எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 26 March 2016

சென்னை நகரம் அவரை அன்புடன் வரவேற்கிறது..!


“அவரால் நேராக
நடக்கமுடியவில்லை.
வளைந்து, திரும்பி, இடிக்காமல்
நடக்கவேண்டியுள்ளது.
குறுக்கே செல்பவர்களுக்காக
வேகத்தைக் குறைக்கவேண்டியுள்ளது.

எதிரே வரும் இளைஞர்கள்
அவரைப் பார்க்காமல்
கையிலிருக்கும் கைப்பேசியை
பார்த்து நடக்கிறார்கள்.
அவர்கள் மேல்
மோதாமல் நடக்கிறார் அவர்.

முன்னால் எச்சில் துப்பிக்கொண்டு
அதன் மீதே நடக்கிறார்கள்.
எச்சில் அவர் மீதுப்படாமல் அவர்தான்
பார்த்து நடக்கவேண்டியுள்ளது.

நடைப்பாதையில்
கடைப்போட்டுள்ளார்கள்.
பொருட்களை மிதிக்காமல்
நடக்கிறார் அவர்.

நன்றாக காற்று வீசினாலும்
அனுபவிக்க விடவில்லை
நடைப்பாதை ஓரத்தின்
இயற்கை உபாதை கழிவுகள்.
மூக்கைப் பிடித்துக்கொள்கிறார்.

மகனை நினைத்து அவரது
கண்கள் கலங்கிப் போகிறது.

கிராமத்திலிருந்து
முதன் முதலாக
நகரத்திலிருக்கும்
மகன் வீட்டுக்கு வருகின்ற
அந்தப் பெரியவரை
தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறது
தலைநகரத்தின் மிகப்பெரிய
ரயில்வே நிலையம்..!”

-   கி. அற்புதராஜு.

Wednesday, 23 March 2016

சிக்கல்


“அவசரமாக ஓடிவந்து
ரயிலைப் பிடித்த அந்த
வயதானப் பெண்
உட்கார்ந்தவுடன்
சற்றே தன்னை
ஆசுவாசப்படுத்திக்கொண்டு
தான் வாங்கி வந்த
உதிரிப்பூக்களை
கட்டுவதற்கு முன்
எடுக்கத் துவங்கினாள்
நூல்கண்டின் சிக்கலை.

எதிரே அமர்ந்திருந்த
இளம்வயதுப் பெண்
நிதானமாக
ஒலிப்பெருக்கிகளை
காதில் பொருத்தி
மறுமுனையை
கைப்பேசியில்
சொருகப் போனவளும்
எடுக்கத் துவங்கினாள்
வயரின் சிக்கலை..!”

-   கி. அற்புதராஜு.

Monday, 14 March 2016

படித்ததில் பிடித்தவை (ஊஞ்சல் - கவிதை)


ஊஞ்சல்
“ஒற்றை மகளைக்
கட்டிக்கொடுத்த வீடுகளில்
மகள் ஆடிய ஊஞ்சல்களில்
நிச்சயம்
ஒரு ‘டெடிபியர்’
ஆடிக்கொண்டிருக்கும்,
அந்த மகளைப் பற்றிய
கதைகளைச்
சொல்லிக்கொண்டு..!”

- ஆர். ஜவஹர் பிரேம்குமார்.

Tuesday, 8 March 2016

நாலு பேருக்கு நன்றி..!


“ஜன கன மன
பாடுவதைப் போல...

நகரத்து சாலையை
கடப்பதற்கும்...
அநீதியை தட்டிக்
கேட்பதற்கும்...
நாலு பேர்
சேர்ந்தால்தான்
முடிகிறது.

தனியாக செய்தால்
நமக்குதான் பாடப்படும்
ஜன கன மன..!”

-   கி. அற்புதராஜு.