எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 10 December 2014

“சவுண்ட் ஆஃப் மியூசிக்” திரைப்படம்


“சவுண்ட் ஆஃப் மியூசிக்” இப்படியொரு படம் தமிழில் வருமா?
            -    டாக்டர். ஆர். கார்த்திகேயன் (தி ஹிந்து, 28.11.2014)



என் ஐந்தாவது வகுப்பு ஆசிரியை ரமா டீச்சர், “சவுண்ட் ஆஃப் மியூசிக் யாராவது பாத்தீங்களா? கண்டிப்பா தவறவிடாதீங்கஎன்று சொல்லிவிட்டுப் போனார். வீட்டை நச்சரித்து அன்று இரவே சென்றோம். மதராஸில் புதிதாக சத்யம், சிவம், சுந்தரம் எனும் புது காம்பளக்ஸ் திறந்திருந்த நேரம் (இன்றைய சத்யம் காம்பளக்ஸ்தான்!). புரியுமா என்ற சின்ன தயக்கம் 10 வயது கொண்ட எனக்கு இருந்தது. ஆனால் வாழ்நாள் முழுதும் நெஞ்சை விட்டு நீங்கா அனுபவத்தை அந்தப் படம் தந்தது.

மறு நாள் ரமா டீச்சரிடம் படம் பார்த்ததை ஒரு பெரும் சாதனையாகச் சொன்னேன். 1975-ல் ஆரம்பித்து இன்றுவரை தவறாது பல சந்தர்ப்பங்களில் பார்க்கும் படம் சவுண்ட் ஆஃப் மியூசிக்.

ஒரு முழு நீள இசைச் சித்திரம். படம் நெடுகப் பாடல்கள். மிக எளிய கதை. உண்மைக் கதையைச் சார்ந்த படம். உலகம் முழுதும் மொழி தெரியாமல் யார் பார்த்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய குடும்ப நாடகம்.

முதலில் இசையாய், பின்னர் நாடக மாய், பிறகு திரைப்படமாய் வந்து பெரும் வெற்றி கண்ட படைப்பு இது.

ஐந்து ஆஸ்கர் விருதுகள் முதல் உலகின் ஏராளமான விருதுகளையும் பாராட்டையும் பெற்ற படம். கிளியோபாட்ரா எடுத்து கம்பெனியை மூடும் நிலையில் இருந்த ட்வெண்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்திய படம் சவுண்ட் ஆஃப் மியூசிக்.

இளம் துறவியான மரியா வாழ்க்கையைக் காதலிக்கிறாள். இயற்கை அழகையும் இசையையும் பெரிதும் நேசிக்கிறாள். மத அமைப்பின் கட்டுப்பாடுகளை அவளின் துடுக்குத்தனத்தாலும் கவனக்குறைவாலும் மீறுகிறாள். வேறென்ன நேரத்திற்கு பிரார்த்தனைக்கு வருவதில்லை. மலைகளின் அழகில் மயங்கி அவள் பாடும் பாட்டில்தான் படம் தொடங்குகிறது. ஆலய மணியின் ஓசைதான் அவளை நிஜத்திற்கு அழைத்து வருகிறது.

அவளைக் கண்டிக்கும் பொருட்டு அவளுக்கு ஒரு சிறப்புப் பணி காத்திருக்கிறது. மனைவியை இழந்த ராணுவ அதிகாரியின் ஏழு குழந்தைகளைப் பராமரிக்கும் பணி அது. தாயின்றி தந்தையின் ராணுவக் கட்டுப்பாட்டில் வளரும் வயது வித்தியாசம் அதிகம் உள்ள பிள்ளைகள்.

அவர்களை இசையால் ஒன்று சேர்க்கிறாள். அன்பு செலுத்துகிறாள். அவர்கள் ஆதரவைப் பெறுகிறாள். இடையில் தந்தை வேறொரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணக்க அவரை அழைத்துக் கொண்டு வீடு திரும்புகிறார். முதலில் இந்த டீச்சரின் அதிகப்பிரசங்கித்தனத்தால் எரிச்சலுற்றவர் பின்னர் மனம் மாறுகிறார்.

விருந்தில் நடனமாடுகையில் இருவருக்கு இடையில் தோன்றும் நெருக்கம் மெலிதான காதலை உணர்த்துகிறது. அந்த ராஜகுடும்ப பெண்ணின் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்து மரியாவை மணம் புரிகிறார்.

இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலம். போருக்குத் திரும்ப அழைப்பு வருகிறது. நாஜிகளின் போக்கு பிடிக்காததால் அவர் ஆணையை மறுத்து தன் இளம் மனைவி மற்றும் ஏழு குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் செல்கிறார். சுபம்.

சிறு குழந்தைகளுக்குச் சொல்லும் Fairy Tale போன்ற கதைதான். எதிர்பார்க்கும் திருப்பங்கள்தான். ஆனால் இளமையும் துடிப்புமாகப் படம் அமைய மூன்று காரணங்கள். இசை. இசை. இசை.

ரிச்சர்ட் ரோட்ஜர்ஸின் இசையும் பாடல்களும் படத்தின் பக்க பலம். பல பாடல்களின் மூல இசையையும் பாடல்களையும் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். ராபர்ட் ஒயிஸ் படத்தை இயக்கித் தயாரித்திருக்கிறார்.

ஜூலி ஆன்ட்ரூஸ் மரியாவாகவே வாழ்ந்தார் எனச் சொல்லலாம். படத்தை இவர் ஒருவராகவே சுமக்கிறார் என்றால் மிகையாகாது. நம்ம ஊர் த்ரிஷாவும் நயன்தாராவும் இதை செய்யக்கூடியவர்கள். நாயகியை நம்பிப் படம் எடுப்பவர்கள்தான் வழக்கொழிந்து போய்விட்டார்கள்.

மூன்று மணி நேர படம் நெடுகப் பாடல்கள். இசையைச் சொல்லித்தரும் டோ ரே மிபாடல் கருத்தும் படமாக்கமும் அற்புதம். மேற்கத்திய சங்கீத தெரியாதவர்கள்கூட ஆர்வம் கொள்ளும் அளவுக்கு இந்தப் படத்தின் இசை நம் ஆன்மாவைத் தொடும் என்பது உண்மை.

நம் பாரம்பரியமும் இசைதான். 20 பாடல்கள் இருந்த காலம் சுருங்கி இன்று இரண்டு மூன்று பாட்டோடு இளைத்துவிட்டோம்.

நினைத்தாலே இனிக்கும் படம், இது ஒரு இன்னிசை மழை என்றே விளம்பரப்படுத்தப்பட்டது. நினைவெல்லாம் நித்யா, காதல் ஓவியம், பயணங்கள் முடிவதில்லை எல்லாம் இன்னிசை மழைதான். பாஷை தெரியாத சங்கராபரணம் இங்கு வெள்ளி விழா கண்டது. கன்னட ப்ரேம லோகா இங்கு பருவ ராகமாய் நல்ல ஓட்டம் கண்டது.

இன்று சாஷே உலகம். குறும்படம், ஜிங்கிள் இசை என இளைத்து வருகையில் இந்தப் படத்தை மீண்டும் பார்க்கையில் இப்படி ஒரு படம் தமிழில் வராதா? என்று மனம் ஏங்குகிறது.

இந்தக் கதையைத் தழுவி சாந்தி நிலையம் ஏற்கனவே வந்துவிட்டது. ஆனால் படம் நெடுகப் பாடல்களாய் உற்சாகம் கொப்பளிக்க ஒரு படம் வந்து வருஷங்கள் ஆகிவிட்டன.

என்ன செய்ய வேண்டும்? இளைய ராஜாதான் மனசு வைக்க வேண்டும்!

(தொடர்புக்கு: Gemba.karthikeyan@gmail.com)


*** *** *** ***

No comments:

Post a Comment