எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 24 March 2018

படித்ததில் பிடித்தவை (“என் ஒற்றைக் கவிதை” – அ. வெண்ணிலா கவிதை)



என் ஒற்றைக் கவிதை
சில நூறு விநாடிகளைப்
பார்த்திருக்கின்றன பூக்கள்.

சில நூறு மாதங்களைக்
கடந்திருக்கின்றன செடிகள்.

சில நூறு ஆண்டுகளை
சுவாசித்திருக்கின்றன மரங்கள்.

பல நூறு தலைமுறைகளை
வாசித்துக் கொண்டிருக்கும் மலைகள்.

பூ, செடி, மரம், மலை
அத்தனையும் புரட்டிப் பார்த்துவிடும்
என் ஒற்றைக் கவிதை.

-    அ. வெண்ணிலா (ஆதியில் சொற்கள் இருந்தன... கவிதை தொகுப்பிலிருந்து.)

Friday 16 March 2018

படித்ததில் பிடித்தவை (“பெயரெச்சம்” – தமிழ்ப்பறவை கவிதை)



பெயரெச்சம்
நதியில் உன் பெயர்
எழுதிமுடிக்கும் முன்பே
நகர்ந்து விட்டிருந்தது
நதியும் பெயரும்.
விரல்களில் உன்
பெயரெச்சம்
- தமிழ்ப்பறவை.

Tuesday 6 March 2018

தூக்கணாங்குருவி கூடு



தூக்கணாங்குருவி கூடு
பார்க்க வீட்டுக்கு வரீங்களா?
ஞாயிறு காலை
நண்பரிடமிருந்து கைப்பேசி
அழைப்பு.

சிறு வயதில்
கிராமத்தில் பார்த்தது
நகர வாழ்க்கையில்
அபூர்வமான நிகழ்வு என
குளித்து விட்டு உடனே
கிளம்பினேன்
அடுத்த தெருவிலிருக்கும்
நண்பர் வீட்டுக்கு.

சொந்த வீட்டில்
கீழ்தளத்தில்
குடியிருக்கும் நண்பர்
வாடகைக்கு விட்டிருக்கும்
முதல் தளம்
இரண்டாம் தளம் கடந்து
மொட்டை மாடிக்கு
அழைத்துச் சென்றார்.

மூன்றாம் தளம் வரை
உயர்ந்து வளர்ந்து
சூரியனை தரிசிக்கும்
மாமரத்தில் கட்டியிருந்த
தூக்கணாங்குருவி
கூட்டை மிக அருகில்
பார்த்தோம்.

எங்களது குரல் கேட்டு
தூக்கணாங்குருவி
வெளியே வந்தது.
சுற்றும் முற்றும் பார்த்து
கீச் கீச்சென்று சத்தமிட்டு
பறந்து சென்றது.
அதன் துணைக் குருவியும்
அதனை பின் தொடர்ந்தது.
பறவைகளுக்கு 
வார விடுமுறை 
கிடையாது போல.

தனக்கும் துணைக்குமென
இரண்டு அடுக்கு கூடு.
அவ்வளவு அழகான கூட்டில்
காதல் தெரிந்தது.
முக்கியமாக மற்ற குருவிகளுக்கு
வாடகைக்கு விடவில்லை..!”

-    கி. அற்புதராஜு.