எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 29 October 2019

படித்ததில் பிடித்தவை (“ஒத்த ரூபாய்” – துரை கவிதை)



*ஒத்த ரூபாய்*


அய்யாஎன்ற அவலக்குரல்
அவசரமாய் வாசல் வந்தேன்.

கையில் குழந்தையோடும்
கண்கள் நிறைய பசியோடும்
தட்டு நிறைய எதிபார்ப்போடும்
சுட்டெரிக்கும் வெயிலில்
எட்டுவயது சிறுமி பிச்சை கேட்டு.

போ..! போ..!! என உரைத்து
புறங்கையால் இல்லையென மறுத்து
உரத்து கதவடைத்து
உள்ளே திரும்பினேன்.
உள்ளம் அதிர திடுக்கிட்டேன்..!

மூடிய கையில் ஒத்த ரூபாய் காசுடனும்
திறந்த கண்ணில் அதிர்ச்சியோடும்
எதுசரி என்ற குழப்பத்தோடும்
என் முகத்தில் எதையோ தேடியபடி
எதிரே என் குட்டிக் குழந்தை.

ஒரு நொடியில் உறைந்து போனேன்...
மறு நொடியே உடைந்தும் போனேன்...
நல்ல அப்பா என்ற உருவத்தை
நானே கலைத்துவிட்டேனா..?

குற்ற உணர்வில் மூழ்கிப்போனேன்.
குழந்தை முகம் பார்க்கவே இல்லை.

பலவற்றை இழந்திருக்கிறேன்
வாழ்க்கையில்
பதறியதே இல்லை.

ஒத்த ரூபாய் காசு தான்...
பல நாள்
தூங்கவே இல்லை..!


- துரை.

2 comments: