எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 18 September 2019

படித்ததில் பிடித்தவை (“அஞ்சட்டி மலையில் பிறந்த ஞானம்..!” – நம்மாழ்வார் கட்டுரை)



அஞ்சட்டி மலையில் பிறந்த ஞானம்..!

பள்ளிக்கூடம் பார்த்தறியாத அந்தப் பெண், காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?’ என்று விடுகதைகளை எடுத்துவிட, என்னிடத்தில் விடை இல்லை. ஆனால், நாங்கள் சில கதைகளைப் போட்டு, அவள் பதில் சொல்ல முடியாது நின்றபோது, அவளிடமிருந்து விடையை வாங்கினோம். காயான பிறகு பூவாவது... தேங்காய். பழமான பிறகு காயாவது... எலுமிச்சம்பழம்!

அடுப்படியில் தேங்காயை உடைத்து அரிவாள் மனையில் சுரண்டும்போது, தேங்காய்ப்பூ வந்தது. கிராமங்கள், பட்டணத்து வியாபாரிகளால் சுரண்டப்பட்டு, ஏதுமற்ற நிலையில் இருப்பதை, விடுகதையின் இப்பகுதி விளக்குகிறது. தேங்காயில் பருப்பு, கொட்டாங்குச்சி (சிரட்டை) என இரண்டு பாகங்கள் உண்டு. பருப்பைச் சுரண்டிய பின்னர், கொட்டாங்குச்சிதான் மிச்சம். அதுபோல, கிராமத்திலுள்ள அரிசி, ஆடு, மாடு, காய்கறி, பழம், நிலம், நீர், உழைப்பு என அனைத்தையும் பட்டணம் உறிஞ்சிக் கொள்ளும்போது, கிராமங்கள் பாலைகளாகின்றன!

கதையின் இரண்டாவது பாகம் முக்கியமானது. எலுமிச்சம்பழத்தை அரிந்து, உப்பிட்டு வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய். மனிதர்கள் இறந்தால், இயற்கை எய்தினார்எனச் சொல்கிறார்கள். அதுபோலவே, மரத்திலிருந்து பிரிந்து விழுகிற பழமும், நான்கைந்து நாட்களில் இயற்கை எய்திவிடுகிறது. ஆனால், உப்பு இடப்பட்ட பழம் (ஊறுகாய்) ஆண்டு முழுக்க இருந்தாலும் அழிவதில்லை. அது ஏன்?’ என்கிற கேள்வி, இரவு முழுவதும் தூக்கத்தைக் கெடுத்தது. பூஞ்சணம், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள்தான் ஒரு பொருளை சிதைக்கின்றன. உப்பு, அந்த நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுகிறது. மனிதன் இறக்கும்போது, நுண்ணுயிரிகள் செயல்பட்டதால்தான் உடல்கள் இயற்கை எய்தின.



1984-ம் ஆண்டு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பூச்சிக்கொல்லி நஞ்சு உற்பத்தியான டேங்க் வெடித்து, நகர் முழுவதும் பரவியது. அங்கே இறந்துபோன மாடுகள், சிதையாமல் பல மாதங்கள் அப்படியே கிடந்ததை பத்திரிகைகள் படம் பிடித்தன. கடலோர மணலில் உப்புதான் விளைகிறது. பயிர் விளைவதில்லை. உரத்தில் உப்பு கலந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும்என்கிறது, இந்தியக் குற்றவியல் சட்டம். காரணம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலம் பயனற்றுப் போகிறது (உரத்தில் உப்பைக் கலந்தவர்கள் அல்லது உரமென்று தந்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா?)!

அம்மோனியம்-சல்பேட், யூரியா, கால்சியம்-நைட்ரேட், பொட்டாஷ் இவையெல்லாமே உப்புகள்தான். இவற்றை உழவர்களிடம் உரம் என்று சொல்லி விற்றார்கள். டி.ஏ.பி.-யில் (DAP-Di Ammonium Phosphate) 16% நைட்ரேட் உப்பு இருக்கிறது. இந்த உப்புகளை இடும்போது, மண்ணில் உள்ள உயிர்கள் மடிகின்றன. இதன்காரணமாக, மண்ணில் உயிர்கள் செய்ய வேண்டிய வேலையை, யூரியா போன்ற ரசாயனங்கள் செய்ய வேண்டியுள்ளது.

மீண்டும் மீண்டும் ரசாயன உரங்களை வாங்கி, நிலத்தில் இடும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள் உழவர்கள். நிலம், மேலும் மேலும் கெட்டித் தட்டிப் போகிறது. நிலத்தில் ஃப்யூரிடான், திம்மெட் போன்ற நஞ்சுகளை இடும்போதும், களைக்கொல்லி நஞ்சுகளை இடும்போதும்... மண், மலடாக்கப்படுகிறது. விஞ்ஞானம் என்கிற போர்வையில் நடக்கும் வியாபாரம், தாய் மண்ணைச் சாகடிக்கிறதுஎன்ற உண்மையை அறிந்தபோது, அஞ்சட்டி மலையில் எனக்கு ஞானம் பிறந்ததை உணர்ந்தேன். அதிலிருந்து மக்களுக்குச் சொல்வதை நிறுத்திக் கொண்டு, அவர்களிடமிருந்து கற்க முடிவு செய்து, இன்றும் தொடர்கிறேன். இன்றைக்கு, இயற்கை வழி வேளாண்மையில் இவ்வளவு பெரிய எழுச்சி ஏற்பட்டதற்கு, விடுகதை என்கிற பெயரில், எழுதப் படிக்கத் தெரியாத அந்தப் பெண், என் சிந்தனையில் ஏற்படுத்திய மாற்றமே காரணம்..!

-         நம்மாழ்வார்.
  (நான் நம்மாழ்வார் பேசுகிறேன்... - புத்தகத்திலிருந்து)
  (நன்றி: பசுமை விகடன்)

No comments:

Post a Comment