எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 8 February 2019

படித்ததில் பிடித்தவை (‘செத்த மீன்’ – கு.அழகர்சாமி கவிதை)


செத்த மீன்

ஒரு மீன் வரைந்து ‘கலர் அடி’ என்பார்
டீச்சர்.

குழந்தை
கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே.

‘கட்டத்துக்குள் அடி’ என்பார்
டீச்சர்.

குழந்தை
மறுபடியும் கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே
மீன் நகர்ந்திருக்கும் நீந்தியென்று.

கத்துவார் டீச்சர் இம்முறை
‘கட்டத்துக்குள் அடி’ என்று.

பரிதாபமாய் டீச்சரைப் பார்த்துக் கொண்டே
கட்டத்துக்குள் கலரடிக்கும் குழந்தை
செத்த மீனின் மேல்.

- கு. அழகர்சாமி.

Wednesday, 6 February 2019

படித்ததில் பிடித்தவை (‘ருசி’ – யுகபாரதி கவிதை)



ருசி

“அப்படியொன்றும் ருசியானதில்லை
அம்மாவின் சமையல்...

பரிமாறுபவள் அம்மா என்பதால்
ஆகிவிடுகிறது அப்படி...

பழக்கத்திலிருந்து விடுபடாமல்
உணரமுடியாது அன்பின் ருசியை..!”

-   யுகபாரதி (மராமத்து).

Sunday, 20 January 2019

அக்கரை சிவப்பு


“கிராமத்திலிருந்து
மாநகரத்துக்குள்
பேருந்தில் பயணிக்கிறேன்...

சிக்னலுக்காக காத்திருக்கையில்
பக்கவாட்டில் பார்க்கிறேன்...
மாநகர பூங்காவில்
பல வண்ணங்களில்
அவ்வளவு அழகானப் பூக்கள்.

கிராமம் தோற்றுவிடும் படி
பச்சை பசேலென புல்வெளி...
அதையே பார்த்து ரசிக்கும்
மாநகரவாசி மீது இனம் புரியா
பொறமை...

கொடுத்து வைத்தவன் என்ற
எண்ணம் மரித்தது...

அவன் புல்லின் மீது
எச்சில் துப்பும் போது..!”

                 - கி. அற்புதராஜு.

Monday, 31 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பார்வை’ – பாப்பு கவிதை)



பார்வை
“எதிர் இருக்கைப் பயணி
சே குவேரா பனியன் அணிந்து
சப்பாத்தி சாப்பிட்டு
கோக் குடித்தான்.

ஆங்கிலத்தில் உரையாடி
அதிகாலை எழுப்பிடக்
கேட்டுக் கொண்டான்.

பாதி உறக்கத்தில்
கண் விழித்த நான்
பத்திரமாக இருக்கிறதா
எனப் பார்த்துக் கொண்டேன்
என் சூட்கேஸையும்
எதிர் இருக்கைப் பயணியையும்.

அவனது கண்களும்
பாதி திறந்திருந்தன
என்மீதும் – அவன்
சூட்கேஸ் மீதும்..!”

-   பாப்பு.
(நன்றி: ஆனந்தவிகடன், 08.09.2010)

Saturday, 22 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பள்ளி வாசல்’ – கவிஞர் யுகபாரதி கவிதை)


பள்ளி வாசல்

“எல்லாப் பள்ளிக் கூடத்து
வாசல்களிலும்
தட்டுக் கூடையில்
நெல்லி விற்குமொரு கிழவி
குந்தியிருக்கிறாள்.

உருக்கும் வெயிலில்
நாவறளக் கத்திக் கொண்டிருக்கிறான்
ஐஸ் வண்டிக்காரன்.

பிரேயருக்கு முன்னதாக
வராதப் பிள்ளைகளை
வெளியே விட்டுக்
கதவைப் பூட்டுகிறான்
காவலாளி.

பிரம்பைக் கையிலெடுத்து
காந்தியின் அஹிம்சையைப்
போதிக்கிறார் வாத்தியார்.

அடுத்த மாதக் கட்டணத்துக்கு
யாரேனும் ஒரு மாணவனின் தாய்
மூக்குத்தி கழற்றுகிறாள்.”

  - யுகபாரதி.

Tuesday, 18 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பிறவிகள்’ – கவிஞர். தென்கரை சி.சங்கர் கவிதை)


பிறவிகள்
“கதவு
ஜன்னல்
கட்டில், நாற்காலி…
இன்னும்
பல பிறவிகள்
எடுத்து விடுகிறது
செத்த பின்பும்
மரம்..!”
    
- தென்கரை சி.சங்கர்.

Sunday, 16 December 2018

படித்ததில் பிடித்தவை (‘கடைசித்துளி’ – கவிஞர். நாணற்காடன் கவிதை)


கடைசித்துளி...
“பேருந்திலிருந்து
வீசியெறியப்பட்ட
காலி தண்ணீர் பாட்டிலுக்குள்
நுழைந்து வெளியேறும்
காற்றின் பாதங்களை
நனைக்கிறது
விற்கப்பட்ட நதியின்
கடைசித்துளி..!”
    
     -  நாணற்காடன்.

Friday, 7 December 2018

படித்ததில் பிடித்தவை (‘அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று’ – கவிஞர் மகுடேஸ்வரன் கவிதை)


அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.

அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.

ஆயிரம் கிளிகளின் அந்தப்புரம்.
ஆயிரம் குயில்களின் பொன்னூஞ்சல்.
ஆயிரம் சிட்டுகளின் உப்பரிகை.
ஆயிரம் காகங்களின் நிழற்குடை.
ஆயிரம் மைனாக்களின் நடைமேடை.
ஆயிரம் எறும்புகளின் தனிநாடு.
ஆயிரம் ஈக்களின் உணவுத்தட்டு.
ஆயிரம் பூச்சிகளின் வளமாநிலம்.
ஆயிரம் மனிதர்களின் மூச்சுக்காற்று.
ஆயிரம் நீர்க்கால்களின் வேருறவு.
ஆயிரம் ஆண்டுகளின் உயிர்ச்சான்று.
ஆயிரம் ஆண்டுகளின் எதிர்காலம்.

அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.


- கவிஞர் மகுடேஸ்வரன்.

Tuesday, 4 December 2018

படித்ததில் பிடித்தவை (‘குருவிக்கூடு’ – கவிஞர் தேவதேவன் கவிதை)


குருவிக்கூடு

“நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டைமாடியை தந்தது வீடு.

இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்.

அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி.”

  
 - தேவதேவன்.

Saturday, 1 December 2018

படித்ததில் பிடித்தவை (‘பாட்டியின் புடவை’ – கவிஞர் முகுந்த் நாகராஜன் கவிதை)


பாட்டியின் புடவை

“பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போகத் துடைக்கிறது…

எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையைத் துடைக்கிறது…

பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது…

டி.வி., டேப் ரிக்கார்டர், கம்ப்யூட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது…

எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது…

இப்படி
வீடு முழுக்க வேலைகளை
செய்துகொண்டு இருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை..!”

-   முகுந்த் நாகராஜன்.

Monday, 26 November 2018

*ரிவெஞ்ச்*


“பெரிய ஆலமரத்தை
வெட்டியவுடன்
அந்த இடத்தில்
கட்டப்பட்டது
பத்து மாடி
அரசு அலுவலகம்.

வெட்டும் போது
மண்ணில் விழுந்த
ஆலம்பழமொன்றின்
விதையை
சில வருடம் கழித்து
தின்றது
அந்த மரத்தில் வசித்த
பறவை ஒன்று.

பறக்கும் போதே
எச்சமிட்டது அந்த பறவை.
எச்சத்தில் வந்த விதையை
வாங்கிக் கொண்டது
பத்து மாடி கட்டிடம்.

சரியாக கட்டிட வெடிப்பில்
விழுந்த விதைக்கு
குளிர் சாதனப் பெட்டி
தண்ணீர் கொடுக்க
அட்டகாசமாக வளர்ந்தது
ஆலமர வாரிசு.

பராமரிப்பு இல்லா
அரசு அலுவலகத்தில்
அரக்கனாக வளர்ந்து
உயர்ந்தது ஆலமரம்.

மேலே கிளைகளையும்
சுவரில் வேர்களையும்
நாளுக்கு நாள்
வளர வைத்த
அந்த வாரிசு மரம்
அந்த கட்டிடத்தையே
சில வருடங்களில்
சிதைய வைத்த காட்சியை
வெட்டப்பட்ட ஆலமரத்தில் வசித்த
அத்தனைப் பறவைகளும்
பார்த்துக் கொண்டிருந்தன...”

- கி. அற்புதராஜு.

Monday, 19 November 2018

படித்ததில் பிடித்தவை (‘தீக்குச்சி’ – கவிக்கோ. அப்துல் ரகுமான் கவிதை)



தீக்குச்சி


தீக்குச்சி   
விளக்கை ஏற்றியது. 

எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்.

பித்தன் 
கீழே எறியப்பட்ட 
தீக்குச்சியை  வணங்கினான்.

“ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்?”
என்று கேட்டேன்.  

“ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது
உயர்ந்ததல்லவா” என்றான்.

-   கவிக்கோ அப்துல் ரகுமான்.
(ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)