எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 14 December 2015

படித்ததில் பிடித்தவை (ரோஜா என்பது – மனுஷ்யபுத்திரன் கவிதை)


ரோஜா என்பது...
ரோஜா செடிகள் விற்பவன்
நகரத்தின் கோடைக் கால
ஞாயிற்றுக்கிழமையின் காலையில்
நீண்ட சாலைகளில்
சென்று கொண்டிருந்தான்.

நகரம் இன்னும் விழிப்பதற்கு அஞ்சியது
‘கேட்டில்’ எடுக்கப்படாத
செய்திதாள்களைப் பார்த்தபடி
ஒற்றை மாட்டுவண்டி நிறைய
ரோஜா செடிகளோடு
சென்று கொண்டிருந்தான்
வண்டியைப் பிடித்துக்கொண்டு
ஒரு சிறிய பையன்
செருப்பில்லாத கால்களோடு
கூடவே நடந்து வந்துக்கொண்டிருந்தான்
அது அவன் மகனாகவோ
உதவியாளனாகவோ இருக்கக்கூடும்.

அவர்கள் நீண்ட தொலைவிலிருந்து
வருபவர்களாக இருக்கக்கூடும்
அவர்கள் கண்களில்
களைப்பு ஏறியிருந்தது
அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை
வண்டியை இழுத்துச் சென்று கொண்டிருந்த
மாட்டின் கண்கள் ஈரத்தால் பளபளத்தன
ரோஜா செடிகள் விற்பவன்
இன்னும் ஏன் ஒரு செடிக்கூட
விற்கவில்லை என்று குழம்பினான்
யாரோ ஒரு வீட்டின் கதவை
நம்பிக்கையோடு தட்டினான்
நைட்டியோடு தலையை
முடிந்துக்கொண்டு வந்தவள்
‘இங்க மனுசங்களுக்கே இடமில்லை
பூச்செடி ஒண்ணுதான் குறைச்சல்’
கதவைச் சாத்திக் கொண்டாள்
வேறொரு வீட்டு வாசலில்
ஒரு வயோதிகர்
பூச்செடிகள் விற்பவனையே
உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்
‘ஒரு ரோஜா தொட்டி
வாங்கிக்கொள்ள முடியுமா?’
என்று அவரிடம் கேட்டான்
‘ரோஜா வேண்டுமென்றால்
கடையில் கிடைக்கிறது
செடிகளைப் பார்த்துக்கொள்ள
செடிகளோடு பேச
இப்போதெல்லாம் யாருக்கும் நேரமில்லை’
என்றார்
அப்போது அவரே
ஒரு ரோஜா செடிப்போல இருந்தார்.

பூச்செடி விற்பவனும்
சின்னப் பையனும்
மதிய வெயில் ஏறியபோது
தங்களுடைய நான்காவது
டீயைக் குடித்தார்கள்
ரோஜா செடிகள்
தாங்கள் பூக்கப்போகும் வீடு
எதுவெனத் தெரியாமல்
தங்களுக்கு நீருற்றப்போகும் கைகள்
யாருடையவை என்று தெரியாமல்
மாட்டு வண்டியில் குலுங்கிக்கொண்டிருந்தன
அவை இந்த நகரத்தின் மத்தியில்
நாம் ஏன் திடீரென
ஒரு நகரும் ரோஜா தோட்டமாக
மாறிவிடக்கூடாது என்று கனவு கண்டன.

அவர்கள் திடீரென
ஒரு சாலையின் தொடக்கத்தில்
எராளமான ரோஜா மலர்களைக் கண்டார்கள்
அப்போதுதான் அங்கே ஒரு சவ ஊர்வலம்
கடந்து சென்றிருக்க வேண்டும்
அது அந்தப் பையனைக் குதூகலமடையச்
செய்தது
ஓர் உதிர்ந்த ரோஜாவை எடுத்து
நுகர்ந்து பார்க்கிறான்
மாட்டின் குளம்புகளில் ரோஜாக்கள்
நசுங்குகின்றன.

ரோஜா வண்டியின் சக்கரத்தில்
ரோஜாக்கள் நசுங்குகின்றன
இறைந்த ரோஜாக்களின் பாதையில்
ரோஜா செடிகள் விற்பவர்கள்
வாடத் தொடங்கிவிட்ட ரோஜா செடிகளோடு
முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தார்கள்.

ரோஜா என்பது அன்பின் மலர்
ரோஜா என்பது காதலின் மலர்
ரோஜா என்பது நேருவின் மலர்
ரோஜா என்பது துயரத்தின் மலர்.

-          மனுஷ்யபுத்திரன்.

No comments:

Post a Comment