எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 29 November 2021

படித்ததில் பிடித்தவை (“இருட்டு” – பொம்பூர் குமரேசன் கவிதை)

 


*இருட்டு*

 

அப்பா குடித்த

பிராந்தி பாட்டில்

மண்ணெண்ணை

விளக்காக எரிகிறது

எங்கள் வீட்டை

இருட்டாக்கியபடி..!

 

*பொம்பூர் குமரேசன்*


Tuesday 16 November 2021

படித்ததில் பிடித்தவை (“மறதியின் மணம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மறதியின் மணம்*

 

யாரோ மறந்துவிட்டுப்போன பூக்கள்

பேருந்தின் ஜன்னலோரத்தில் இருந்தன.

எட்டிப்பார்த்த பூவிதழ்கள்

காற்றில் அசைந்தன.

அது அநாதையாகிவிட்ட

குழந்தை ஏக்கம் மனதில் ஓடியது.

 

அடுத்த நிறுத்தத்தில்

வந்து ஏறிய பெண்

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

அதை மடியில் எடுத்து வைத்தாள்.

அதிலிருந்து ஒரு பூவை எடுத்து

தலைக்கு வைத்துக்கொண்டாள்

புன்னகை மணக்க.

 

எங்கேயாவது எப்போதாவது

மனதை வாடவிடாமல்

யாராவது பார்த்துக்கொள்கிறார்கள்..!

 

*ராஜா சந்திரசேகர்*




Monday 15 November 2021

படித்ததில் பிடித்தவை (“திரும்பிப் பார்க்கிறது” – யுகபாரதி கவிதை)

 


*திரும்பிப் பார்க்கிறது*

 

போகும்போது

கூப்பிடக் கூடாதென்று

தயங்கி நிற்கிறாய்.

 

கூப்பிட நினைத்து

மூச்சிரைக்க

ஓடி வருவாயோவெனத்

திரும்பிப் பார்க்கிறது

என் காதல்..!”

 

*யுகபாரதி*




Sunday 14 November 2021

படித்ததில் பிடித்தவை (“பூ விற்கையில்” – கல்யாண்ஜி கவிதை)

 


*பூ விற்கையில்* 

 

இத்தனை காலம்

சவரக் கத்தியைத்

தீட்டி மகிழ்ந்தவன்

பசிக்கு பயந்து

மல்லிகைப் பூ விற்கையில்,

எனக்கு மட்டும்

தெரிகிறது…

கத்தித் துரு

ஒவ்வொரு பூவிலும்..!

 

*கல்யாண்ஜி*




Saturday 13 November 2021

படித்ததில் பிடித்தவை (“கதை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*கதை*

 

குழந்தை பசியைச் சொல்கிறது.

அம்மா கதை சொல்லி தூங்கவைக்கப் பார்க்கிறாள்.

குழந்தை மறுபடியும் பசியைச் சொல்கிறது.

அம்மா வேறொரு கதை சொல்கிறாள்.

புரிந்துகொண்ட குழந்தை கேட்கிறது

இன்னொரு கத சொல்லும்மா..!

 

*ராஜா சந்திரசேகர்*




Friday 12 November 2021

படித்ததில் பிடித்தவை (“உயரம்” – ஈரோடு தமிழன்பன் கவிதை)

 


*உயரம்*

 

கயிறு

அறுந்த போதுதான்

பட்டத்துக்கு தெரிந்தது

உயரம்

தன்னுடையதல்ல என்று..!

 

*ஈரோடு தமிழன்பன்*




Wednesday 10 November 2021

படித்ததில் பிடித்தவை (“அப்பா” – லட்சுமி மணிவண்ணன் கவிதை)


 

*அப்பா*

 

அப்பா...

உன்னுடைய தோல் சுருங்கிய உருவம்

சதை வற்றிய வடிவம்

ஆற்றல் குறைந்த நீ.

 

ஓங்கிக் கத்தாதே

சத்தமிடாமல் உற்றுப் பார்க்க வேண்டிய

ஒன்றிருக்கிறது

அதன்

இப்போதைய

தோற்றத்தில்.

 

உன்னை தாங்கி நின்ற தூண்

சற்றே சாய்ந்து வருகிறது.

எவ்வளவு சாய்கிறதோ

அவ்வளவுக்கு

உன்னையும் சேர்த்து இழுத்துக் கொண்டு

சாய்ந்து வருகிறது.

எவ்வளவுக்கு சாய்கிறதோ

அவ்வளவுக்கு

உன் குழந்தை

நிமிர்ந்து

வருகிறது

தவழ்தலில் தொடங்கி.

 

மாயக் கயிற்றின் விட்டம்

நிமிர நிமிர

சாய சாய..!

 

*லட்சுமி மணிவண்ணன்*



Monday 8 November 2021

படித்ததில் பிடித்தவை (“பாதை” – இரா.பூபாலன் கவிதை)

 

*பாதை*

 

எப்படியோ வழிதவறி

யாருமற்ற

வீட்டுக்குள் நுழைந்திருக்க வேண்டும்.

சன்னல்களில்

சுவர்களில்

மோதி மோதித்

திரும்புகிற

ஒரு மைனாவை

வீட்டிலிருந்து வெகுதூரத்தில்

இருந்தபடி

தன் கை பேசிக் காணொளியில்

காண்பவன்

செய்வதறியாது திகைக்கிறான்.

 

ஒளிர்திரையை

இரு விரல்களால்

பெரிதாக்கிப் பெரிதாக்கி

அங்கலாய்க்கிறான்.

அது பயத்தில்

கண்ணாடி சன்னலில்

ஆக்ரோஷமாக மோதுகிறது.

 

ஜீம் செய்கிறான்

இன்னும் அதிவேகமாகத்

தொடுதிரையை மோதுகிறது.

 

இன்னொரு ஜீம்

அது இவன் விழித்திரையில்

மோதுகிறது.

 

அடுத்த ஜீமில்

அலகால் இவனை இரண்டாகப் பிளந்து

வெளியேறிப் பறக்கிறது..!

 

*இரா.பூபாலன்*

(திரும்புதல் சாத்தியமற்ற பாதை

தொகுப்பிலிருந்து - 2021)


Sunday 7 November 2021

படித்ததில் பிடித்தவை (“திரை” – தேவதேவன் கவிதை)

 


*திரை* 

 

அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு

ஆர்வத்துடன் பிதற்றும் கவிதை இது :

 

எல்லாம் எத்துனை சுலபமாகவும்

வேடிக்கையாவும் விளையாட்டாகவும்

இருக்கின்றன..!

 

ஆறுக்கு ஆறு அடியுள்ள இரட்டைக் கட்டிலில்

குறுக்கே ஒரு திரை.

பத்தடி தூரத்தில்

எதிர் எதிரே உரையாடிக் கொண்டிருக்கும்

இரண்டு சன்னல்களையும் பற்றி

இணைத்தபடி நீண்ட கொடிக்கம்பியில்

நன்றாய்த் தொங்கும் அது.

 

இந்தப் பக்கம்,

அவன் வாசிப்புக்கும், கவிதையாக்கலுக்குமான

மின்விளக்கின் பேரொளி.

 

அந்த பக்கம்,

அவன் துணைவியார் நல்லுறக்கத்துக்குகந்த

நயமான இருள்.

 

உறக்கமற்ற இரவில் அவன் துணைவியார்

உடல் அலுங்காமல் திரைவிலக்கி

எட்டிப் பார்த்துக் கொள்கிறாள்..!

 

*தேவதேவன்*