எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 30 September 2020

படித்ததில் பிடித்தவை (“பார்வை” – பிரான்சிஸ் கிருபா கவிதை)

 


*பார்வை*

 

பஸ் நிறுத்தங்களில்

காத்திருக்கும் பார்வையில்

எந்த கணம்

எவளை பேரழகியாக்கும்

என்பது நிச்சயங்களற்றது..!

 

*பிரான்சிஸ் கிருபா*


Tuesday 29 September 2020

படித்ததில் பிடித்தவை (“நான் நானில்லை..!” – கவிக்கோ. அப்துல் ரகுமான் கவிதை)

 


*நான் நானில்லை..!*

 

நான்

வெள்ளைக் காகிதமாயிருந்தேன்

என்மேல்

யார் யாரோ

ஏதேதோ

கிறுக்கினார்கள்

இப்போது

நான் நானில்லை..!

 

*கவிக்கோ. அப்துல் ரகுமான்*


Monday 28 September 2020

படித்ததில் பிடித்தவை (“எல்லாம் தெரிந்தவன்” – மகுடேஸ்வரன் கவிதை)

 


*எல்லாம் தெரிந்தவன்*

 

ஊர்வீதி எல்லாம் அத்துபடி

சந்துபொந்து குண்டுகுழி

சாக்கடைத் தேங்கலும் கூட.

 

நாய்களோடு நல்ல பரிச்சயம்

இது யார்வீட்டுப் பூனை என்பதும் தெரியும்.

 

எந்த மரநிழல் நிற்க ஏற்றது

எது பூத்துதிர்கிறது

எல்லாம் அறிவான்.

 

யார் இட்ட கோலம் அழகு

அவனுக்குத் தெரியும்.

 

முச்சந்தியில் இஸ்திரி போடுபவனிடம்

தினந்தோறும்

பீடிக்கு நெருப்பு வாங்கி

ஒரு சிநேகிதத்தைப் பெற்றுவிட்டான்.

 

சித்தர் பாடல்களை

அப்படியே ஒப்பிக்கிறான்.

 

யாரோ தந்திருக்கிறார்கள்

பீட்டர் இங்கிலாந்து சட்டை அணிந்திருக்கிறான்.

 

மளிகைக்கடைக்காரருக்குச்

சில்லறை தருகிறான்.

 

ஏந்தாயி கண்ணு கலங்கியிருக்கு..?

விசாரிக்கவும் தெரிகிறது.

 

கிரிக்கெட் பந்து அவன்மீது பட்டது

சிரித்தபடி எடுத்து வீசுகிறான்.

 

அவனுக்கு யார்மீதும் புகார் இல்லை

புகழ்ச்சி இல்லை

கேள்வி இல்லை

விமர்சனம் இல்லை.

 

நேற்றை மறக்க

நாளையைத் துறக்கத்

தெரிந்திருக்கிறது.

 

அவனைப்

பிச்சைக்காரன் என்று

எப்படிச் சொல்ல முடியும்..?

 

*மகுடேஸ்வரன்*


Sunday 27 September 2020

படித்ததில் பிடித்தவை (“கற்பாவை” – உமா மகேஸ்வரி கவிதை)

 


*கற்பாவை*

 

சமையலறையிலிருந்து

பார்த்துக் கொண்டிருந்தேன்

 

சுவரோடு பந்து விளையாடுகிறவனை

 

பந்தை எறிய எறிய

திருப்பியடித்தது சுவர்

 

உற்சாகமாக

ஒரேயொரு முறையாவது

பந்து வீச

சுவருக்கும் வாய்ப்புத் தந்திருந்தால்

இப்படி மூர்க்கமாய் உடைத்திருக்காது..!

 

*உமா மகேஸ்வரி*


Saturday 26 September 2020

படித்ததில் பிடித்தவை (“பூக்கள்” – பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதை)

 


*பூக்கள்*

 

செடியோடு

கிடக்கும் பூக்கள்

என்னதான் செய்துவிடப் போகிறது

கண்ணில் படுவதைத் தவிர..!

 

*பூமா ஈஸ்வரமூர்த்தி*


Friday 25 September 2020

படித்ததில் பிடித்தவை (“ஒரு சாப்ட்வேர் பக்கம்” – கவிதை)

 


*ஒரு சாப்ட்வேர் பக்கம்*

 

மீண்டும் மனிதன்

உலகம் தட்டை என்று

சொல்லும் காலம்

வந்து விட்டது

ஒரு படித்த கணிப்பொறி இளைஞனின்

புவியியல் சொல்கிறது

உலகத்தின் பரப்பு 14 அங்குலம் என்று..!

 

இன்று மாலை

உயிர் நண்பனின்

திருமண வரவேற்பு விழா.

வழக்கம் போல் செல்ல முடியாது.

ப்ராஜெக்ட் டெட்லைன் இன்று.

ஈமெயிலில் தான் அக்ஷதை தூவ வேண்டும்.

 

இரவு உணவிற்கு

காத்துக் கொண்டிருக்கும் குடும்பம்

செல்ல முடியாது.

மீட்டிங்...

தொலைபேசியில் மனைவியை

சமாதானப்படுத்த வேண்டும்.

 

மனைவியின் கைபிடித்ததை விட மௌசை பிடித்ததே அதிகம்.

பிள்ளைகளின் விரல் தொட்டு ஸ்பரிசத்தை விட

கீ போர்டை ஸ்பரிசத்ததே அதிகம்..!

 

சூரிய வெளிச்சத்தை

பார்த்து விட்டு

பொருட்களை பார்க்கையில்

கண்கள் இருண்டு விடுவதைப் போல

கணிப்பொறித் திரையையே

பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள்

குடும்பத்தை பார்க்கையில்

உறவுகள் இருண்டு

கிடக்கின்றன..!


Thursday 24 September 2020

படித்ததில் பிடித்தவை (“எடை சீட்டு” – கவிதை)




*எடை சீட்டு*

 

சிறுமியின்  எடை சீட்டு

வெளிவரும் முன்னால்

ரயில் வந்துவிட்டது.

 

அம்மாவின் கை பிடித்து

ஏமாற்றத்துடன்

ரயில் ஏறினாள் சிறுமி.

 

தொண்டையில்

சிக்கிக் கொண்ட காசுடன்

வண்ணமயமாக விழித்தபடி

அவளை வழியனுப்பி வைத்தது

இயந்திரம்..! 

Wednesday 23 September 2020

படித்ததில் பிடித்தவை (“குழந்தைகள் கை காட்டாத ரயில்” – நா.முத்துக்குமார் கவிதை)

 


*குழந்தைகள்  கை காட்டாத  ரயில்*

 

குழந்தைகள்

கை காட்டாத

கூட்ஸ் ரயிலில் இருந்து

கொடியசைத்துப் போகிறான்

கடைசிப் பெட்டியில் கார்டு..!

 

*நா.முத்துக்குமார்*

Tuesday 22 September 2020

படித்ததில் பிடித்தவை (“இரவின் மௌனம்” – அ.வெண்ணிலா கவிதை)



*இரவின் மௌனம்*

 

இரவின்

மெளனத்தை

பறவையின்

முதல் குரல்

கலைக்கிறது..!

 

*அ.வெண்ணிலா* 

Monday 21 September 2020

படித்ததில் பிடித்தவை (“வண்ணம்” – யாழிசை மணிவண்ணன் கவிதை)

 


*வண்ணம்*

 

கொம்பில்

வண்ணம் பூசிய பிறகும்

வண்டி

இழுக்கத்தான் போகும்

மாடுகள்

வந்து போகும்

நம் தேர்தலைப்போல..!

 

*யாழிசை மணிவண்ணன்*