எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 17 November 2024

படித்ததில் பிடித்தவை (“நவ்வாப் பழம்” – கல்யாண்ஜி கவிதை)

 

*நவ்வாப் பழம்*

 

பேருந்துக்குக் காத்திருக்கையில்

எனக்கு பக்கத்து நபரிடம் பேசும்

கெட்ட பழக்கம்.

வெளுத்த சட்டை பூராவும்

ஒரே கறையா இருக்கே..?’

என் கேள்விக்குக் கீழே குனிந்து பார்த்தவர்

கருநீலக் கறைகளைத் தொட்டுச் சிரித்தார்.

காத்துக் காலம் லா…

நவ்வாப் பழம் உதுந்தது அது

சட்டையை மறுபடி நீவிக்கொண்டார்.

நாவல் பழம் உதிர்கிற

காற்றுக் காலத்திற்கு

எந்தப் பேருந்தில் ஏறினால்

உடனே போகலாம்..?

 

*கல்யாண்ஜி*



Monday, 4 November 2024

படித்ததில் பிடித்தவை (“இலவசமாய்க் கிடைக்கிறது” – ஷான் கவிதை)

 

*இலவசமாய்க் கிடைக்கிறது*

 

பாறையாய்க் கிடக்கும்

மனங்களை

மெல்லிய குச்சி ஒன்றால்

தட்டித் தட்டி

திறக்க முயன்றபடி

ரயிலாடி நடக்கிறாள்

அவள்.

 

சிலர் வாங்குகிறார்கள்.

சிலர் பேரம் பேசுகிறார்கள்.

சிலர் இரக்கப் படுகிறார்கள்.

சிலர் பயணம் மட்டும் செய்கிறார்கள்.

 

பேனா, கீசெயின்,

பொம்மை, டார்ச்லைட்

எது வாங்கினாலும்

இலவசமாய்க் கிடைக்கிறது

வாழ்க்கைக்கான பாடமொன்று

பார்வையற்ற சிறுமியிடம்..!

 

*ஷான்*