எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 29 September 2019

படித்ததில் பிடித்தவை (“ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்…” – ‘கதிர் அவன்’ கவிதை)


ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்


ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

அடைமழையின்
குளிரோடு அது
ஒத்திருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

இரவின் பேரமைதியை
கொண்டு நிகழ்த்தப்பட்டதாக
அவை இருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

உறங்கிக்கிடக்கும்
குழந்தையை தழுவி செல்லும்
தாயின் மூச்சுக்காற்றை போல
அவை இருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

மறந்திட நினைத்திடும்
சில நினைவுகளை
விழிகளில் பதிய
செய்திட வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

மனம் சுமந்தலையும்
பாரங்களை இலகுவாக்கி
இருதயத்தை பறந்திட
செய்ய வேணடும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

ஒரு மலரின் வெடிப்போசையை
செவிகளுக்குள்
அறிய செய்திட வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

வண்ணத்துப்பூச்சியின்
கனத்தில்
உயிரில் தங்கியிருக்க வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

கொஞ்சம் உணரும்படி,
கொஞ்சம் உணர்ச்சி நிறைந்து,
கொஞ்சம் அதிசயத்து,
கொஞ்சம் ஆச்சர்யத்தோடு,
கொஞ்சம் அழகில் கலந்து,
கொஞ்சம் வலியை உணர்த்தி,
கொஞ்சம் கண்ணீரை வரவழைத்து,
கொஞ்சம் மனதினை வருடி,
கொஞ்சம் உயிரினை தீண்டி,
கொஞ்சம் சுவாசத்தில் நிறைந்து,
கொஞ்சம் விழிகளில் பதிந்து,
கொஞ்சம் வியப்பில் ஆழ்த்த வேண்டும்.

ஒரு கவிதையெப்படி இருக்க வேண்டும்

நீங்கள் படித்து கொண்டிருக்கும்
இந்த கவிதையை போலல்லாமல்
கவிதை கவிதையாக
இருந்திட வேண்டும்..!

- கதிர் அவன்.

No comments:

Post a Comment