எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 6 October 2016

படித்ததில் பிடித்தவை (“உடன்படுக்கை விதிகள்” - சுகுமாரன் கவிதை)


உடன்படுக்கை விதிகள்

“இரட்டைக் கட்டிலில் கிடக்கும்
ஒற்றை நுரைமெத்தை நடுவில்
வரையப்பட்டிருக்கும் எல்லைக்கோடு
கண்ணுக்கு ஒருபோதும் புலப்படுவதில்லை.
எனினும்
படுக்கையின் எல்லை விதிகள்
நாமறியாமல் நம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன.

உறக்கக் கடலின் இருளாழத்தில் துளாவிக்
கைகால்களோ உடலோ பெயர்ந்து
எல்லை தாண்டுகிறோம்.
உடனே
கடலோடியின் நீரியல் எச்சரிக்கையுடன்
அவரவர் எல்லைக்குப் புரண்டு துயில்கிறோம்.

கடலோடிக்கு
நீர்வெளியின் எல்லைகள் தெரிவதுபோல
நமக்குப் படுக்கையின் எல்லைகள் புலப்படுகின்றன.

காமத்தின் வானில் வேட்கையுடன் பறந்து
உடல்களைப் பகிர்ந்து
எல்லையைத் தாண்டுகிறோம்.
உடனே
விமானியின் சாதுரியத்துடன்
அவரவர் எல்லையைப் புறக்கணித்துக் கூடுகிறோம்.

விமானிக்கு
ஆகாய சுதந்திரத்தில் எல்லைகள் இயல்பாவதுபோல
நமக்குப் படுக்கையின் எல்லைகள் மறக்கின்றன.

எனினும்
உடன்படுக்கை எல்லைகளில்
மீற முடியாத விதியொன்று -
ஈருடல் ஓருயிர் என்று பீற்றிக்கொண்டாலும்
ஒரே சிதையில் எரிக்கப்படவோ
ஒரே சவப்பெட்டியில் அடக்கப்படவோ முடியாது..!”

-         சுகுமாரன்.

No comments:

Post a Comment