எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 13 August 2019

படித்ததில் பிடித்தவை (“அடிக்க வேண்டியது அவனையல்ல” – கண்மணிராசா கவிதை)


அடிக்க வேண்டியது அவனையல்ல


சட்டையில்லாத
தன் முதுகில்
சாட்டையால் அடித்தபடி
காசு கேட்கும் சிறுவனை
எங்கேனும் கண்டால்
கற்றுக்கொடுங்கள்...

அடிக்க வேண்டியது
அவனையல்ல என..!

-         கண்மணிராசா
(லட்சுமிக்குட்டி கவிதை நூலிலிருந்து.)

Sunday, 11 August 2019

படித்ததில் பிடித்தவை (“குழந்தையாக நாம்” – சிவநேசன் கவிதை)


குழந்தையாக நாம்...

நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்...

நம்முடைய                
செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்...

நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்...

நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை..!

அதை ரசிக்கும்
பொழுதுகளில்...
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!

                -  ந. சிவநேசன்.

Tuesday, 6 August 2019

படித்ததில் பிடித்தவை (“பூனைக்குட்டி” – லீனா மணிமேகலை கவிதை)


பூனைக்குட்டி

ஊஞ்சலின் நடுவில்
அமர்த்தலாக சாய்ந்திருந்தது பூனைக்குட்டி
குரலுயர்த்தி விரட்டினேன்
ஒரு சிறுகுச்சியைத் தரையில் தட்டி அச்சுறுத்தினேன்
முறைத்துப் பார்த்தேன் எதற்கும் மசியவில்லை
எனக்கு ஊஞ்சலாட வேண்டும் ஓரமாக அமர்ந்துகொண்டேன்
பூனை அசையாமல் கிடந்தது
அதன் கண்களைத் தவிர்த்தேன்
அதன் இருப்பையும் தவிர்த்தேன்
கிர்ரிக்க்
கிர்ரிக்க்
கிர்ரிக்க்
ஊஞ்சலாடும் சத்தம் மட்டும்தான்
பிரபஞ்சத்தின் சத்தமாக இருந்தது
தவழ்ந்து வந்து மெல்ல
என் மடியில் படுத்துக்கொண்டது பூனைக்குட்டி
வெள்ளையும் பழுப்புமாய்
அதன் ரோமத் தீண்டலில்
திக்கித்துப்போய்
வெடித்து அழுதுவிட்டேன்.

- லீனா மணிமேகலை.