எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 31 May 2022

படித்ததில் பிடித்தவை (“உண்மை” – கவிதை)

 


*உண்மை*

 

எழுதப்படாத

எழுத்துக்களிலும்

பேசப்படாத

வார்த்தைகளிலும்

மட்டும் தான்

பொய்கள்

இருப்பதில்லை..!


Monday 30 May 2022

படித்ததில் பிடித்தவை (“மரம்” – எஸ். ராமகிருஷ்ணன் கவிதை)

 


*மரம்*

 

ஒரு மரத்தில்

எந்த இலை பழுத்து

எப்போது உதிரப்போகிறது

என மரம் யோசிப்பதுமில்லை...

 

வருந்துவதும் இல்லை....

 

அதன் வேலை

புதிய இலைகளைத்

துளிர்க்க விடுவது மட்டுமே..!

 

*எஸ். ராமகிருஷ்ணன்*



Sunday 29 May 2022

Saturday 28 May 2022

படித்ததில் பிடித்தவை (“எனக்குள் பறவை” – செ.புனிதஜோதி கவிதை)

 


*எனக்குள் பறவை*

 

மரத்தை

சிதைத்த பின்பும்

தனக்குள் பொதித்துக்கொண்ட

பறவையின் நினைவை

காற்றின் விசையால்

உணர்த்துகிறது

காகிதம்..!

 

*செ.புனிதஜோதி*




Friday 27 May 2022

படித்ததில் பிடித்தவை (“வாழ்க்கை” – கல்யாண்ஜி கவிதை)

 


*வாழ்க்கை*

 

இறக்கை சிலுப்பும் காக்கையை

எச்சில் இலையைத் தின்றபடி

யோசனை செய்யும் பசுமாட்டை

நனைந்த குரலில் பூ விற்று

நடந்து போகும் சிறு பெண்ணை

ஓட்டல் புகையை ரோட்டின்மேல்

பெட்ரோல் சிதறிய கோலத்தை

பாராமல் ஏன் அவன் மட்டும்

பரிசு சீட்டை விலை சொல்லிக்

கூவுகின்றான்?

என் கக்கத்துக்குடையைப் போல

பெரிதாகக் கிழிந்து போச்சோ

அவன் வாழ்க்கை..!

 

*கல்யாண்ஜி*



Thursday 26 May 2022

படித்ததில் பிடித்தவை (“உச்சிக்கு வந்தால்” – கவிதை)

 


*உச்சிக்கு வந்தால்*

 

உதிக்கும் போதும்

மறையும் போதும்

ரசிக்கும் உலகம்

உச்சிக்கு வந்தால்

திட்டி தீர்க்கும்.


சூரியனை மட்டுமல்ல

மனிதனையும் தான்..!


Wednesday 25 May 2022

படித்ததில் பிடித்தவை (“காவல்” – ஷண்முக சுப்பையா கவிதை)

 


*காவல்*

 

வீட்டைச் சுற்றி

தோட்டம் போட்டேன்.

 

தோட்டத்தைச் சுற்றி

வேலி போட்டேன்.

 

வேலியைச் சுற்றி

காவல் போட்டேன்.

 

காவலைப் பற்றி

கவலைப் பட்டேன்..!

 

*ஷண்முக சுப்பையா*

Tuesday 24 May 2022

படித்ததில் பிடித்தவை (“களை” – முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கவிதை)

 


*களை*

 

அகண்ட புல்வெளியில்

அழகான ஒற்றை ரோஜாவை

பூத்திருக்கும் செடியும்

களைதான்.

 

ரோஜா தோட்டத்தில்

செடிகளுக்கு நடுவே

முளைத்திருக்கும்

ஒரு புல்லும்

களைதான்..!

 

*முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்*



Monday 23 May 2022

படித்ததில் பிடித்தவை (“பிழை” – முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கவிதை)

 

{ஓவியம் : இளையராஜா}


*பிழை*

 

சமையலில்

அம்மா செய்யும்

சிறுப்பிழையால்

புதிதான பதார்த்தம்

கிடைக்கிறது

குழந்தைகளுக்கு..!

 

*முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்*



Sunday 22 May 2022

*தேடல்*

 


ரயில் பிரயாணத்தில்

கண் தெரியாதவர்

பிச்சைக் கேட்கிறார்.

 

ஜன்னலோரம் அமர்ந்திருப்பவர்

சட்டைப் பையில் காசை

தேடிக் கொண்டிருக்கிறார்.

 

எனது இருக்கையை

கடந்து செல்லும்

கண் தெரியாதவருக்கும்

காசை தேடுபவருக்கும்

இடைவெளி

அதிகமாகி அதிகமாகி

எகிறுகிறது

எனது பதைபதைப்பு...

 

முடிவில்

பயனற்றுதான் போகிறது

இருவரது தேடலும்..!


*கி.அற்புதராஜு*

Saturday 21 May 2022

படித்ததில் பிடித்தவை (“எனக்குத் தெரியாமல்” – மனுஷ்ய புத்திரன் கவிதை)


*எனக்குத் தெரியாமல்*

 

என்னை உபயோகித்துக்கொள்பவர்கள்

அனைவருக்கும்

ஒரு பொதுவான

தொழில் நுட்பம் இருக்கிறது.

 

கடைசிவரை

அது எனக்குத் தெரியாமல்

பார்த்துக்கொள்கிறார்கள்..!”

 

*மனுஷ்ய புத்திரன்*




Friday 20 May 2022

படித்ததில் பிடித்தவை (“தனி தனி குழந்தைகள்” – ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதை)

 


*தனி தனி குழந்தைகள்*

 

அன்று நண்பகலில்

கம்பர் தெருவில் இருக்கும்

அடுக்குமாடிக் குடியிருப்பின்

முதல் தளத்து வீட்டின்

ஜன்னல் கம்பிவலையில்

தோன்றிய முகம் முதலில்

ஏதோவொரு நீர்வண்ண ஓவியமாகவே தோன்றியது

 

ஜன்னல்கள் வழியாக

உள்ளிருந்து வேடிக்கை பார்க்கும்

முகங்களை

சமீபமாக

வீடுகளில் நான் பார்க்கவேயில்லை

அதனால் அந்தச் சித்திரத்தை

ஊன்றிப் பார்த்தேன்

 

கம்பி வலையில் பதித்து

தெருவை வெறித்துக் குத்திப் பார்த்திருந்த

கண்கள்

மூன்று வயது குழந்தையுடையது

 

உதடு தடித்து கண்கள் பழுத்து

ஓரங்களும்

கனவுகளற்று அழுந்தியிருந்த

அந்த முகத்தில்

ஆட்டிசம் உருகிக் கொண்டிருக்கிறது

 

குட்டிப்பையா

குட்டிப்பாப்பா

மதி இறுகிய ஊர் இது

மதி இறுகிய தெரு இது

நீயும் நானும்

உள்ளேயும் வெளியேயும்

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்

தனி தனி

குழந்தைகள்..!

 

*ஷங்கர்ராமசுப்ரமணியன்*