எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 30 December 2015

சென்னை மழை 2015



“மழை நமக்கு
இறந்தக் காலத்தையும்,
நிலையாமையும்,
கொள்ளைக் கூட்டத்தையும்,
இரக்கக் குணத்தையும்
அடையாளம்
காட்டி சென்றது...

மின்சாரத்தை நிறுத்தி
21-ம் நூற்றாண்டில்
18-ம் நூற்றாண்டின்
இருட்டைக் காட்டி
எண்ணெய் தீபங்களை
எல்லோரையும்
ஏற்ற வைத்தது.

ஐந்து இலக்க சம்பளம்
வாங்கியவரையும்
ஏ.டி.எம். வேலை செய்யாமல்
ஏழையாக்கியது.

சிட்டுக்குருவிகளை விரட்டிய
செல்போன் டவர்களை
செயலிழக்கச் செய்தது.

யாரையும் நகரை விட்டு
நகர முடியாமல்
நகரத்தையே
சுற்றி வளைத்தது.

ஏழை பணக்காரன்
என்ற வித்தியாசம்
பார்க்காமல்
எல்லோர் வீட்டுக்கும்
அழையா விருந்தாளியாக
சென்று கதவை முட்டி மோதி
திறந்து எல்லோரையும்
மொட்டை மாடிக்கு விரட்டியது.

தண்ணீர் கேன் வாங்கி
குடித்தவர்களை எல்லாம்
மழை நீரை பிடித்து
குடிக்க வைத்தது.
பாலுக்கும்,
ஒரு வேளைச் சோற்றுக்கும்
கையேந்த வைத்தது.

பறவைகளையும்  
விமானங்களையும்
பறக்க விடவில்லை
இந்த பெருமழை.

கூவம், அடையாறு
நதிகளை சாக்கடையாக்கிய
மக்களிடமும், அதிகாரத்திடமும்
மீண்டும் நதியாக்கி காட்டியது
இந்த பெருவெள்ளம்.

சர்வசாதாரணமாக
வீட்டுக்குள் நுழைந்த
வெள்ளம்
தனக்குப் பிடித்த
பொருள்களையும்,
உயிர்களையும்
எடுத்துச் சென்றது.

பால், தண்ணீர்,
அத்தியாவசியப் பொருட்கள்,
ஆட்டோ, பஸ் கட்டண
விலைகளை ஏற்றி
லாபம் பார்த்த
கொள்ளையர்களையும்
அடையாளம் காட்டியது
இந்த பெருமழை.

ஆறு, குளம், எரியின்
ஆக்கிரமிப்புகளை
அடையாளம் காட்டி
அதிகாரங்களையும்,
அதிகாரிகளையும்
அதிர வைத்தது.

கடைசியில்
அரசியல்வாதிகளின்
அதிகாரத்தையும்
ஆணவத்தையும்
குழித்தோண்டிப்
புதைத்த
இந்த பெரு மழை
பல நல்ல உள்ளங்களையும்
அடையாளம் காட்டியது..!”

-   K. அற்புதராஜு.









*** *** *** 

Sunday, 27 December 2015

படித்ததில் பிடித்தவை (ஆணாக இருப்பதன் கஷ்டம் – கவிஞர் மகுடேசுவரன் கவிதை)


ஆணாக இருப்பதன் கஷ்டம்
"யார்க்கும் தெரிவதில்லை
ஆணாக இருப்பதன் கஷ்டம்.

ஆணாதிக்க உலகம்
எங்கும் ஆண்களின் ஆளுமை
ஆணுக்கே அனுகூலங்கள்
எல்லாம் ஆண்மயம்
அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆணாக இருப்பது
அத்துணை கடிது.

சிறுவயதிலேயே பெற்றோர் கைவிடுவர்.
'உனக்கென்ன ஆம்பளப் பயதானேஎன்பர்.
தானாகத் தோழமைத் தேடி
கைவிடப்பட்ட களர்நிலத்தில் விளையாடி
மூக்கில் சளியொழுகி
கிழிந்ததை... தையற்பிரிந்ததை உடுத்தி
வளர்பவன் ஆண்.
ஏதொன்றையும் வாங்க
கடைத்தொலைவு கருதாமல்
மிதிவண்டி மிதிப்பவன்.

தந்தைக்கு எப்போதுமே ஆக மாட்டான்
வளர வளர அப்பனுக்கு மகன் அரை வைரிதான்.
கோயிலுக்கு நம்பிச் சென்றால்
வேண்டுதலென்று மொட்டை
மொண்ணைக் கத்தரி வைத்திருப்பவரிடம்
முடிவெட்டல்
வளர வளர செலவுக்குப் படும் பாடு இருக்கிறதே
யாரும் இதுவரை வெளியே சொன்னதில்லை.
நட்பு மட்டும் இல்லையென்றால்
கல்லூரியிலேயே இறந்திருக்கும்
ஆண் மனசு.

ஆண் தோற்கவே இயலாது.
தோற்றால் அவன் வீண்பிறப்பு.
கல்வியேறாத ஆண்தான்
எங்கும் கடைநிலைத் தொழிலாளி.
வாழத் துடிக்கும் ஆண் மனம்தான்
தாழ்ந்த பணிகளுக்கு இரை.

ஓர் ஆணைப் பிடித்துக் காயடிக்க
டாஸ்மாக் திறந்திருக்கிறது.
அவன் உழைப்பை உறிஞ்சித் துப்ப
தொழிற்சாலைகள் காத்திருக்கின்றன.

முதல் காதலுக்கு
விசுவாசமாக இருந்தவன் ஆண்தான்.
இத்தனை நெருக்கடிகளுக்கு இடையில்
அவனுக்குத் திருமணம்.
மொத்தமாக முடித்துக்கட்டும் ஏற்பாடு
அதற்கு மேல் அவன் துள்ள முடியாது.
இல்லறத்தானாகி
தாய்க்கும் தாரத்துக்கும் இடையில்
பதுங்கித் திரியும் பரிதாபப் புலி.

சட்டங்கள் எல்லாம் அவனுக்கே எதிர்.
பெருங்குற்றவாளிகளை நெருங்கவே முடியாத சட்டம்
குடும்பக் குற்றவாளிகளை
லபக்கெனப் பிடித்துப் போட்டுக்கொள்ளும்.
முற்காலமென்றால்
போருக்குப் போய்ச் சாகலாம்.
தற்காலத்தில்
எல்லாமே சாகவிடாத யுத்தங்கள்.

பற்றாக்குறை வாழ்க்கை துரத்தும் தேவைகள்
எங்கும் போட்டிகள் கழுத்தறுப்புகள்
குடும்ப அழுத்தங்கள்
நுரை தள்ளச் சுமந்து
மீதமுள்ள காலம் முழுக்க
ஓடுவான்... ஓடுவான்.
பிள்ளைகளிடமாவது
உண்மையாயிருக்க முயல்வான்.
எல்லா குறைகளோடும் உள்ள அவனை
சின்ன மகள் ஏற்றுக்கொள்கிறாளே
அது மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்.

இவ்வுலகில் ஆணாக இருப்பது
அத்துணை எளிதன்று..!"
 -          கவிஞர் மகுடேசுவரன்.

Tuesday, 22 December 2015

படித்ததில் பிடித்தவை (கொல்கத்தா காளி – கவிதை)


கொல்கத்தா காளி
“கொல்கத்தா காளிக்கு
நாக்கு நீளம்
அகண்ட கண்கள்
கோபப் பார்வை

இதுவரை
எந்தக் கருத்தும் சொன்னதில்லை
சாரதா சீட்டுக் கம்பெனி ஊழல் பற்றி
அரசியல் கொலைகளைப் பற்றி

வருஷாவருஷம் கொண்டாட்டம்
புதுப்புது பந்தல்
பவனி வருதல்
எந்த ஆட்சி மாறினாலும்
திருவிழாக் கூட்டம் குறையவேயில்லை

பிழைக்கத் தெரிந்தவள்..!”

                                            -   கோசின்ரா.