எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 26 November 2018

*ரிவெஞ்ச்*


பெரிய ஆலமரத்தை
வெட்டியவுடன்
அந்த இடத்தில்
கட்டப்பட்டது
பத்து மாடி
அரசு அலுவலகம்.

வெட்டும் போது
மண்ணில் விழுந்த
ஆலம்பழமொன்றின்
விதையை
சில வருடம் கழித்து
தின்றது
அந்த மரத்தில் வசித்த
பறவை ஒன்று.

பறக்கும் போதே
எச்சமிட்டது அந்த பறவை.
எச்சத்தில் வந்த விதையை
வாங்கிக் கொண்டது
பத்து மாடி கட்டிடம்.

சரியாக கட்டிட வெடிப்பில்
விழுந்த விதைக்கு
குளிர் சாதனப் பெட்டி
தண்ணீர் கொடுக்க
அட்டகாசமாக வளர்ந்தது
ஆலமர வாரிசு.

பராமரிப்பு இல்லா
அரசு அலுவலகத்தில்
அரக்கனாக வளர்ந்து
உயர்ந்தது ஆலமரம்.

மேலே கிளைகளையும்
சுவரில் வேர்களையும்
நாளுக்கு நாள்
வளர வைத்த
அந்த வாரிசு மரம்
அந்த கட்டிடத்தையே
சில வருடங்களில்
சிதைய வைத்த காட்சியை
வெட்டப்பட்ட ஆலமரத்தில் வசித்த
அத்தனைப் பறவைகளும்
பார்த்துக் கொண்டிருந்தன...

- கி. அற்புதராஜு.

Monday 19 November 2018

படித்ததில் பிடித்தவை (‘தீக்குச்சி’ – கவிக்கோ. அப்துல் ரகுமான் கவிதை)



தீக்குச்சி


தீக்குச்சி   
விளக்கை ஏற்றியது. 

எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்.

பித்தன் 
கீழே எறியப்பட்ட 
தீக்குச்சியை  வணங்கினான்.

ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்?
என்று கேட்டேன்.  

ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது
உயர்ந்ததல்லவா என்றான்.

-   கவிக்கோ அப்துல் ரகுமான்.
(ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)

Friday 16 November 2018

அமர காவியம்



கிராமத்து தோட்டத்தில்
உயர்ந்து வளர்ந்த
இரண்டு தேக்கு மரங்களை
நகரத்தில் வீடு
கட்டப் போகும்
மகனுக்காக
வளர்த்து வந்தார்
தந்தை

நகரத்தில் மகனுக்கு
வங்கி கடன் கிடைப்பதில்
தாமதமாகி மரத்தின்
ஆயுள் நீண்டுக் கொண்டிருந்தது…

மகன் கிராமத்துக்கு
வரும் போதெல்லாம்
தேக்கு மரத்தை
வெட்டுவதைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கும்
தந்தையிடம்,
வங்கி கடன் தாமதமாவதால்
சற்றே பொறுத்து
வெட்டலாம் என
சாக்கு சொல்லி
அழகான அந்த மரங்கள்
வெட்டப்பட போவதை தவிர்த்து
மரத்தின்
ஆயுளை மேலும்
நீட்டிக்க செய்வான் மகன்…

மகனின் கருணையில்
குளிர்ந்துப் போனாலும்,
வங்கி கடன்
தனது ஆயுளை தீர்மானிப்பது
பிடிக்காத அந்த மரங்கள்
வெட்டுவதற்கு ஏதுவாக
சரித்துக் கொண்டன
இப்போது வீசிய

கஜா புயலில்..!

-     கி. அற்புதராஜு.

Monday 12 November 2018

பார்வைகள் பலவிதம்...



மாநகரத்தை நோக்கிய
பயணத்தில்
அந்த புறநகர்
ரயில் நிலையத்தில்
வந்து நின்ற மின்சார ரயிலின்
சன்னல் வழியே
பார்த்தப் போது
புதரின் மீது அபூர்வமாக
ஒரு கொக்கு தெரிந்தது.

கழுத்தை வளைத்து நெளித்து
ரயிலையே பார்த்துக் கொண்டிருந்தது.
நடைமேடை இருக்கையில்
இரு பெண்கள்
உட்காரும் வரை
கொக்குக்குள் நான்.

அதற்குப் பிறகு
இரண்டு பெண்களுக்குமான
இடைவெளியில்தான்
கொக்கு தெரிந்தது...

அந்த நொடிப் பொழுதில்...
அதுவரை கைபேசியை
பார்த்துக் கொண்டிருந்த
எதிர் இருக்கைக்காரர்
என்னைப் பார்த்ததும்,
அந்த பெண்கள்
என்னைப் பார்த்ததும்,
கொக்கு பறந்ததும்,
ரயில் புறப்பட்டதும்
ஒரே நேரத்தில் நிகழ்ந்தது..!

-   கி. அற்புதராஜு.

Wednesday 7 November 2018

படித்ததில் பிடித்தவை (‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ – கவிஞர் தாமரை கவிதை)



ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்...


கசப்பாக இருந்தது
அம்மா அப்பாவையும்
ஆற்றோர கிராமத்தையும்
நூறுமைல் தூரத்தில்
விட்டுவந்து
அப்படியென்ன படிப்பு?

விடுதி
சென்ம விரோதியாயிற்று...
காற்றடித்து என்
பிறந்தமண்ணை அள்ளி
வந்து போட்டதால்
சன்னல் மட்டும்
சிநேகிதியாயிற்று...

வாரம் இருமுறை நானும்
மும்முறை பெற்றோரும்
வந்து போனோம்...
ஆனாலும்
இதென்ன படிப்பு
இதென்ன வாழ்க்கை...?

குறைந்தது நூறுமுறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்த காலத்தையும்,
வந்து அழைத்துப் போங்களையும்...

திடீரென்று எனக்குள் ஒருகதவு
அறைந்து திறந்தது
என் அறைக் கதவு
திறந்தது போலவே...

அறைத் தோழியாய் வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது.
யாழ்ப்பாணத்துக் காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...

என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்

அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
அடுத்தமுறை அங்கே
வரும்போது
ஒரு சிநேகிதியை அழைத்து
வருவேன்...
முடிந்தால் அவளையும்

மகளே என்று விளி...

- தாமரை.

Tuesday 6 November 2018

படித்ததில் பிடித்தவை (வாழ்க்கைப் பிரச்சனை – கவிஞர் தாமரை கவிதை)



வாழ்க்கைப் பிரச்சனை

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்கவே முடியவில்லை

 கோடை மழையல்ல அது
கொட்டும் மழை!

நானும் குட்டித் தம்பியும்
கடைசித் தங்கையும்...
எனக்குதான் வயது அதிகம்
எட்டு!

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோம்
தெருவெல்லாம் ஆறாக நீர்...
மின்னலும் இடியுமாய்
வானத்திலே வன்ம யுத்தம்!

எதிர் சாரியிலிருந்த குடிசைகளெல்லாம்
முழ்கிக் கொண்டிருந்தன
கூச்சலும் குழப்பமும் எங்கெங்கும்...

உயிர்ப் பிரச்சனையும் வாழ்க்கைப்
பிரச்சனையுமாக
ஊரே ரெண்டுபட்டது!

வேடிக்கைப் பார்த்த என்னை
எட்டி இழுத்தாள் குட்டித் தங்கை
உள்ளே வா அண்ணா...

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்கவே முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்!

-   தாமரை (கணையாழி, நவம்பர்-1995).

Sunday 4 November 2018

படித்ததில் பிடித்தவை (நினைவில் விழும் கற்கள் – கவிஞர் இளம்பிறை கவிதை)



நினைவில் விழும் கற்கள்

இப்போது நினைத்தாலும்
வருத்தமாக உள்ளது...

காய வைத்த தானியங்களை
காவல் காக்கும் சிறுமியாக
காக்கைக் குருவிகள் மீது
கல்லெறிந்து கொண்டிருந்ததை..!

-   இளம்பிறை, சாட்டியக்குடி.