ஓர் அறிவிப்பு.

அடுத்த அறிவிப்பு பி.ஏ. படிப்புக்கு நான்காண்டு காலம் எதற்காக? இளமையைப் பறிகொடுத்து, பெற்றோர் பணத்தைச் செலவழித்து, கல்லூரி செல்பவனுக்கு விடுமுறை எதற்காக? நான்காண்டு படிப்பை என்னால் பதினெட்டு மாதங்களில் கற்றுக் கொடுக்க முடியும்என்பது. எல்லோருக்கும் கல்விஎன்று அடிக்கடி பேசுபவர்கள் இந்தக் கருத்தை கவனிக்கத் தவறியது இந்தியாவின் துயரம் மிகுந்த அத்தியாயம் ஆகும்.

பெற்றோர்களுக்கான ஓர் அறிவிப்பும் இருந்தது. இந்த நாட்டில் இளைஞர்களைக் கெடுப்பவை... சினிமா, பத்திரிகைகள், அரசியல், பெற்றோர்கள் ஆகிய நான்கும்தான்குழந்தை பிறப்பதற்கு முன்னரே அயல்நாட்டுக்கு அனுப்ப கனவு காணும் பெற்றோர்களுக்கானது இந்த வாசகம்.

தொழில்கூடத்தின் எந்த மூலைக்குப் போய் திரும்பினாலும், மூன்றடி நீளம் ஒன்றறை அடி அகலம் உள்ள ஒரு அட்டை தென்படும். அதன் மேல் பகுதியில் ஒரு தேய்ந்து போன செருப்பு கட்டப்பட்டிருக்கும். செருப்பின் கீழேயுள்ள வசனம் இது. அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாது போனால், இருபத்தைந்து ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்இது பார்ப்போரின் மனதில் ஒரு ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. ஒழுக்கம், கட்டுப்பாடு பற்றியெல்லாம் பேசுபவர்கள், இக்கருத்தாக்கத்தை சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.

அந்த விடுதியின் சமையலறையில் உரையாடியபோது, ஓர் உண்மை வெளிப்பட்டது. சமையல் கூடத்தில் வேலை செய்பவர்களை வேலையில் சேர்க்கும்பொழுது எடை பார்த்து குறித்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து எடை பார்ப்பார்களாம். எப்பொழுதாவது ஒருவரின் எடை கூடினால், அவரை உடனே வீட்டுக்கு அனுப்பி விடுவார்களாம். ஜி.டி. நாயுடுவின் மூளை இப்பொழுது ஓரளவு புரிந்திருக்கும் என்று கருதுகிறேன். ஜி.டி. நாயுடுவின் மூளையை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டதுதான் உண்மை.

-         நம்மாழ்வார்.
  (“நான் நம்மாழ்வார் பேசுகிறேன்... - புத்தகத்திலிருந்து)
  (நன்றி: பசுமை விகடன்)

Wednesday, 18 September 2019

படித்ததில் பிடித்தவை (“அஞ்சட்டி மலையில் பிறந்த ஞானம்..!” – நம்மாழ்வார் கட்டுரை)அஞ்சட்டி மலையில் பிறந்த ஞானம்..!

பள்ளிக்கூடம் பார்த்தறியாத அந்தப் பெண், காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?’ என்று விடுகதைகளை எடுத்துவிட, என்னிடத்தில் விடை இல்லை. ஆனால், நாங்கள் சில கதைகளைப் போட்டு, அவள் பதில் சொல்ல முடியாது நின்றபோது, அவளிடமிருந்து விடையை வாங்கினோம். காயான பிறகு பூவாவது... தேங்காய். பழமான பிறகு காயாவது... எலுமிச்சம்பழம்!

அடுப்படியில் தேங்காயை உடைத்து அரிவாள் மனையில் சுரண்டும்போது, தேங்காய்ப்பூ வந்தது. கிராமங்கள், பட்டணத்து வியாபாரிகளால் சுரண்டப்பட்டு, ஏதுமற்ற நிலையில் இருப்பதை, விடுகதையின் இப்பகுதி விளக்குகிறது. தேங்காயில் பருப்பு, கொட்டாங்குச்சி (சிரட்டை) என இரண்டு பாகங்கள் உண்டு. பருப்பைச் சுரண்டிய பின்னர், கொட்டாங்குச்சிதான் மிச்சம். அதுபோல, கிராமத்திலுள்ள அரிசி, ஆடு, மாடு, காய்கறி, பழம், நிலம், நீர், உழைப்பு என அனைத்தையும் பட்டணம் உறிஞ்சிக் கொள்ளும்போது, கிராமங்கள் பாலைகளாகின்றன!

கதையின் இரண்டாவது பாகம் முக்கியமானது. எலுமிச்சம்பழத்தை அரிந்து, உப்பிட்டு வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய். மனிதர்கள் இறந்தால், இயற்கை எய்தினார்எனச் சொல்கிறார்கள். அதுபோலவே, மரத்திலிருந்து பிரிந்து விழுகிற பழமும், நான்கைந்து நாட்களில் இயற்கை எய்திவிடுகிறது. ஆனால், உப்பு இடப்பட்ட பழம் (ஊறுகாய்) ஆண்டு முழுக்க இருந்தாலும் அழிவதில்லை. அது ஏன்?’ என்கிற கேள்வி, இரவு முழுவதும் தூக்கத்தைக் கெடுத்தது. பூஞ்சணம், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள்தான் ஒரு பொருளை சிதைக்கின்றன. உப்பு, அந்த நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுகிறது. மனிதன் இறக்கும்போது, நுண்ணுயிரிகள் செயல்பட்டதால்தான் உடல்கள் இயற்கை எய்தின.1984-ம் ஆண்டு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பூச்சிக்கொல்லி நஞ்சு உற்பத்தியான டேங்க் வெடித்து, நகர் முழுவதும் பரவியது. அங்கே இறந்துபோன மாடுகள், சிதையாமல் பல மாதங்கள் அப்படியே கிடந்ததை பத்திரிகைகள் படம் பிடித்தன. கடலோர மணலில் உப்புதான் விளைகிறது. பயிர் விளைவதில்லை. உரத்தில் உப்பு கலந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும்என்கிறது, இந்தியக் குற்றவியல் சட்டம். காரணம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலம் பயனற்றுப் போகிறது (உரத்தில் உப்பைக் கலந்தவர்கள் அல்லது உரமென்று தந்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?)!

அம்மோனியம்-சல்பேட், யூரியா, கால்சியம்-நைட்ரேட், பொட்டாஷ் இவையெல்லாமே உப்புகள்தான். இவற்றை உழவர்களிடம் உரம் என்று சொல்லி விற்றார்கள். டி.ஏ.பி.-யில் (DAP-Di Ammonium Phosphate) 16% நைட்ரேட் உப்பு இருக்கிறது. இந்த உப்புகளை இடும்போது, மண்ணில் உள்ள உயிர்கள் மடிகின்றன. இதன்காரணமாக, மண்ணில் உயிர்கள் செய்ய வேண்டிய வேலையை, யூரியா போன்ற ரசாயனங்கள் செய்ய வேண்டியுள்ளது.

மீண்டும் மீண்டும் ரசாயன உரங்களை வாங்கி, நிலத்தில் இடும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள் உழவர்கள். நிலம், மேலும் மேலும் கெட்டித் தட்டிப் போகிறது. நிலத்தில் ஃப்யூரிடான், திம்மெட் போன்ற நஞ்சுகளை இடும்போதும், களைக்கொல்லி நஞ்சுகளை இடும்போதும்... மண், மலடாக்கப்படுகிறது. விஞ்ஞானம் என்கிற போர்வையில் நடக்கும் வியாபாரம், தாய் மண்ணைச் சாகடிக்கிறதுஎன்ற உண்மையை அறிந்தபோது, அஞ்சட்டி மலையில் எனக்கு ஞானம் பிறந்ததை உணர்ந்தேன். அதிலிருந்து மக்களுக்குச் சொல்வதை நிறுத்திக் கொண்டு, அவர்களிடமிருந்து கற்க முடிவு செய்து, இன்றும் தொடர்கிறேன். இன்றைக்கு, இயற்கை வழி வேளாண்மையில் இவ்வளவு பெரிய எழுச்சி ஏற்பட்டதற்கு, விடுகதை என்கிற பெயரில், எழுதப் படிக்கத் தெரியாத அந்தப் பெண், என் சிந்தனையில் ஏற்படுத்திய மாற்றமே காரணம்..!

-         நம்மாழ்வார்.
  (நான் நம்மாழ்வார் பேசுகிறேன்... - புத்தகத்திலிருந்து)
  (நன்றி: பசுமை விகடன்)