எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 18 September 2016

இது காவிரியின் கதை அல்ல...



“ஒரு ஊருக்கு
தண்ணீர்க் கொடுக்க
எண்ணியது நிர்வாகம்.

ஆழ்துளைக் கிணறு
ஊரின் முதல் தெருவில்
அமைக்கப்பட்டது.
நீர்த்தேக்கத் தொட்டி
மிக உயரத்தில்
கட்டப்பட்டது.

தொட்டியிலிருந்து
முதல் தெரு,
இரண்டாவது தெரு,
.
.
.
என பனிரெண்டு
தெருவுக்கும்
குழாய் அமைக்கப்பட்டது.

நிர்வாகத்தின் பெரியவர்
திறந்து வைக்க
இருபத்தி நான்கு மணியும்
குடித்தண்ணீர்
எல்லோரது வீட்டுக்கும்
வந்தது.

வருடங்கள் ஓடின...

அந்த ஆண்டு
வருட மழைப் பொய்த்தது.
தண்ணீர் பஞ்சம்
தலை விரித்தாடியது.

ஆழ்துளை கிணற்றிலும்
நீருற்றுக் குறைந்தது.
தினமும் இரண்டு மணி
நேரம் மட்டும் தண்ணீர்
விடப்பட்டது.

அந்த இரண்டு மணி
நேரத்தில் அனைவரும்
தண்ணீர்ப் பிடித்ததால்
அழுத்தம் குறைந்து
ஐந்து தெருவுக்கு மேல்
தண்ணீர் செல்லவில்லை.

நான்காவது தெருக்காரர்கள்
ஐந்தாவது தெருவுக்கு
குழாய் செல்லும் பாதையில்
ஒரு வால்வைப் பொருத்தி
மூடினார்கள்.

இரண்டாவது
தெருக்காரர்களும்
அதே வேலையை
செய்தார்கள்.

இப்போது இரண்டாவது
தெரு வரை தண்ணீர்
ஐந்து மணி நேரம் வருகிறது.

ஐந்து நான்கோடும்,
மூன்று இரண்டோடும்
சண்டைப் போட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.

நிர்வாகம் கைக்கட்டி
வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருக்கிறது..!”

 -    கி. அற்புதராஜு.

No comments:

Post a Comment