எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 23 June 2020

படித்ததில் பிடித்தவை (“அம்மாவின் கை” – யுகபாரதி கவிதை)


*அம்மாவின் கை*


ஊருக்குப் போய் திரும்பிய அம்மா
குழந்தைகளின் முகத்தைப் பார்க்கிறாள்

குழந்தைகள் கையைப் பார்க்கின்றன
தூக்கி  வளர்த்த கையை
சோறூட்டிய கையை
தலை வாரிவிட்ட கையை

தாலாட்டுக்கேற்பத் தட்டிய கையை
தகப்பன் அடிக்க வர
தடுக்க வந்த கையை
அம்மாவின் கை அப்படியேதானிருக்கிறது

குழந்தைகளின் கண்கள்தான்
மாறிவிடுகின்றன சமயத்திற்கேற்ப..!

    *யுகபாரதி*

Monday, 22 June 2020

படித்ததில் பிடித்தவை (“சந்திப்பு” – நா.முத்துக்குமார் கவிதை)


*சந்திப்பு*

பேருந்தில்
டீக்கடையில் என
பொருள்வாயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:
காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?
என் பதில்:
பத்து வருடத்துக்கு முந்தைய
டென்த் ஏ கிளாஸ் ரூம்ல..!

    *நா.முத்துக்குமார்*

Sunday, 21 June 2020

*பார்வை ஒன்றே போதுமே*



காலை
வீட்டு மாடியில்
யோகாசனம்
செய்யும் போது
ஒழுங்கீனங்களை
சரியாக்கியும்,
அலைபாயும் மனதை
கட்டுப்படுத்தியும்
செய்யவைக்கிறது...

எதிர் வீட்டிலோ
அடுத்த வீட்டிலோ
நம்மை கவனிக்கும்
யாரோ ஒருவரின்
பார்வை..!”

       *கி.அற்புதராஜு*.

Saturday, 20 June 2020

படித்ததில் பிடித்தவை (“பூனை” – மகுடேசுவரன் கவிதை)


*பூனை*

வீதியில் சென்ற சிறுமி
சாலையைக் கடக்க முயன்ற
பூனையைப் பார்த்து நின்றாள்.
பூனையும் நின்றது
அவளைப் பார்த்து..!

யார் முதலில்
குறுக்கிட்டுக் கடப்பது என்ற
யோசனையில்
இருவரும் தயங்கி நின்றனர்.

பிறர்பொருட்டு
நாம் காட்டவேண்டிய
இத்தகைய சிறு அக்கறைகளைத்தாம்
நாம் என்றோ இழந்துவிட்டோம்..!

    *மகுடேசுவரன்*

Friday, 19 June 2020

படித்ததில் பிடித்தவை (“ஈரம்” – மனுஷ்யபுத்திரன் கவிதை)



*ஈரம்*

சிலர் வருவதும்
வந்துவிட்டு போவதும்
பெரும் மழை பெய்து
ஒய்ந்தது போலத்தான்
இருக்கிறது.

ஆனால்
எங்கும் ஒரு சொட்டு
ஈரமில்லாமல்..!

    *மனுஷ்யபுத்திரன்*

Thursday, 18 June 2020

படித்ததில் பிடித்தவை (“தேவதை” – சுகுமாரன் கவிதை)


*தேவதை*

தேவதைகளுக்கு
ஜாதகமே கிடையாது..!

அவளுக்கு
ஜாதக தோஷம்
என்று சொன்னவனை
என்ன செய்ய..?

    *சுகுமாரன்*

Wednesday, 17 June 2020

படித்ததில் பிடித்தவை (“அவர்” – தேவதேவன் கவிதை)


*அவர்*

தூரத்தில் போய்க்கொண்டிருப்பது
அவரே தான்
முகத்தைச் சொல்லிவிடுகிறது
முதுகும் நடையும்..!

    *தேவதேவன்*

Tuesday, 16 June 2020

படித்ததில் பிடித்தவை (“உங்களிடம் டியூசன் படிக்காத உங்கள் மாணவன்” – மகுடேசுவரன் கவிதை)


*உங்களிடம் டியூசன் படிக்காத உங்கள் மாணவன்*

நான்
உங்களிடம் பள்ளியில் படிக்கிறேன்.
ஆனால் நான்
என் சகாக்கள் பலரையும்போல்
உங்களிடம் டியூசன் படிக்கவில்லை

ஐயா
என்னிடம் மாற்றுச் சீருடை இல்லை.
இருக்கும் இந்த ஒரே கால்சட்டையும்
விதைப்பை அடியில் கிழிபட்டிருக்கிறது.
அதனால்தான் எப்பொழுதும்
கால்கட்டப்பட்டவன் போலவே அமர்கிறேன்.

காதறுந்த துணிப்பையில்
என் புத்தகங்களைத் திணித்திருக்கிறேன்.
முத்து முத்தான கையெழுத்தால்
நிறைந்து வழியும் என் ஏடுகள்
உங்களைப் பார்த்துப் பரிகாசித்ததை
நான் அறியவில்லை ஐயா..!

என் உணவுப் போசியில்
கொஞ்சம் பழைய சோறு இருக்கிறது.
எப்பொழுதும் நான்
நான்கு பேர் மத்தியில் உண்ணாமல்
தனித்து மூலையில் அமர்ந்து
வாரி வாரிச் சாப்பிடுவதை
நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒரேயொரு பழைய பேனா வைத்திருக்கிறேன்.
கொஞ்சம் மை கசியும் என்றாலும்
மாவுபோல் எழுதும்
அது காணாமல் போன அன்று
நான் கதறிக் கதறி அழுதேன்.
புல்மேயும் ஆடுபோல்
குனிந்த தலை நிமிராமல் தேடி
மைதானத்தில் கண்டெடுத்தபோதுதான்
எனக்கு உயிரே வந்தது.

காலில் செருப்பில்லை.
என்னிடமிருப்பவை
சகிக்கமுடியாத ஏழை அறிவாளியின்
தீட்சண்யம் மிகுந்த கண்கள் மட்டுமே.
மறதியறியாத
கத்திக் கூர்மையை ஒத்த
சாம்பல் மூளை மட்டுமே.

ஐயா
உங்கள் புறக்கணிப்பின் நெருப்புக்கு மத்தியில்
ஒரு பாவியைப்போல் வளைய வருகிறேன்.
காரணமேயில்லாமல்
என்னைக் கடியாதீர்.
ஒரு மாணவனை எப்படி நொறுக்குவது என்று
நீங்கள் அறிந்திருப்பதுபோல்
ஓர் ஆசானிடம் எப்படி அணுக்கமாவது என
நான் அறியவில்லை ஐயா..!

பாடம் எடுக்கும்போது
என் கண்களையும் ஒருமுறை பாருங்கள் ஐயா..!

                    *மகுடேசுவரன்*

Monday, 15 June 2020

படித்ததில் பிடித்தவை (“பூக்கள்” – தேவதேவன் கவிதை)


*பூக்ள்*

பூஜைக்கு என
பூக்களைப் பறிக்காதீர்கள்
அவை ஏற்கனவே
பூஜித்துக்கொண்டு
தானிருக்கின்றன..!

    *தேவதேவன்*

Sunday, 14 June 2020

படித்ததில் பிடித்தவை (“இலை” – மகுடேசுவரன் கவிதை)


*இலை*

அமைதியைத் தவிர
வேறெது
அந்த இலையை
உதிரச் சொன்னது..!

*மகுடேசுவரன்*