எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 19 April 2014

தக்காளி

                                                           
“காய்கறி கடையில்
உள்ளதில்
நல்ல தக்காளியை
நாம் பொறுக்கி
எடுத்தாலும்...

நாம் எடுத்தவற்றில்
நல்ல தக்காளியை
கடைக்காரர் திருப்பி
எடுத்துக் கொள்கிறார்...

எடையில் அதிகமென்று..!”

-   K. அற்புதராஜு.

Friday, 18 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

                                                                           
“ஏழெட்டு வருடங்களில்
நான்கைந்து முறை மட்டுமே
புன்னகைத்திருக்கும்
பக்கத்து பிளாட்வாசிகளிடம்
எப்படிப் போய்க் கேட்பது...
உறை தயிர் வேண்டுமென்று..!”

                                          -   வினோதா.

Thursday, 17 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                         
1. “மழித்தலும்...
   நீட்டலும்...
   வேண்டாம் என்ற
   வள்ளுவனுக்கு
   நாம் கொடுத்த
   அடையாளம்
   நீண்ட தாடி..!”

          -    மா. தாமோதரன்.
                                     

2. “விலகி
   விலகி
   தூரமாய்
   போகப்
   போக
   எல்லாமே
   பு
   ள்
   ளி
   க
   ள்.

      -   பழநிபாரதி.

Wednesday, 16 April 2014

சுகமான சுமைகள்

                                                 

“வீட்டிலும்...
அலுவலகத்திலும்...
நாம் புதிதாக செய்யும்
அல்லது செய்ய பணிக்கப்படும்
எந்த வேலையும்
அதன் பிறகு
நமது வேலைதான் என்று
ஆகிவிடுவதை
தவிர்க்க முடிவதில்லை..!”

            -   K. அற்புதராஜு.

Tuesday, 15 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                             
1. “என்னை எல்லோருக்கும்
   பிடித்திருக்கிறது.
   உன்னையும் எல்லோருக்கும்
   பிடித்திருக்கிறது.
   எங்களைத்தான் யாருக்கும்
   பிடிக்கவில்லை..!”

                                                     -   ஜனா.
                                      

2. “பாடல்கள் நிரம்பிய
   வாழ்க்கையை
   யாரால்
   நிராகரிக்க முடியும்..?”

                                  -   பழநிபாரதி.

Monday, 14 April 2014

படித்ததில் பிடித்தவை (நட்புக்காலம் – கவிதை)

                                                                               
“தேர்வு முடிந்த
கடைசி நாளில்
நினைவேட்டில்
கையெப்பம் வாங்குகிற
எவருக்கும்
தெரிவதில்லை
அது
ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று..!”

                      -     கவிஞர். அறிவுமதி.

Sunday, 13 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                 
1. “சிகரம்
   தொடத்தான்
   குடியிருக்க
   முடியாது..!”

        -   விக்ரமாதித்யன் தம்பி.

                                   
2. “எந்த நேரத்தில்
   எந்த கதவு
   திறக்கும் என்று
   யார்தான்
   சொல்ல முடியும்..!”

                                -   நகுலன்.

Saturday, 12 April 2014

படித்ததில் பிடித்தவை (ஓடிப்போனவள்...- கவிதை)

                                                                         
“இழுத்துக்கொண்டு
ஓடிப்போன தங்கமுத்து
மாமா
அத்தையை
சாகக்கொடுத்த பிறகு
திரும்ப வந்துவிட்டார்.
இப்ப அத்தை மட்டுமே
ஓடிப்போனவளாகவே
இருக்கிறாள்..!”
              
                       -    பா. ராஜாராம்.

Friday, 11 April 2014

பழையவை கழிதல்

                                                                         
“நீர்நிலைகள் இல்லாத
நகரங்களில்
சூரியன் உதிப்பதற்க்கு
முன்பாகவே இருட்டில்
வீட்டிலிருக்கும் பழைய
சுவாமி சிலைகளையும்,
படங்களையும்
பிள்ளையார் கோவிலில்
வைப்பவர்கள் எல்லோருமே...

பிள்ளையார் கோவில்
அய்யருக்குதான்
பயப்படுகிறார்களே தவிர
பிள்ளையாருக்கு
பயப்படுவதில்லை..!”
           
                  -   K. அற்புதராஜு.

Thursday, 10 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                       
1. “பிள்ளையாரிடம்
   பக்தன்
   வரம் கேட்டான்
   தொப்பைக் குறைய...”
                      
                                     -   ஆசுரா.



                                         

2. “விபத்தில் கையிழந்தவன்
   நினைவில் ஈரமாய்
   விரல் சூப்பிய நாட்கள்..!”

                                    -    முருகேஷ்.

Wednesday, 9 April 2014

சமநிலை பெறுதல்...

                   

அலுவலகத்தில் அவசர வேலை
மூன்றாவது மாடியிலிருந்து
இரண்டாவது மாடிக்கு
இரண்டு இரண்டு படிகளாக
வேகமாக இறங்கும் நான்...

முன்னால் மாற்று திறனாளி ஒருவர்
கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு
அடிமேல் அடி வைத்து மெதுவாக
இறங்குவதை கண்டப்பின்...

ஏதோ ஒரு அனிச்சை செயலாய்
நானும் மெதுவாக இறங்கத்
தொடங்கினேன்..!”
    -    K. அற்புதராஜு.