எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 27 December 2024

படித்ததில் பிடித்தவை (“பள்ளத்து வீடுகள்” – காளிங்கராயன் கவிதை)


*பள்ளத்து வீடுகள்*


“எனக்கெட்டு வயசிருக்கும்

எங்களை விட்டு அப்பா 

ஓடிப்போன பொழுது.


பத்து வயதில் படிப்பை 

நிறுத்திவிட்டுப்

பள்ளத்து வீடுகளுக்குப் 

பலகாரம் விற்றுவர 

அம்மா அனுப்பினாள்.


ஊரை விட்டொதுங்கிய

சரவணா டாக்கீஸின்

பின்புறத்துக் குடிசைகளைத்தான் 

பள்ளத்து வீடுகளென்போம்.


அந்த வீடுகளில்

எப்போதும் பெண்களின் 

ராஜ்ஜியந்தான்.


பகல் முழுக்க

பூவரச மர நிழலில்

வெற்றிலைச் சாறு தெறிக்க 

வம்பு பேசிச் சிரித்திருப்பார்கள்.


ஆண்கள் அவ்வப்போது

அவசர அவசரமாக

வந்து போவார்கள்...


பல வருசங்கழிந்து

பம்பாய்க்குப் பக்கத்திலிருந்து 

அப்பாவின் கடிதம் -

உடனே ஊருக்கு வருவதாக.


அப்பா வந்ததும்

அதட்டிக் கேட்கணும் -

பள்ளிக்குப் போகாமல்

பரத்தையர் வீடுகளில்

நான் பலகாரம் விற்றதற்கு 

நீ தானே காரணமென்று.


கூடவே -

பல நாள் பட்டினி கிடந்தும்

பிள்ளைகள் வளர்க்க வென்று

பள்ளத்தில் குடியேறாத 

அம்மாவின் பெருமை சொல்லி

ஆங்காரமாய்ச் சிரிக்கவும் 

வேணும்..!”

 

*காளிங்கராயன்*

(கணையாழி  ஏப்ரல் - 1994)



Monday, 9 December 2024

படித்ததில் பிடித்தவை (“நான் அழவில்லை” – கல்யாண்ஜி கவிதை)


 நான் அழவில்லை

“ஒரே திருமண அழைப்பிதழை

நூறு முகவரிகளுக்குச் 

தட்டச்சுகிறாள்

கூரியர் அலுவலகத்துப் பெண்.


வேகமாகக் காலியாகிறது 

அவளுடைய 

நீல நிற தண்ணீர் பாட்டில்.

ஒவ்வொரு மிடறு 

அருந்தும் போதும்

’நான் அழவில்லை’ என்று

குப்பியின் திருகு வரைகளிடம் 

அவள் சொல்ல முயல்கிறாள்.


தானாகவே உடையப் போகும் 

ஒரு குமிழி இப்போது 

தண்ணீர் பாட்டிலுக்குள்..!”

 

*கல்யாண்ஜி*



Sunday, 1 December 2024

படித்ததில் பிடித்தவை (“ஒரே ஒரு மழைத்துளி” – கல்யாண்ஜி கவிதை)


ஒரே ஒரு மழைத்துளி


“நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? 

மழையின் ஒரே ஒரு துளி,

சுமக்க முடியாத 

மிகப் பெரும் பாரம் போல, 

ஒரு ஈர இலை தன்னைத் தாழ்த்தி, 

மிகுந்த பிரயாசையுடன் 

அதன் நுனியில் ஏந்திக்கொண்டு, 

பாவலா பண்ணுவதை..!”

 

*கல்யாண்ஜி*