எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 16 November 2018

அமர காவியம்



கிராமத்து தோட்டத்தில்
உயர்ந்து வளர்ந்த
இரண்டு தேக்கு மரங்களை
நகரத்தில் வீடு
கட்டப் போகும்
மகனுக்காக
வளர்த்து வந்தார்
தந்தை

நகரத்தில் மகனுக்கு
வங்கி கடன் கிடைப்பதில்
தாமதமாகி மரத்தின்
ஆயுள் நீண்டுக் கொண்டிருந்தது…

மகன் கிராமத்துக்கு
வரும் போதெல்லாம்
தேக்கு மரத்தை
வெட்டுவதைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கும்
தந்தையிடம்,
வங்கி கடன் தாமதமாவதால்
சற்றே பொறுத்து
வெட்டலாம் என
சாக்கு சொல்லி
அழகான அந்த மரங்கள்
வெட்டப்பட போவதை தவிர்த்து
மரத்தின்
ஆயுளை மேலும்
நீட்டிக்க செய்வான் மகன்…

மகனின் கருணையில்
குளிர்ந்துப் போனாலும்,
வங்கி கடன்
தனது ஆயுளை தீர்மானிப்பது
பிடிக்காத அந்த மரங்கள்
வெட்டுவதற்கு ஏதுவாக
சரித்துக் கொண்டன
இப்போது வீசிய

கஜா புயலில்..!

-     கி. அற்புதராஜு.

Monday, 12 November 2018

பார்வைகள் பலவிதம்...



மாநகரத்தை நோக்கிய
பயணத்தில்
அந்த புறநகர்
ரயில் நிலையத்தில்
வந்து நின்ற மின்சார ரயிலின்
சன்னல் வழியே
பார்த்தப் போது
புதரின் மீது அபூர்வமாக
ஒரு கொக்கு தெரிந்தது.

கழுத்தை வளைத்து நெளித்து
ரயிலையே பார்த்துக் கொண்டிருந்தது.
நடைமேடை இருக்கையில்
இரு பெண்கள்
உட்காரும் வரை
கொக்குக்குள் நான்.

அதற்குப் பிறகு
இரண்டு பெண்களுக்குமான
இடைவெளியில்தான்
கொக்கு தெரிந்தது...

அந்த நொடிப் பொழுதில்...
அதுவரை கைபேசியை
பார்த்துக் கொண்டிருந்த
எதிர் இருக்கைக்காரர்
என்னைப் பார்த்ததும்,
அந்த பெண்கள்
என்னைப் பார்த்ததும்,
கொக்கு பறந்ததும்,
ரயில் புறப்பட்டதும்
ஒரே நேரத்தில் நிகழ்ந்தது..!

-   கி. அற்புதராஜு.

Wednesday, 7 November 2018

படித்ததில் பிடித்தவை (‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ – கவிஞர் தாமரை கவிதை)



ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்...


கசப்பாக இருந்தது
அம்மா அப்பாவையும்
ஆற்றோர கிராமத்தையும்
நூறுமைல் தூரத்தில்
விட்டுவந்து
அப்படியென்ன படிப்பு?

விடுதி
சென்ம விரோதியாயிற்று...
காற்றடித்து என்
பிறந்தமண்ணை அள்ளி
வந்து போட்டதால்
சன்னல் மட்டும்
சிநேகிதியாயிற்று...

வாரம் இருமுறை நானும்
மும்முறை பெற்றோரும்
வந்து போனோம்...
ஆனாலும்
இதென்ன படிப்பு
இதென்ன வாழ்க்கை...?

குறைந்தது நூறுமுறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்த காலத்தையும்,
வந்து அழைத்துப் போங்களையும்...

திடீரென்று எனக்குள் ஒருகதவு
அறைந்து திறந்தது
என் அறைக் கதவு
திறந்தது போலவே...

அறைத் தோழியாய் வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது.
யாழ்ப்பாணத்துக் காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...

என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்

அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
அடுத்தமுறை அங்கே
வரும்போது
ஒரு சிநேகிதியை அழைத்து
வருவேன்...
முடிந்தால் அவளையும்

மகளே என்று விளி...

- தாமரை.

Tuesday, 6 November 2018

படித்ததில் பிடித்தவை (வாழ்க்கைப் பிரச்சனை – கவிஞர் தாமரை கவிதை)



வாழ்க்கைப் பிரச்சனை

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்கவே முடியவில்லை

 கோடை மழையல்ல அது
கொட்டும் மழை!

நானும் குட்டித் தம்பியும்
கடைசித் தங்கையும்...
எனக்குதான் வயது அதிகம்
எட்டு!

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோம்
தெருவெல்லாம் ஆறாக நீர்...
மின்னலும் இடியுமாய்
வானத்திலே வன்ம யுத்தம்!

எதிர் சாரியிலிருந்த குடிசைகளெல்லாம்
முழ்கிக் கொண்டிருந்தன
கூச்சலும் குழப்பமும் எங்கெங்கும்...

உயிர்ப் பிரச்சனையும் வாழ்க்கைப்
பிரச்சனையுமாக
ஊரே ரெண்டுபட்டது!

வேடிக்கைப் பார்த்த என்னை
எட்டி இழுத்தாள் குட்டித் தங்கை
உள்ளே வா அண்ணா...

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்கவே முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்!

-   தாமரை (கணையாழி, நவம்பர்-1995).

Sunday, 4 November 2018

படித்ததில் பிடித்தவை (நினைவில் விழும் கற்கள் – கவிஞர் இளம்பிறை கவிதை)



நினைவில் விழும் கற்கள்

இப்போது நினைத்தாலும்
வருத்தமாக உள்ளது...

காய வைத்த தானியங்களை
காவல் காக்கும் சிறுமியாக
காக்கைக் குருவிகள் மீது
கல்லெறிந்து கொண்டிருந்ததை..!

-   இளம்பிறை, சாட்டியக்குடி.

Friday, 26 October 2018

படித்ததில் பிடித்தவை (மயிலிறகைக் காணவில்லை..! – கவிஞர் தாமரை கவிதை)



மயிலிறகைக் காணவில்லை..!

அடம் பொறுக்க முடியாமல்
எங்கிருந்தோ எப்படியோ
அப்பா வாங்கி தந்துவிட்டார்
அழகான இரண்டு மயிலிறகு!

அறிவியல் புத்தகத்தில் வைத்து
அரிசி நாள் தவறாமல் போட்டு
ஒரு நாளைக்கு எட்டுத் தடவை பார்த்தும்
என்னுடையது குட்டி போடவில்லை!

என்னுடையது போடவில்லை
என்று கூட அழுகை வரவில்லை
அரிசியே போடாத எழுமலையுடையது
போட்டுவிட்டது என்ற போதுதான்
பொங்கிப் பொங்கி வந்தது.

அப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும்
அழுகை!

பலப்பத்தைப் பிடுங்கிக் கொள்ளும்
பக்கத்து இருக்கை பரசுவை
எதிர்க்க முடியாத போது...

எச்சில் துப்பி குழிமூடிச் சுட்ட
மண் இட்லிகளை மகேசு
மிதித்துப் போன போது...

அரசிலையைச் சுருட்டிச் செய்த
சீக்கியில் சத்தம் வராத போது...

இன்னும்...

தூரத்தில் கோடங்கிச் சத்தத்திற்கும்,
யாரும் பார்க்காத போது
அண்ணன் கிள்ளுவதற்க்கும்...

ஒப்பாரி இல்லாமல்
ஒரு நாள் கூட வீடு திரும்பியதில்லை...

எப்போது நிகழ்ந்ததென்றே
தெரியவில்லை..!

முக்குத் திரும்புகையில்
கல் தடுக்கி விழுந்து
முட்டியை உடைத்துக் கொண்ட போதும்
ஒப்பாரி வைக்காமல்
சுற்றுமுற்றும் பார்த்துத் துடைத்துக்
கொண்ட தினத்திலிருந்து
என் மயிலிறகைக் காணவில்லை..!

-   தாமரை (கணையாழி, ஆகஸ்ட்-1998).

Thursday, 4 October 2018

படித்ததில் பிடித்தவை (“இப்பொழுது மழை பொழிந்து கொண்டு இருக்கிறது...” – க.ஆனந்த் கவிதை)


இப்பொழுது மழை பொழிந்து கொண்டு இருக்கிறது...

இந்த மழையில்
நீங்கள்
மொட்டை மாடியில்
காயப் போட்டவற்றை
காப்பாற்ற ஓடுபவராக இருக்கலாம்.

எடுத்துவர மறந்த
குடைக்கு சலித்து
எங்கேனும்
ஒதுங்கி நிற்பவராக இருக்கலாம்.

கண்ணாடி சன்னல் வழியே,
அரிதாகக் கிடைத்த
அவகாசத்தில்
மழையை ரசிப்பவராக இருக்கலாம்.

மழை குறித்த பிரக்ஞையின்றி
அடுத்த வேலைக்கான
அவசரத்தில் இருப்பவராக
இருக்கலாம்.

எப்பொழுதும் போல்
இப்பொழுதும்,
மழை,
மழையாக மட்டுமே
பொழிந்து கொண்டு இருக்கிறது.

- க.ஆனந்த்.

Sunday, 30 September 2018

வீரம்


“காட்டுப் புலியை 
வீட்டு முறத்தால் 
அடித்து விரட்டிய 
தமிழ் பெண்ணின்
வீரத்தையும்...

போரிலும்,
மிருக வேட்டையிலும்
தமிழ் மன்னர்களின்
வீரத்தையும்...

படித்து முடித்தவுடன்
படுத்துக்கொண்டேன்
கொசு வலைக்குள்..!
- கி. அற்புதராஜு.