எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 28 August 2017

எனது கட்டுரை: நிறம் மாறும் பூக்கள்...


நிம் மாறும் பூக்ள்...
-    கி. அற்புதராஜு.

ஜூலை மாத 4-வது சனிக்கிழமை மாலை அமைந்தகரை லஷ்மி தியேட்டர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 15 B பேருந்தில் சென்ட்ரல் செல்ல நானும், மனைவியும் ஏறினோம். மகளிர் இருக்கைகள் மட்டும் காலியாக இருக்க இருவரும் அதில் உட்கார்ந்தோம். 

அடுத்த நிறுத்தத்தில் நிறைய பெண்கள் ஏற நான் மட்டும் எழுந்து நின்றுக் கொண்டேன்.  தலையில் மல்லிகைப் பூவுடன் பேருந்தில் ஏறிய ஒரு நடு வயது பெண், சற்றே காலை வெளியே வைத்தப்படி உட்கார்ந்திருந்த பெண்ணிடம், "ஏன் காலை வெளியே நிட்டி உட்கார்ந்திருக்கிறாய்..? உன்  கால் தடுக்கி நான் கீழே விழுந்திருந்தால் எனக்கு அடிப்பட்டிருக்கும்..." என நின்றபடி சண்டை பிடித்தார். காலை உள்ளே நேராக வைத்த அந்தப் பெண் எதுவும் பேசாமல் இருக்க, எதிர்வினையின்றி சண்டைப்பேச்சு தொடரவில்லை.

அடுத்த நிறுத்தத்தில் கணவன், மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ஏறியவர்கள் உட்கார இடமின்றி எங்கள் அருகில் நின்றுக் கொண்டனர். 

ஒருவர் இறங்குவதற்கு இறுக்கையிலிருந்து  எழுந்தவுடன் தாவி சென்று உட்கார்ந்தார் சண்டை போட்ட அந்தப் பெண். பக்கத்தில் ஒரு வட இந்திய நபர் உறங்கிக் கொண்டிருந்தார். நிற்பவர்கள் பக்கமாக ஒய்யாரமாக பக்கவாட்டில் காலை நீட்டி உட்கார்ந்த அந்தப் பெண் கைப்பேசியில் பாடல் கேட்க ஹெட்செட்டை மாட்டினார். நிற்பவர்களுக்கும், நடப்பவர்களுக்கும் இடைஞ்சலாக இருந்தாலும் மெளனமாகவே பயணித்தார்கள். நானும்  பொங்கி எழுந்த கோபத்தை தலையில் தட்டி உட்கார வைத்தேன். 

அடுத்த நிறுத்தத்தில் கைக்குழந்தையுடன் அப்பா இறங்கும் போது பின்னால் சென்ற குழந்தையின் அம்மா காலை குறுக்கே வைத்து உட்கார்ந்து பாடல் கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண்ணின் காலை மிதித்து விட்டார். அவ்வளவுதான் அந்த பெண்ணுக்கு கோபம் வந்து, "அய்யோ காலை செருப்பு காலால் மிதித்து விட்டு போறா பாரு... இவளுக்கெல்லாம் கண் இருக்கா... இல்ல பொட்டையா..." என கத்த, பேருந்தே அவரைப் பார்த்தது. மிதித்து சென்றவர் சொன்ன "சாரிம்மா" வை ஏற்றுக் கொள்ளாமல் சரமாரியாக திட்டிக் கொண்டிருந்தார். பேருந்து கிளம்பியப் பிறகும் வசைப் பாடல் தொடர்ந்தது...

"ஏம்மா நீங்க பேருந்து ஏறியவுடன் காலை நீட்டியிருந்த பெண்ணிடம் சண்டைப் போட்டீர்கள்... நீங்க மட்டும் காலை குறுக்கே வைத்திருந்தது நியாயமா? காலை குறுக்கே வைத்தால் போறவங்களுக்கு இடைஞ்சலாதான் இருக்கும்... மிதிக்கதான் செய்வாங்க... உங்களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா?" என மீண்டும் பொங்கி விட்டேன்.

"இந்த ஆள் இப்படி உட்கார்ந்தால் நான் காலை வெளியேதான் நீட்டி உட்கார முடியும்" என பக்கத்து இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த வட இந்தியரிடம் தனது தவறை தள்ளி விட்டார். சத்தம் கேட்டு விழித்த அவர் ஒன்றும் புரியாமல் முழித்தார். பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதை உணர்ந்தவுடன் சற்றே இடம் விட்டு நகர்ந்து அமர்ந்தார். காலை மிதித்த பெண்ணை வசைப் பாடியவர் இப்போது அந்த வட இந்திய நபரை வசைப் பாடி எதிர்வினை அற்ற ஆட்டம் ஆடினார். 

சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவுடன் பேருந்திலிருந்து அந்தப் பெண் இறங்கும் போது நாங்களும் இறங்கினோம். அந்தப் பெண்ணின் தலையில் இருந்த மல்லிகைப் பூ சற்றே நிறம் மாறி வெண்மையிலிருந்து பழுப்பாகியிருந்தது மாலை வெயிலில்..!
*** *** ***

No comments:

Post a Comment