எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 20 May 2016

முரண்


“அரசு வாகனத்தில்
பயணிக்கும் சிறுமிக்கு
இந்த சிறிய வயதில்
அரசாங்க வேலைக்
கொடுத்தது யார்..?”

“பொம்மையை
பெரியவர்கள் கையில்
கொடுத்துவிட்டு
அவர்களின் கைப்பேசியில்
விளையாடுகின்றன
குழந்தைகள்..!”

“இரு பக்கமும்
ஏறுவதற்கு எஸ்கலேட்டர்
இறங்குவதற்கு இரும்புப்படிகள்
கொண்ட நகரத்து சாலையின்
நடை மேம்பாலம்.
நான் எளிதாக
ஏறிக் கொண்டிருந்தேன்.
எதிரே ஒருவன்
மரக்கால்களுடன்
கஷ்டப்பட்டு படிகளில்
இறங்கிக்கொண்டிருந்தான்.
என் மனசு கஷ்டப்பட்டது.
அவன் மனசு இயல்பாக
இருந்திருக்குமோ..?”

“பாம்புக்கும், நரிக்கும்
பயப்படாமல்
வீட்டிலிருந்து
வயல் காட்டுக்கு
சென்று வந்த
விவசாயியை
பயமுறுத்துகிறது
குறுக்கே புதிதாக வந்த
ஹைவே சாலை..!”

-   கி. அற்புதராஜு.

2 comments:

  1. ரசித்தேன். கஷ்டம் கஷ்டப்படாமல் பார்ப்பவன் மனதில், கஷ்டம் பழகிப்போனவனுக்கு அல்ல. இயற்கையோடு இணைந்தவனுக்கு செயற்கையே பயம் தருவது. குழந்தை கைபேசி வரிகளை பலரோடு பகிர்ந்து கொண்டேன்.

    ReplyDelete
  2. ரசித்தமைக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றி...

    ReplyDelete