சிதையா நெஞ்சுகொள்..!
“எங்கு திரும்பினும்
உன் நெஞ்சத்தைச் சிதைக்கும்
சித்திரங்களைக் காண்பாய்..!
அதிகாலை எழுந்ததிலிருந்து
விழிமூடி உறங்கும்வரை…
உன் உறக்கத்தைச் சேவல் கூவி
கலைக்காது
கொசுகடித்துக் கலைக்கும்.
அந்த வைகறை
கடந்த நாளின் புகையும் தூசும்
படிவதற்காக வாய்த்த பொழுது.
எழுந்து
குழாய் திருகி வாய்கொப்பளிக்கும் நீர்
உன் காலத்தின் கடைசிச்சொட்டாகவும் இருக்கலாம்.
நீ பிதுக்கும்
ஒவ்வொரு பற்பசைத்துளிக்கும்
பத்துப் பைசா
அயல்நாட்டு முதலாளிக்கு
இலாபமாய்ப் போகிறது.
காலைக்கடனை
முழுமையாய்த் தீர்க்க முடியாதபடி
கவலைச் சிந்தனைகள் உன்னைச் சூழும்.
அரைகுறையாய்த்தான் அது நிகழும்.
கொஞ்சம் நடைபயிற்சி செய்ய
வீதியேகுவாய்.
தளர்ந்த மூதாட்டிபோல்
இந்த நகரம் அயர்ந்திருக்கும்.
ஓரிரவுக்குள்
சுவரொட்டி முளைக்கும் சுவர்கள்
நம்நாட்டிலன்றி வேறெங்கும் இல்லை.
நடைமேடையில் துயில்வோர்
உன் காலத்திலும்
குறையாமல் இருப்பதைக் காண்பாய்.
உன்னை அறிந்திருந்தால்
நாய்கள் குரைக்காமல் பார்க்கும்.
நீ புதிதென்றால்
அந்தப் பாதை நாய்க்குச் சொந்தம்.
சிலது குரைக்கும்.
சிலது குரைக்காமல் வந்து கடிக்கும்.
பாதி நடையோடு
வீடு திரும்புவாய்.
அண்மையில் விலையேறிய
பால் வந்திருக்கும்.
தேநீர்போல் ஒன்று தரப்படும்.
திருப்தியாய்க் குடித்துக்கொள்ளவேண்டும்.
ஏனென்றால், அந்த
அதிகாலையை
அதிருப்தியோடு தொடங்க
நீ விரும்பமாட்டாய்.
செய்தித்தாள் வந்திருக்கும்.
விளம்பரங்களுக்கு மத்தியில்
நீதான் செய்திகளைக்
கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும்.
எல்லாச் செய்தித்தாளும் ஒன்றுதான்.
நான் தினந்தோறும் செய்தித்தாள் வாங்குவதை
விட்டுவிட்டேன்.
மாதத்தில் முதல்நாள்மட்டும்
வாங்குவேன்.
அடுத்தநாள்
தேதியை மட்டும் மாற்றிப்போட்டு
அதையே படித்துக்கொள்கிறேன்.
இன்றுவரை
தினப்படி செய்திகளில்
பெரிதாய் ஒன்றும் வேறுபாடில்லை.
செய்திகளை ஊன்றிப்படித்தால்
சித்தபிரமை பிடித்துவிடும்.
அதனால்தான் நாமெல்லாரும்
மேலோட்டமாகச் செய்தித்தாள் படிக்கிறோம்.
குளித்துக் கிளம்புகிறாய்.
பிள்ளைகளும் பள்ளிக்குக் கிளம்புகின்றன.
இரத்த அழுத்தம் வந்ததற்கு
என்னென்னவோ காரணம் சொல்கிறார்கள்.
உண்மையான காரணம் ஒன்றுண்டு :
பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்பும் முயற்சியில்
பெற்றோர்களுக்கு வந்த நோய் அது.
மனைவி ஒரு பாட்டைப் பாடுகிறார்.
அது தற்காலத் திரைப்பாடல்போல.
பிடிக்காவிட்டாலும்
கேட்டுத் தொலைக்கவேண்டும்.
தலையை ஆட்டவேண்டும்.
எரிபொருள் குடிப்பதற்கென்றே
ஓர் ஈருருளி வைத்திருக்கிறாய்.
அதில் அலுவலகம் கிளம்புகிறாய்.
நீ உனக்காகப் பணியாற்றுகிறாயா
ஊருக்காகப் பணியாற்றுகிறாயா
என்பதே புரியாத ஓர் உத்தியோகம் அல்லது தொழில்.
அந்தத் தெளிவின்றி நகர்பவை
உன் நாள்கள்.
வருமானம் போதுமா,
மேலும் மேலும் புதுக்கடன்களா,
இறுதிக் காலத்திற்கு ஏதேனும்
உறுதி செய்துகொண்டாயா,
குழப்பத்தில் ஆழ்கிறாய்.
ஆறிய சோற்றை
மதியம் உண்கிறாய்.
அதிலொரு மிளகாய்த் துணுக்கைக்
கடித்துவிடுகிறாய்.
உன் தயிர்சோற்றை
அந்தக் காரம் ருசியாக்கிவிடுகிறது.
இப்படிச் சிறு சிறு எதிர்பாராச் சுவைகளால்தான்
நீ உயிர்ப்போடிருக்கிறாய்.
பின்மதியத்தில்
சுழித்தோடும் ஆறுகூடத் தேங்கி ஓடும்.
அரைமயக்க விழிகளோடு
வேலை பார்க்கிறாய்.
வீட்டுக்கு வருகிறாய்.
மற்றொரு தேநீர் கிடைக்கிறது.
மனையாளின் மஞ்சள் முகம்
களையாகத்தான் இருக்கிறது.
உன் இவ்வெண்ணம்
அந்தி வந்ததால் வந்ததில்லை என்று
நாங்கள் நம்புகிறோம்.
பிள்ளைகள்
பள்ளிக் கதைகள் சொல்கிறார்கள்.
நமக்குப் பிறந்த பிள்ளை
நம்போலில்லாமல்
என்னமாய்ப் பேசுகிறது என்று
வியப்புடன் பார்க்கிறாய்.
தொலைக்காட்சி காண்கிறாய்.
குடும்பத் தொடர்களில்
கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்
எல்லாரும் தோன்றுகிறார்கள்.
இவை குடும்பம்தானா
இல்லை குஸ்திக்கூடமா என்று
உனக்கே குழப்பமாக இருக்கிறது.
விவாத நிகழ்ச்சி பார்க்கிறாய்.
நமக்கென்று வாய்த்த அறிவுஜீவிகள்
வரிசையாக அமர்ந்து
உளறு உளறு என்று உளறிக்கொண்டிருக்கிறார்கள்.
‘என்னைவிட்டால்
நானே நல்லாப் பேசுவேன்’ என்று
நினைத்து அமர்த்துகிறாய்.
இரண்டு தோசைகளைப் பிய்த்துத் தின்கிறாய்.
அடுத்த மாதக் கூடுதல் செலவுகளுக்கு
என்ன செய்வது என்று யோசிக்கிறாய்.
உறங்கிப்போகிறாய்.
இதுதான் நீ.
உன்போல் இங்கே ஓராயிரம்.
எளிமையான நிரல்படி
வாழ்கின்ற பொதுஜனம்.
உன் நெஞ்சத்தில் என்னவுண்டு
யாரும் அறியமாட்டார்.
உன் சின்னஞ்சிறு விருப்பங்கள் என்னென்ன
எவர்க்கும் அக்கறையில்லை.
உனக்கே உன்னைத் தெரியுமா..?
தெரியாது என்றுதான் சொல்கிறாய்.
ஒரு தினம்
உனக்குப் பரிசுப்பொருள்போல்
தரப்படுகிறது.
அதைக் குரங்குபோல்
ஏன் நீ பிய்த்துப்போடுகிறாய்..?
அதன் ஒவ்வொரு நிமிடத்தையும்
ஆக்கபூர்வமானதாக்கு.
ஆக்கம் மறவா நெஞ்சுகொள்..!
நடையில் வேகங்கூட்டு.
இந்தச் சோம்பலை நீக்கிச்
சுழன்றுதிரி.
நகரும் திறன்
உள்ளவரைதான் நாம்
நலம்வாழ்கிறோம்.
காலில்லாத ஊர்வனவற்றிடம்
இடப்பெயர்வின் அருமை கேள்.
உடலைத் தேய்த்து தேய்த்து
இடம்பெயர்ந்துகொண்டிருக்கும்
அவற்றோடு ஒப்பிட்டால்
நீள்கால்களால் நிலமளக்கும் நீ
எத்துணை கொடுப்பனையாளன்..?
ஊக்கம் மறவா நெஞ்சுகொள..!
உறவுகள் என்பவை
உன்னைச் சார்ந்திருப்பவை.
நீ அடிமரம்.
கிளைகளும் பூக்களுமான உன் உறவுகள்
உன்னால் செழிக்கின்றன.
அவை இன்பச்சுமை.
மகிழ்வோடு தாங்கிக்கொள்.
தியாகம் மறவா நெஞ்சுகொள்..!
பற்றாக்குறை எங்கோ இருக்கிறது
எனில்
உன் ஆசைகளை ஆராய்ச்சி செய்.
உன் நுகர்வுகளைச் சரிபார்.
எல்லாம் சரியாய் இருந்தும்
பற்றாக்குறை என்றால்
உன் வரத்துகளைப் பெருக்கு.
இந்த உலகம்
உலுக்க உலுக்க எல்லாம் தரும்.
ஒன்றும் செய்யாதவனுக்கு
நிழல்மட்டுமே கிடைக்கும்.
வினையால் அணையும் நெஞ்சுகொள்..!
உனக்கு உயிர் தந்தது.
நீர் தந்தது.
கனி தந்தது.
வாழ்க்கை தந்தது.
இந்த உலகுக்கு
நீ தரவேண்டிய கடமையும் உண்டு.
அதற்காகவேனும் சிதையா நெஞ்சுகொள்..!”
- கவிஞர். மகுடேசுவரன்.
No comments:
Post a Comment