எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 4 April 2019

பேசாத எருமைகள்...



அலுவலகம் செல்லும் நான்
கூட்டத்தில் நின்று கொண்டே
ரயிலில் பயணிக்கையில்...

நிற்பவர்களிடையே புகுந்து
முதுகில் பையுடன்
எல்லோரையும் உரசிக் கொண்டே
நகரும் இளைஞன்
யாரையும் நகர சொல்லவில்லை.
காதில் ஹெட்செட்டுடன்
பாடல் கேட்டுக் கொண்டே
செல்கிறான் அவன்..!

சற்று நேரம் கழித்து
யாரோ முதுகில்
கை வைப்பது போல
உணர்கையில்
பின்னால் ஒருவன்
முண்டிக் கொண்டிருந்தான்
முன்னே செல்ல.
அவனும் பேசவில்லை.
வளைந்து நெளிந்து
இடம் கொடுத்தால்
என் இடத்தில் சரியாக
இடம் பிடித்தவன்
கைப்பேசியை
பையிலிருந்து எடுத்துப்
படம் பார்க்க தொடங்கினான்..!

இறங்கும் இடம்
நெறுங்கியதும்
சார் கொஞ்சம் வழி விடுங்க...
என நான் மட்டும்
பேசியப்படியே சென்றது
எனக்கே விநோதமாக
இருந்தது.

ரயில் நிலைய வாயிலை
கடக்கும் போது
வழி மறைத்து நின்ற
இரண்டு எருமை மாடுகள்
இறங்கி வருபவர்களைப்
பார்த்ததும் அம்மா.. ம்மா... என
குரல் எழுப்பி
பாதையை விட்டு
விலகி நடந்தன..!

- கி. அற்புதராஜு.

Thursday, 28 March 2019

படித்ததில் பிடித்தவை (‘ஒரு விதை புரட்சி’ – ராஜ சுந்தரராஜன் கவிதை)


ஒரு விதை புரட்சி

நானும் என் மந்தையும்
ஒரு விதையின் நிழலில்
இளைப்பாறுகிறோம்
அது மரமாகி வளர்ந்து
நிற்கிறபடியால்..!

- ராஜ சுந்தரராஜன்.

Friday, 22 March 2019

படித்ததில் பிடித்தவை (‘நேரம்!’ – சுஜாதா-வின் குட்டிக்கதை)


நேரம்!

ஒர் இளம் நகரவாசி, ‘நேரம் பொன்னானது. அதை வீணாடிக்கக் கூடாது என்று நம்பினார்.

அதனால், காலை அலுவலகத்துக்குப் புறப்படுமுன் ஷேவ் பண்ணிக்கொண்டே குளிப்பார். பாத்ரூம் போகும்போதே, பேப்பர் படிப்பார். தோசையோ, இட்லியோ வெகுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, கையை காலை ஆட்டி, உடற்பயிற்சி பண்ணிக்கொண்டே, ரேடியோவில் பக்திப் பாடல்கள் கேட்பார்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிஷத்தையும் விரயமடிக்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருமுறை இந்த அவசரத்தின்போது ஒரு சின்ன பிழை நேர்ந்துவிட்டது. மாறுதலுக்காக ஆம்லெட் சாப்பிட எண்ணி, அதைக் கையால் சாப்பிட்டால் நேரமாகும்; கையலம்ப வேண்டும் என்று, முள் கரண்டியால் சாப்பிடும்போது நியூஸ் பேப்பரில் கவனமிருந்ததால், அக்கரண்டி அவர் கண்ணைக் குத்திவிட்டது. கண்ணின் விழி, கரண்டியால் வந்துவிட்டது.

இப்போது அவர் ஒரு கண்ணால் ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறார். நேரம் பொன்னானது என்று யாராவது சொன்னால் சீறுகிறார். அவ்வப்போது அமைதியாக மீன் பிடிக்கச் சென்று விடுகிறார். மணிக்கணக்காக ஒரு மீனுக்காகக் காத்திருக்கிறார், பிடித்து மறுபடி நீரில் விட்டு விடுகிறார்.

நீதி : நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது.

 - சுஜாதா.

Thursday, 21 March 2019

படித்ததில் பிடித்தவை (‘குப்பை’ – கண்மணி குணசேகரன் கவிதை)


குப்பை

உதிர்ந்து கிடந்த
பூக்கள்...
அழகு.

கூட்டும்போதுதான்
குப்பையாகிவிட்டது..!

- கண்மணி குணசேகரன்.

Tuesday, 19 March 2019

படித்ததில் பிடித்தவை (‘பைகள்’ – கண்மணி குணசேகரன் கவிதை)


பைகள்

வண்ண வண்ண
சணற் பைகள்.
வழிமறித்து
விற்றுகொண்டிருந்தான்.

வெளுத்து விடும் என்றேன்.

ஆமா சார்,
வெளுத்து, சாயம் போவனும்.
நாளாவட்டத்தில் கிழியனும்.
கடைசியில...
மண்ணோட மண்ணா-
மக்கிப் போவணும்.

- கண்மணி குணசேகரன்.

Wednesday, 6 March 2019

தட்சணை


சாமி கும்பிட்டபின்
நூறு ரூபாய்க்கு
சில்லறை கேட்ட
பக்தனுக்கு
தீப ஆராதனை
தட்டிலிருந்து எடுத்து
பத்து பத்து ரூபாயாக
சில்லறை கொடுத்தார்
கோவில் அர்ச்சகர்.

அதிலிருந்து
பக்தன் கொடுத்த
பத்து ரூபாய்
தட்சணையை மறைத்து
நூறு ரூபாய் மட்டும்
தெரியும் படி
தட்டின் மீது
வைத்தார் அர்ச்சகர்.

அடுத்து வரிசையில்
வரும் பக்தர்கள்
நூறு ரூபாயாக
வைப்பார்களா என்று
அர்ச்சகரும்,
பரமனும்
அருகில் அமர்ந்திருக்கும்
பார்வதியும்
ஆவலுடன்
பார்த்துக்கொண்டிருந்தனர்..!


-   கி. அற்புதராஜு.

Tuesday, 26 February 2019

படித்ததில் பிடித்தவை (‘பொய்’ – வண்ணதாசன் கவிதை)


பொய்
பழைய சேலை கேட்டு ஒருத்தி
வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக
எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக
ஒரு பொய் சொல்கிறாள்.

வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள்
இன்னொரு தடவை வந்தால்
தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க
இப்போதுதான் அனாதை விடுதிக்குக்
கொடுத்தோம் என்று
ஒரு பொய் சொல்கிறார்கள்.

அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக
அசையாமல் இருக்கிறது வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்..!

- வண்ணதாசன்.

Tuesday, 19 February 2019

வைக்க மறந்த கதை...


கல்யாண மண்டபத்தில்
காலை விருந்தில்
காசி அல்வா, பாசந்தி,
பொங்கல், வடை,
ஊத்தப்பம், மசால் தோசை,
இடியாப்பம் - தேங்காய் பால்,
உப்புமா - தயிர்,
இட்லி, பூரி - கிழங்கு...
என அடுத்தடுத்து
அதிரடியாக
கவனிக்கப்பட்டாலும்...

ஏனோ முழுமை பெறாமல்
அன்று முழுவதும்
உறுத்திக் கொண்டிருந்தது...

பரிமாறும் போது
என் இலைக்கு முன்
தீர்ந்துப் போய்,
திரும்பவும் பரிமாறுகையில்
என் இலையில் வைக்க மறந்த
கேரளத்து புட்டு..!
            
                   -  கி. அற்புதராஜு.

Friday, 8 February 2019

படித்ததில் பிடித்தவை (‘செத்த மீன்’ – கு.அழகர்சாமி கவிதை)


செத்த மீன்

ஒரு மீன் வரைந்து கலர் அடிஎன்பார்
டீச்சர்.

குழந்தை
கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே.

கட்டத்துக்குள் அடிஎன்பார்
டீச்சர்.

குழந்தை
மறுபடியும் கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே
மீன் நகர்ந்திருக்கும் நீந்தியென்று.

கத்துவார் டீச்சர் இம்முறை
கட்டத்துக்குள் அடிஎன்று.

பரிதாபமாய் டீச்சரைப் பார்த்துக் கொண்டே
கட்டத்துக்குள் கலரடிக்கும் குழந்தை
செத்த மீனின் மேல்.

- கு. அழகர்சாமி.

Wednesday, 6 February 2019

படித்ததில் பிடித்தவை (‘ருசி’ – யுகபாரதி கவிதை)



ருசி

அப்படியொன்றும் ருசியானதில்லை
அம்மாவின் சமையல்...

பரிமாறுபவள் அம்மா என்பதால்
ஆகிவிடுகிறது அப்படி...

பழக்கத்திலிருந்து விடுபடாமல்
உணரமுடியாது அன்பின் ருசியை..!

-   யுகபாரதி (மராமத்து).

Sunday, 20 January 2019

அக்கரை சிவப்பு


கிராமத்திலிருந்து
மாநகரத்துக்குள்
பேருந்தில் பயணிக்கிறேன்...

சிக்னலுக்காக காத்திருக்கையில்
பக்கவாட்டில் பார்க்கிறேன்...
மாநகர பூங்காவில்
பல வண்ணங்களில்
அவ்வளவு அழகானப் பூக்கள்.

கிராமம் தோற்றுவிடும் படி
பச்சை பசேலென புல்வெளி...
அதையே பார்த்து ரசிக்கும்
மாநகரவாசி மீது இனம் புரியா
பொறமை...

கொடுத்து வைத்தவன் என்ற
எண்ணம் மரித்தது...

அவன் புல்லின் மீது
எச்சில் துப்பும் போது..!

                 - கி. அற்புதராஜு.