லுங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்கிறது!
“ஆண்களின் தாவணி
லுங்கி என்றால் மிகையாகாது.
காரணம்
லுங்கி வயது வந்தவர்களுக்கானது.
வீட்டில் துவைத்த லுங்கிகளை
யார் வேண்டுமானாலும் உடுத்தலாம்.
லுங்கி வேற்றுமையில் ஒற்றுமையில்
உருவானது.
லுங்கி இல்லாத வீட்டில்
ஆண்கள் இல்லையென்றும்
அர்த்தம் கொள்ளலாம்.
அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை
இன்னமும் லுங்கிகளே
தாங்கிப்பிடித்திருக்கின்றன.
போன வாரம்
லுங்கி கட்டிக்கொண்டு
கே.எப்.சி. போயிருந்தேன்.
கடைக்காரன் என்னை மட்டும்
வித்தியாசமாகப் பார்த்தான்.
எனக்கொன்றும் புரியவில்லை.
கடந்த பதினாறு வருடங்களாக
மட்டன் வாங்க
லுங்கி கட்டிக்கொண்டுதான்
பாய் கடைக்குப் போய் வருகிறேன்.
ஒரு நாளும்
அவர் என்னை அப்படிப் பார்த்ததில்லை!”
- அசோக் பழனியப்பன்.
No comments:
Post a Comment