எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 27 December 2016

படித்ததில் பிடித்தவை (தேவை அதிகமில்லை... - சௌவி கவிதை)


தேவை அதிகமில்லை...

"பப்பாளி மரத்தின்
யாரும் கவனிக்காத கனிந்த பழமொன்றை
காக்கை கொத்திக் கீழே தள்ளியது. 
இன்னும் சில காக்கைகள் வந்தன.
தின்றதுபோக மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன.

பின் மைனாக்கள் வந்தன. 
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன.

பின் கற்றாழைக் குருவிகள் வந்தன.
அவையும் புசித்ததுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன.

பின் சிட்டுக்குருவிகள் வந்தன.
அவையும் எடுத்ததுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன.

பின் வண்டுகள் வந்தன.
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டு அகன்றன.

இப்போது சாரை சாரையாய்
எறும்புகள் வந்து
கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக்கொண்டு
கடக்கின்றன.

மனிதனுக்குத் தப்பித்த ஒரு பப்பாளிப்பழம்
பசியாற்றுகிறது எண்ணில்லா உயிர்க்கு.
இத்தனை எடுத்ததுபோக
இன்னும் மிச்சமிருக்கிறது பப்பாளிப்பழம்..!"


- சௌவி.

Thursday, 22 December 2016

படித்ததில் பிடித்தவை (மரம் இருந்த இடம் - மானா பாஸ்கரன் கவிதை)


மரம் இருந்த இடம்

அதன் நிழலில் உட்கார்ந்துதான்
கை மணிக்கட்டின் மேடுபள்ளங்களில்
விரல் ஊர வைத்து
ஜனவரி பிப்ரவரி மார்ச்சுக்கு
எத்தனை நாளென்கிற கணக்கை
என் மகனுக்கு சொல்லிக் கொடுத்தேன்.
******************************************
என் விலாசத்தை விசாரிப்பவர்களிடம்
நேற்று வரையில்
அதோ
மரமிருக்கிற வீடுதான்என்று
அடையாளம் காட்டியவர்களால்
அதோ
மரமிருந்த வீடுதான்என்று
இனி சொல்ல முடியுமா?
*******************************************
சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம்
போய்ட்டு வாரேனென்று
அதனிடம் சொல்லிச் செல்கிற
என் மனைவியிடம்கூட
சொல்லாமக் கொள்ளாமப் போய்விட்டது வாசல் மரம்.
*******************************************
குழி புண் மாதிரி கிடக்கிறது
மரமிருந்த மண்
அதன் ஆழங்களில்
எங்கள் வீட்டின் வேர்கள்.
யாராலும் நிரப்ப முடியாத
கோடிட்ட இடமாகிவிட்டது
எங்கள் தெரு.
*******************************************
எங்கள் வீட்டுக்கு வரும் லாண்டரி அண்ணனும்
எப்போதாவது வருகிற அஞ்சல்காரரும்
அதிகாலை பேப்பர் பையனும்
வீட்டு வாசலில் வெறுமையைத் துழாவினர்
அவர்களின் கண்களில்
உதிர்ந்தன
ஞாபகங்களின் இலைகள்.
******************************************
மரத்தை அறுத்தால்
ஆண்டுவளையம் தெரியுமென்பார்கள்
இப்போது
எங்கள் மனசை அறுக்கிறது
எங்கள் மரத்தின் ஆண்டுவளையம்.
******************************************
கிளைகளின் கதைசொல்லி காகங்களுக்கும்
செய்திகள் வாசித்த அணில்களுக்கும்
6, மூணாவது குறுக்குத் தெரு
பெரியார் நகர் என்பது
இனி, பழைய முகவரி..!

-   மானா பாஸ்கரன்.

Friday, 9 December 2016

படித்ததில் பிடித்தவை (“காத்திருத்தல்” – திவ்யா கவிதை)


காத்திருத்தல்...
‘கிளம்புகிறேன்’ என்று சொல்லாதே
வழியனுப்ப மாட்டேன்.
‘போய்விட்டு வருகிறேன்’ என்றும் சொல்லாதே
‘போய் வா’ என்றும் சொல்ல மாட்டேன்.
‘கொஞ்ச நேரம் கண்களை மூடு
போய் ஒளிந்துகொள்கிறேன்’ என்று சொல்.
கண்களை மூடுகிறேன்
திறப்பதற்குள் போய்விடு.
நீ திரும்பி வரும் வரை
என் அறைக்குள்ளேயே
உன் வாசத்தின் வழித்தடத்தில்
என்னை நானே தேடிக்கொண்டிருப்பேன்.
எத்தனை நாள் கழித்து வந்தாலும்
எத்தனை வருடம் கழித்து வந்தாலும்
எத்தனை யுகங்கள் கழித்து வந்தாலும்
சொல்லாமல் கொள்ளாமல் வா.
கதவைத் திறந்தவுடன்
நானே உன்னைக் கண்டுபிடிப்பதைப் போல
இறுக்கக் கட்டிப்பிடித்துக் கொள்வேன்.
அந்த நொடியில்
நான் சிரித்தாலும் சிரிப்பேன்
அழுதாலும் அழுவேன்.
என் முத்தத்தைத் தவிர பதிலுக்கு
எதுவும் பேசக்கூடாது நீ..!

-  திவ்யா மாரி செல்வராஜ்.