எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 17 March 2017

படித்ததில் பிடித்தவை (“விமான நிலைய வரவேற்பொன்றில்…” - செல்வராஜ் ஜெகதீசன் கவிதை)


விமான நிலைய வரவேற்பொன்றில்

பயணக் களைப்பாய்
இருக்கலாம்.

போய்வரும் இடத்தில்
நேர்ந்த உறவைப்
பிரிந்ததால் இருக்கலாம்.

எதிர்கொண்டழைக்க
எவருமற்று காணும்
புது இடம் குறித்த
மிரட்சியாய் இருக்கலாம்.

ஏக்கமும் சோகமும்
கொண்டு எதிர்பட்டவனை
நோக்கி இதழ்க்கோடியில்
தவழ விட்டேன்
புன்னைகையொன்றை.

சற்றே சலனம் காட்டி
பின் சமாளித்து
போய்க்கொண்டிருந்தவன்
நினைத்திருக்கக்கூடும்
ஏதும் என்னைப் பற்றி.

இறுக்கிப் பிடிக்கும்
வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க
முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு…

-         ---      செல்வராஜ் ஜெகதீசன்.

Tuesday, 7 March 2017

படித்ததில் பிடித்தவை (“வயது வந்தவர்களுக்கு…” - சுஜாதா கட்டுரை)


வயது வந்தவர்களுக்கு
உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.

பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள். அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட்தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் கலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ள்ஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது (ஆண்-பெண்) இனி அவை:

     1.     ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவதுநம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவின விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

     2.     அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.

     3.     முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளியே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமைஎன்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

     4.     நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம். நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம்தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.

     5.     ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில் யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.

     6.     இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகும் முன் எண்ணிப் பாருங்கள்.

     7.     வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸ்னஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

     8.     எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ, சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.

    9.     ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.

     10.    படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜில் இன்று நடந்தது அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.

      -         சுஜாதா.

*** *** *** ***

Saturday, 4 March 2017

படித்ததில் பிடித்தவை (மற்றுமொரு அடிமை - கனிமொழி கவிதை)


மற்றுமொரு அடிமை

"சட்டாம்பிள்ளையாய்
அம்மா.

சிறைக் காவலராய்
அப்பா.

அறிவுச் சலவைக்குப்
படிப்பு.

கைகொட்டிச் சிரித்து அடக்கி
வைக்கச் சுற்றம்.

சிலுவையின் ஆணி தகர்த்து
இறங்கி வந்தால்
கையில் தாலிக் கயிற்றோடு
கணவன்.

உன் கருவறைக்குள்
மற்றுமொரு
அடிமை..!"

                                       - கனிமொழி.

Sunday, 26 February 2017

படித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் முதல் சிறுகதை – “எழுத்தில் ஹிம்சை”)


சுஜாதாவின் முதல் கதை!
பிப்ரவரி 27 - எழுத்தாளர் சுஜாதாவின் நினைவுநாள். திருச்சி பெரியகடைத் தெருவில் இயங்கி வந்த சிவாஜிஇதழில், ‘எழுத்தில் ஹிம்சைஎன்ற தலைப்பில் சுஜாதா எழுதிய முதல் சிறுகதை வெளியானது. எஸ்.ரங்கராஜன் என்கிற தனது இயற்பெயரில்தான் அந்தக் கதையை எழுதியிருந்தார் சுஜாதா. அப்போது அவருக்கு வயது 18. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்துதான் அவர் மீண்டும் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார்.

கதை வெளிவந்தபோது திருச்சி நகரமே அலம்பிவிட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் சிவாஜிஇதழின் காப்பிகள் கடகடவென விற்றுத் தீர்ந்துவிட்டன. எல்லாவற்றையும் நானே வாங்கிவிட்டதால்!என, தன் முதல் சிறுகதை வெளிவந்ததைப் பற்றி, சுஜாதாவாக மாறிய பிறகு எழுதியிருக்கிறார் எஸ்.ரங்கராஜன்.

முதல் முறை அந்தக் கதை வெளிவந்தபோது அடைந்த சந்தோஷத்தை நான் மறுபடி பெறவே இல்லை. அந்த சிவாஜி பத்திரிகை பிரதியை எனக்கு இப்போது யாராவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால், அவருக்கு என் ராஜ்யத்தில் பாதியையும் எனது மகளையும் திருமணம் செய்து தருகிறேன்என்று தமாஷாகச் சொன்னார் சுஜாதா. ஆனால், அவர் இருக்கும்வரை அவருக்கு அந்தக் கதை கிடைக்கவில்லை என்பதோடு, அவரிடம் ராஜ்யமும் இல்லை; அவருக்கு மகளும் இல்லை.
- பா.சு. ரமணன்.

எழுத்தில் ஹிம்சை - சுஜாதா

சார்லஸ் லாம்ப் (Charles Lamb) கட்டுரை கவிதைகள் எல்லாம் இரவு வேளைகளில்தான். அதாவது இரவு 10, 11 மணிக்கு மேல்தான் எழுதுவானாம். எழுத்தாளர் வி.நாகராஜன் அவர்களும் அப்படித்தான் ராத்திரி வேளையின் பயங்கர அணைப்பில்தான் அவர்கள் கற்பனைக்கு மூச்சு வரும். சரசரசரவென சாரைப்பாம்பு சீறுவதுபோல அவருடைய பேனா, அந்த வேளையில் சீறும். அந்த இரிடியம்முனையில் எத்தனை துளிக் கண்ணீர், எத்தனை துளி ரத்தம், எத்தனை கனவுகள், எத்தனை காதல்கள், எத்தனை தந்திரங்கள்?
நாகராஜனின் புத்தகங்கள் அநேகம் வந்துவிட்டன. அவை யாவும் கொலைக் கதைகள், கொள்ளைக் கதைகள். கருணாநிதி பாங்க் கொள்ளை கொலை!' - `வைரத்துக்காக நாலு உயிர்', `பயங்கரம்... அதிபயங்கரம்!', ‘விலாப் புறத்தில் கத்தி' இவை அவரின் ஏராளமான நாவல்கள். சிலவற்றில் விநோதமான தலைப்புகள். கண்ணாடி முகமூடி அணிந்த ஒரு பெண். அவள், அடேயப்பா! எத்தனை அட்டகாசங்கள் செய்கிறாள்? கடைசி அத்தியாயத்தில் அவள் தன் முகமூடியைத் திறந்ததும்... ஐயோ! அந்த அத்தியாயம் எத்தனைப் பேர்களை ஆச்சர்யத்தில் மடக்கியிருக்கிறது?...

அப்போதுகூட அவர் ஏழரைக் கொலைகள்' என்ற ஒரு நாவலைத்தான் பாதி எழுதிக் கொண்டிருந்தார். அவரது துப்பறிபவன் (டாயிலுக்கு ஷெர்லக் ஹோம்ஸ்போல இவருக்கு துரைமூர்த்தி) ஆறாவது பிணத்தை ஒரு ஹை பவர் லென்ஸ்வைத்து ஆராய்ந்துகொண்டிருந்தான். பக்கங்கள் பறந்துகொண்டிருந்தன. ஏழாவது கொலைக்கான செட்டிங்குகள் எல்லாம் சேர்த்து ஜோடித்தாகிவிட்டது. மயிர்க்கூச்செறியும்படியாக அந்தக் கொலை துரைமூர்த்தியையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டு நடக்கப்போகிறது...

வதனராஜ், ‘ஒப்பன் ஹீம்நாவல் ஒன்று படித்துக்கொண்டிருந்தான். அதிபயங்கரமான நாவல் அது. நெற்றிப்புருவத்துக்குக் கொஞ்சம் மேலே முத்து வரிசையாக வியர்வைத் துளிகள் படிந்து இருந்தன. திடீரென வதனராஜன் தன் மேல் ஏதோ நிழல் படிவதை உணர்ந்தான்.

இப்படி எழுதினதும் நாகன்' (இதுதான் அவர் புனைபெயர்) தண்ணீர் குடிக்கக் கண்ணாடி டம்ளரை எடுக்க...

என்ன ஆச்சர்யம்... கிளாஸ் டம்ளர், (பக்கத்தில் மேஜையில் இருந்தது) மெள்ள மெள்ளக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. சுமார் ஐந்து அடி உயரம் வரை பிரயாணம் செய்து நின்றது. அப்புறம் லேசான சிரிப்புக் கேட்டது நாகனுக்குபயம் ஜிலீர் எனப் பரவியது உடம்பு பூராவுமாக!

சார் நாகராஜன்!

நாகராஜனின் விழிகள் பிதுங்கிக்கொண்டன! (கதையில் காமினியினதைப்போல)

சார் நாகராஜன்!” - ஸ்பஷ்டமான மனிதக் குரல்.

யாரு?

சார், நீங்க துளிகூட பயப்பட வேண்டாம். மரவட்டையைப்போல நான் ரொம்ப ஹாம்லெஸ் (Harmless).”

நீ யாரு முதல்லே!

என் பேர் பரந்தாமன். நான் ஒரு கிராஜுவேட்.

நீ எங்கப்பா இருக்கே... தெரியல்லையே?”

இங்கேதான் சார். நான் ஆவி!



ஹாவ்!நாகன் எழுந்தார். அவர் தோளை இரண்டு கரங்கள் மெல்லிதாக அழுத்தம் கொடுத்து, நாற்காலியில் மீண்டும் உட்கார வைத்தன. நாகராஜன் அசந்துவிட்டார்.

சார், என்னைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. நான் ஒன்றும் செய்ய மாட்டேன் சார். வீணாகக் கலவரப்பட்டாத்தான் அப்புறம் கேவலமாப் போய்விடும்.

அப்பா பரந்தாமா, நான் என்னப்பா ஏதாவது டெலிகைனஸிஸ், ப்ளான்ச் செட்ரைடிங், டெலிபதி, இதுகள்ல ஏதாவது படிச்சுப்புட்டு உன்னை வரவழைச்சேனா? இல்லையே! ஏன் என்கிட்ட வந்தே பயப்படுத்துறதுக்கு!

சார், அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். உங்க நாவல்களை நான் எப்பவாவது இந்த முனிசிபாலிட்டி கருணாமூர்த்திகள் வெச்சு நடத்துற பார்க்குகளிலே மஞ்சள் வெளிச்சத்திலே படிக்கிறது உண்டு சார். எங்களோட லோகத்திலேயும் உங்களுக்கு நல்ல மார்க்கெட் உண்டு சார். பஞ்சாமி, உங்க நாவல்னா உசிரைவிடுவான். ராஜிக்குப் பொழுதுபோக்கே அதான் சார்.

பஞ்சாமி, ராஜி இவர்கள் ஆவி உலகவாசிகள் என்று ரொம்ப சஞ்சலத்துடன் புரிந்துகொண்டார் நாகன். அப்பா, நான் மனுஷன்தாம்பா. தயவுசெய்து நல்லவேளையா போய்விடு. எனக்கு என்னமோ எலும்பெல்லாம் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்கிறாப்போல இருக்கே.

மெல்லிசான சிரிப்புச் சத்தம் கேட்டது.

சார், நீங்க பெரிய ஹ்யூமரிஸ்ட் (Humourist) சார். உங்க மாஸ்டர் பீஸ் விலாப்புறத்தில் கத்தியிலேதுரைமூர்த்தி அந்த...

என்கிட்ட என்ன காரியமா வந்தே? அதையாவது சொல்லேன்! எனக்கோ பதின்மூன்றாம் தேதிக்குள் இந்த நாவலை முடித்துவிட வேணும். பப்ளிஷர் இல்லாட்டா நாயா விழுவான்!

சார், நான் வந்தது ஒரே ஒரு ஹெல்ப்புக்காக சார்!

“...”

நல்ல பிசாசுஎன்று ஒரு கதை படிச்சிருக்கீங்களா சார்!

ஆமா!

அதைப்போல உங்களுக்கு ஸ்கொயர் வோர்ட்ஸ்க்கு ஆன்சர் கொண்டுவந்து கொடுத்து அப்படியே உங்களை பணத்தாலேயே அபிஷேகம் பண்ணுவேன் சார்! ஒண்ணு மட்டும் நீங்க செய்தீங்கன்னா...’'

என்னப்பா செய்யணும்?” ‘நாகனின்குரல் கலிஃபோர்னியாவிலிருந்து கேட்பதுபோல் இருந்தது.

சிம்பிள் சார். ஒரே ஒரு கொலை செய்யணும்!

என்ன!'’ தமிழ்நாட்டு எட்கர்வாலேஸுக்கு சிறுகுடலில் பாம்பு நெளிந்தது. இருதயத்தை நாய் கவ்வியது. (எல்லாம் அவர் வர்ணனைதான்.)

அந்த ஆவி மிச்சம் தண்ணீரில் பாதியை உறிஞ்சிக் குடித்து டம்ளரைக் கீழே வைத்துவிட்டது.

அப்பா, என்கிட்ட ரிவால்வர்கூட இல்லை உன்னைச் சுடுறதுக்கு!'’

சுட்டாக்கூட என்னைத் தாண்டிண்டுதான் குண்டு போகும் சார்!'’

நீ போ. எனக்கு தலை கிறுகிறுன்னு வரது.'’

சார், இதுவரைக்கும் நீங்க நாவல்களிலே என்ன அழகாக் கொலைகளை வர்ணித்திருக்கீங்க!'’

ஐயோ... ஐயோ!’'

நான் என்ன ஆயிரம் பேரைக் கொலை பண்ணச் சொன்னேனா? சும்மா ஒரே கொலை! சிம்பிள்... ஒரு கிச்சன் கத்தி, டொமேடோ நறுக்கிற கத்தி! இதை சிம்பிளா பக்கவாட்டிலே செருகிவிடவேண்டியது. பெண் பிள்ளைகள் விலாப்பாகமெல்லாம் சும்மா புது ரொட்டியாட்டம்தான் இருக்கும்.

மேலே நாகனின் தொண்டையில் ஒரு மேட்டூர் அணை எழும்பிவிட்டது. மண்டையில் பிரபஞ்சக் கிரகங்கள் அனைத்தும் சுற்றிவந்தன.

சார்... சார்... சார், மயக்கமா என்ன? பரபரப்புடன் ஒரு கண்ணுக்குத் தெரியாத கை அவரைத் தாங்கிப்பிடித்தது.

வேண்டாம் என்னைத் தொடாதே! என் எலும்பு பூரா கண்ணாடிபோல உடைந்துவிடும்சினிமா வசன பாணியில் உளறிக்கொட்டினார்.
சார், நான் என்ன சார் செய்தேன் உங்களுக்கு மயக்கம் வரதுக்கு?''

அப்பா (பெருமூச்சு) இந்தக் கதைகளை எல்லாம் நம்பாதே. கைபோகிற போக்கில் எழுதினது எல்லாம்...

ஒண்ணுமில்லை சார், ஒரு பெண்பிள்ளை... தெற்கு ராமநாதபுரத்தில் 18-ம் நம்பர் வீடு! பேசாம கத்தியை ஆப்பிள் பழத்திலே அழுத்தறாப்பலே அழுத்திவிட்டு வந்திடுங்க.''

அப்பா, நான் சொல்றதைக் கேட்காம நீபாட்டுக்கு உன் கதையையே சொல்லிண்டு போராயே, என்னாலே இப்ப...

பெயர்கூட நளினி. ஸார் நான் செத்துப்போய் இந்த ரூபத்துக்கு வந்ததே அவளாலேதான் சார்!

எனக்கு என்னமோ எல்லாம் பதர்றது.

நீ சத்தமில்லாம வந்த வழியே போய்டு.

சார், அவ்வளவு லேசுல விட மாட்டேன் சார். நான் சொல்றதையாவது கேளுங்களேன்.

நான் இந்தப் பெண்ணையே சுத்தி (ஆவியா இருக்கிறபோது இல்லை) இருந்தேன். ஒருநாள் டிஸ்டிரிக் போர்டு, ஆபீஸ் ரோடிலே தனியாய்ப் போயிண்டிருக்கிறபோது எதிர்ப்பட்டு ஏன் என்னையே சுத்திண்டு? கண்டபடி கலாட்டா பண்ணிண்டு இருக்கேனு கேட்டாள் சார். நான் சிகரெட் புகையை அவள் மூஞ்சியிலேயே ஊதினேன். அவள் ரொம்ப கோபம் வந்து, கையில் இருந்த பேனாக்கத்தியை விரித்து விலாவிலே குத்திவிட்டாள். அங்கேயே செத்து விழுந்துட்டேன். ஒரு டிரெய்னேஜ் மூடியைத் திறந்து என் பிணத்தை உள்ளே போட்டு மூடிவிட்டாள் சார்! அந்த இடம் அமானுஷ்யமான இடம் சார். அதனாலே என் பிணம் டீகம்போஸ் ஆகி வெளுத்து அடையாளமே தெரியாம மாறினப்புறம்தான் சார் இழுத்துப் போட்டாங்க. அதுவும் ஏதோ நார்றதேன்னு! பூ பூன்னு சங்கை ஊதிக் கடைசியிலே அநாதைப் பிணங்களைப் புதைக்கிற இடத்திலே புதைச்சுட்டாங்க. அங்கேதான் தற்போதைக்கு ஜாகை!

ஆவியா மாறின பிற்பாடு, அவளை விடாம அவள் வீட்டைச் சுத்தினேன்! ஆனா, அதுக்கும் அஞ்சாம யாரோ ஒரு மலையாளத்துக்காரனைக் கூப்பிட்டு மந்திரிச்சுட்டா! இப்ப அங்கே போனா சுளீர் சுளீர்னு ஷாக்அடிக்கிறது! ஹும் நீங்கதான் சார் என் மனசுப் பழியைத் தீர்க்கணும்.

அப்பா கிராஜுவேட். கதையே மக்னீஷியம் சல்பேட்டை முழுங்கிறாப்பலே பண்ணிடுத்தே, இனிமே எனக்கு ஏதப்பா சக்தி? என்னை விட்டுடுப்பா! உனக்குப் புண்ணியம் உண்டு.

நீ நூறு வருஷம்...

சார்... கதையிலே என்ன அநாயாசமாகக் கொலை பண்றீங்க? துளிக்கூட தேகத்திலே காயம் இல்லாத உள்ளுக்கும் மருந்து கொடுக்காம நடந்த கொலையை எல்லாம்... வர்ணிக்கிறீங்க! சும்மா இவளை அப்படி கழுத்தை மடக்கி வாய்க்காய்லே தள்ளிப்பிடுங்க. உங்களுக்கும் இவளுக்கும் ஸ்நானப்ராப்திகூடக் கிடையாது. எப்படியோ உங்க நாவல் சாமர்த்தியத்திலே 786-ல ஒரு பங்கு காட்டினாலே போதும் சார்.''

நாகனுக்கு மேலே அந்த ஆவி பேசினது கனவில்போல் கேட்டது. அப்புறம் நினைவுதப்பித் தலைதொங்கவிட்டுப்போய் வாயில் நுரைபடிந்துவிட்டது.

அந்த ஆவி டம்ளரில் மிச்சம் இருந்த கொஞ்சத் தண்ணீரை அவர் முகத்தில் மோதியடித்துவிட்டு அதைக் கீழே போட்டுவிட்டு ரொம்பப் பெரிய ஹாஸ்யத்தை ரசிப்பதுபோல சிரியோ சிரி என்று சிரித்துக்கொண்டே புறப்பட்டுவிட்டது. அதன் சிரிப்பொலி காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறைந்தது.

நாகன் இப்போது அந்தக் கொலைக் கதைகளை விட்டுவிட்டார்... புருஷன்-பெண்ஜாதி, மனக்கசப்பு மாமியார் சண்டை, இத்யாதி விஷயங்களையே சுற்றி வந்தன அவர் கதைகள்... ஓர் எறும்புகூட செத்துப்போனது என்று சொல்லவில்லை.
(நன்றி:  ஆனந்தவிகடன்)
*** *** *** ***

Saturday, 11 February 2017

படித்ததில் பிடித்தவை (கோபமுடையவர்கள் - யுகபாரதி கவிதை)


கோபமுடையவர்கள்...

"போக்குவரத்து நெரிசலுக்கிடையே 
நீந்தும் வாகனத்தில் 
நானும் ஒருவனாக  அமர்ந்திருந்தேன்.

ஒருவரை ஒருவர் 
அதீத வெறுப்போடும் 
அந்நியத்தோடும் பார்த்துக்கொண்டனர்.

சனப்பெருக்கத்துக்கு 
யார் யாரெல்லாம் காரணமென்று 
வசைப்பாடத் தொடங்கினர்.

அரசு ஏன் இதற்கெல்லாம் 
வழிவகை செய்வதில்லை என்றும் 
யாவும் ஊழல் மலிந்ததன் 
உபாதை என்றும்  பொருமினர்.

வஞ்சிக்கும் அதிகாரிகளை 
வாரித் தூற்றி வயிறெரிய 
சபித்தனர்.

பெரும் இரைச்சலுக்குப்பின் 
மெல்ல நகரத் தொடங்கின வாகனங்களும் 
மக்களிடமிருந்த கோபங்களும்..!"  


- யுகபாரதி.

Sunday, 22 January 2017

படித்ததில் பிடித்தவை (“மனைவியிடம் சொன்னவை” – யுகபாரதி கவிதை)


“தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்

படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு

இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க

வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்குக் கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்

காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கிற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்

சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்

ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு

வேலைக்கு கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.”

-        கவிதை: யுகபாரதி & ஓவியம்: இளையராஜா.

Saturday, 14 January 2017

படித்ததில் பிடித்தவை (டிகாக்ஷன் போடும் கலை..! சுஜாதா கட்டுரை)


டிகாக்ஷன் போடும் கலை..! சுஜாதா கட்டுரை

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.

மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி. வெறும் ஸ்டெரெய்ன்தான் இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால் போதும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.

ரெஸ்ட் என்பதில் காப்பி கூடப்போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால் வழக்கம் போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது... மனைவி காப்பி போடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்கு மேல்தான் தெரிந்தது.

டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்கஎன்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.

நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளை எட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளாதவன்.

மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராக இருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம் என்றே தெரியாது. மனைவி அமைவதெல்லாம் மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.

காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்கு இருக்க வேண்டும்.

மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால் எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் புல் காப்பிப்பொடிப் பட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன்மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டிவைப்பதில்லை.

ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம். எல்லாம் சைக்கோ கேஸ்.

காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப் ஆகிவிட்டது.
காப்பிப் பொடியை பில்ட்டரில் போடவேண்டும் என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும் மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.

ஆனால் எந்த பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவது  கலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாக சேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டிவகையறா

மனைவி ஒரு பில்ட்டர் கலெக்டர். பல வகையான பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்து இருக்கும்.
அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.

மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதை ஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?)  ஆகிவிட்டது.

எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார் அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும்போலாகிவிட்டது.

நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறதுஎன்று குரல் வரவில்லை.

சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்த பின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகல ஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. ஆனால் நான் கொஞ்சம் சூட்சும மூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படி பாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப்போகிறதென்று அலம்பிவிட்டு சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவே நுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச்சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்கு கோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என் நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).

நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?

ஏதோ ஒரு ஸ்பூன்.

மிளகாய்ப் பொடி ஸ்பூனா?

அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.

துடைச்சீங்களா?

ஊம்ஊம்

சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.

சரியான ஞானக் கண்ணி!

காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னுசே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?

மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.

நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும் ஆயிடுட்டுது
ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு, தப்புத்தானே….

இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போக வேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.

சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான் அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான் சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலே அம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கி வந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு உங்க கண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.

அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப்போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல சாதகமாயிருக்கும்.

ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ் குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.

இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை (குமாச்சியா) போட்டாயிற்று.

அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாக இறங்குமாம்.

ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டேன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.

பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக்குடித்துவிட்டு அவளுக்கும் தரவேண்டியது.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது. சிறிது சூடானதும் பாலில் வினோதமான கொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன. உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. இறைவா, தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பாஎன்ற பிரார்த்தனை எடுபடவில்லை.

இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான் டுப்பேற்றினேன்.

இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி, தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அது இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.
மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரதயுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.

அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர் இருபத்து நாலு ஆச்சே.

ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே

இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது.

“இன்னுமா காப்பி போடறீங்க?”

“தோ ஆச்சு!

“நான் வரட்டுமா?”

“வேணாம், வேணாம்அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.

முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாக மறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில் மனைவியின் என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலை செய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்தபாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.

அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக்கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்து அலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும்படலம் முடிந்தது.

இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.

பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழிக்குச் சிறந்த உதாரணம் பில்ட்டரைக் கழற்றுவதுதான்.

எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக்கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும் விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.

இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒரு ஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.

அதற்குள் மனைவியிடமிருந்து என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டுகால்கள்தான்).

“இதோ ஆச்சு!என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால் என்று ஜோடி பிரிந்தது.
செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.

பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கி மனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்கு திரும்புவதற்குள்,

தூ தூ’ என்று மனைவியின் கூப்பாடு.

“அழுத்தவே இல்லியா…”
கூவினாள் காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி, உரக்க அழைத்திருக்க மாட்டான்.

“எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளி மாதாவிடம் மோதினேன்.

“மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.

மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.

“அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னு தெரியாது?”

“எதை?”

“என் தலையை!

மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளுதள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.

“ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம் பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.

“எதையடி அழுத்தணும்…?”

“காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் வேலை முடிஞ்சிதுன்னு.

நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம் தெரிவித்தேன்.

அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை

“இதனுடைய மேல் பில்ட்டர் எங்கேஅட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சி காப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”

“காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.

“உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன்அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”

“அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.

“காப்பிப் பொடியை அழுத்தணும்இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப்போட்டுத்தர ஆள் இல்லை.

“செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாகஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.

கால்மணியில் மனைவி காப்பியோடு வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.


“போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!என்று பாராட்டினேன். “எனக்கும் காப்பி போடமுறைப்படி கத்துக் கொடுத்துடுஎன்றேன்.

“கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னா பொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல் ஷாவனிஸம்!

“வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பி போடுகிறார்கள் மேலாவது... ஷாவனிஸமாவது... உளறல்.
*** *** ***

(நன்றி: சுஜாதா நினைவலைகள் – முகநூல் பதிவு)