எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 9 October 2016

படித்ததில் பிடித்தவை (“ஆற்றாமை” – எம்.விக்னேஷ் கவிதை)


ஆற்றாமை
“ஆற்றின்
பெயர் தாங்கிய பலகை
சுடுமணல் பாலைவனத்தை
கை காட்டுகிறது.

ஆற்றின் ஆயுளை விட
மீன்களின் ஆயுள் அதிகம்
கருவாடாய் மிச்சமிருக்கிறது.

ஆழமான பகுதி
எச்சரிக்கை காட்டிய பகுதியில்
மணல் வீடு கட்டி விளையாடுகிறார்கள்.

கடலின் விலாசத்தை
நதிகள் மறந்துவிட்டதோ
கடல் அலைமோதிக்கொண்டிருக்கிறது.

மணல் லாரியிலிருந்து
சொட்டும் தண்ணீர்
ஆற்றின் ஆற்றாமையை கூறுகிறது.

நதி மூலம் கண்டவர்கள்
நிர்மூலம் ஆவதை தவிர்த்திருக்கலாம்.
தீண்டாமையை ஆற்றிடம் காட்டியிருக்கலாம்.

வரலாற்றில் வரையறுக்கப்படாத
ஆற்றின் எல்லைக்கோடு
வரைபடத்திலும் வேண்டாமே...
ஆற்றுக்கு மொழிகள் சொல்லித் தந்தது போதும்...
உயிர் நாடி அடங்கும் முன்
சுவாசம் தந்து உயிர்ப்பிப்போம்..!”

-          எம். விக்னேஷ். (நன்றி: தி இந்து, தேநீர் கவிதை)

No comments:

Post a Comment