செத்த மீன்
ஒரு
மீன் வரைந்து ‘கலர் அடி’ என்பார்
டீச்சர்.
குழந்தை
கலரடிக்கும்
கட்டத்துக்கு வெளியே.
‘கட்டத்துக்குள் அடி’ என்பார்
டீச்சர்.
குழந்தை
மறுபடியும்
கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே
மீன்
நகர்ந்திருக்கும் நீந்தியென்று.
கத்துவார்
டீச்சர் இம்முறை
‘கட்டத்துக்குள் அடி’ என்று.
பரிதாபமாய்
டீச்சரைப் பார்த்துக் கொண்டே
கட்டத்துக்குள்
கலரடிக்கும் குழந்தை
செத்த
மீனின் மேல்.
- கு. அழகர்சாமி.
No comments:
Post a Comment