“கிராமத்திலிருந்து
இரவு முழுவதும்
சொகுசுப் பேருந்தில்
பயணம்
மனைவியுடன்
மாநகரத்திற்கு...
அதிகாலை
மாநகரத்தின்
பெரியப் பேருந்து நிலையத்தில்
இறங்கியவுடன்
புறநகர் செல்ல
மாநகரப் பேருந்தைப் பிடிக்க
பெரிய கூட்டம்.
எனது கைப் பையை
வாங்கிக் கொண்ட
மனைவி
“எப்படியாவது பிடிங்க
இரண்டு இடங்களை!” என்றாள்.
எப்போதுமே
கூட்டமாக உள்ள
பேருந்தில் ஏறாத நான்
மனைவியின் கட்டளையை ஏற்று
பேருந்து வந்தவுடன்
முண்டியடித்த கூட்டத்தில்
தட்டு தடுமாறி
எப்படியோ பிடித்து விட்டேன்
மனைவிக்கான இடத்தை
மட்டும்!
நான் நின்றுக் கொண்டே
பயணித்தேன்
மனைவியின்
பார்வையை தவிர்த்தபடி.
சென்ற மாதம்
கிராமத்திலிருந்து
மாநகரம் திரும்பியப் போதும்
இப்படிதான் பயணித்தேன்.
அப்போது முண்டியடித்து
பேருந்து ஏற முயற்சிக்கவே இல்லை.
இரண்டு பேருந்துகள்
கூட்டங்களை சுமந்து
சென்ற பின்
மூன்றாவது பேருந்தில்
உட்கார்ந்தே பயணித்தேன்
மனைவி இல்லாத
பயணத்தில்
தனி ஒருவனாக..!”
-
கி. அற்புதராஜு.
No comments:
Post a Comment