எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 2 May 2018

பூங்காவில் ஒரு மஞ்சள் பூ மரம்


“அதிகாலை பூங்காவில்
நடைப் பாதையெங்கும்
இயல் வாகை மரத்தின்
மஞ்சள் பூக்கள்.

இயல்பாகவே
பூக்களை மிதிக்காமல்
நடக்கும் என்னை,
வழக்கமான நடையை
மாற்றி சற்றே
தாண்டி தாண்டி
நடக்க வைத்து
அழகு பார்க்கிறது
அந்த வாகை மரம்.

அடுத்த சுற்றில்
நடக்கும் என்னை
அதிக பூக்களை
விழ வைத்து
சற்றே காய்ந்த
பழைய பூக்களை
மிதிக்கும் நிலைமைக்கு
என்னை தள்ளி விட்டது
அந்த மரம்.

ஒரு வழியாக
அந்த சுற்றில்
மரத்தை கடந்த பின்
சற்றே அதிகமாக
வீசிய காற்றில்
இன்னும் அதிகமாக
பூக்களை உதிர்த்தது
வாகை மரம்.

அதற்கு மேல்
பூங்காவில் நடக்க
விருப்பமின்றி
வெளியேறிய என்னை
தடுக்க முடியாமல்
எனது ஊடலை
அந்த மரம்
ரசித்திருக்கும் போல...

அடுத்த நாள் காலையில்
நான் நடக்கும் பாதையை
அத்தனை சுத்தமாக்கி...
பூக்களை ஓரத்தில் மட்டும்
விழ வைத்து...
சற்றே தென்றலை
வீச வைத்து...
என்னை சமரசம்
செய்தது அந்த
மஞ்சள் பூ மரம்..!”

- கி. அற்புதராஜு.

Sunday, 22 April 2018

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்-2)



அலையும் கடலும்
“அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை..!”

- நகுலன்.



மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம் 
“சொல்லக் கூடாத பொழுதொன்றில்
தொடங்கினேன்
எனக்குப் பத்துப் பெண் குழந்தைகள் வேண்டும்
முன்னாள் காதலிகள் பெயர்களை
வைக்கவென
மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.

எனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும்
அதுவும் ஐந்து என அவள் சொல்கையில்
மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம்”

- லதாமகன்.

Saturday, 24 March 2018

படித்ததில் பிடித்தவை (“என் ஒற்றைக் கவிதை” – அ. வெண்ணிலா கவிதை)



என் ஒற்றைக் கவிதை
“சில நூறு விநாடிகளைப்
பார்த்திருக்கின்றன பூக்கள்.

சில நூறு மாதங்களைக்
கடந்திருக்கின்றன செடிகள்.

சில நூறு ஆண்டுகளை
சுவாசித்திருக்கின்றன மரங்கள்.

பல நூறு தலைமுறைகளை
வாசித்துக் கொண்டிருக்கும் மலைகள்.

பூ, செடி, மரம், மலை
அத்தனையும் புரட்டிப் பார்த்துவிடும்
என் ஒற்றைக் கவிதை.”

-    அ. வெண்ணிலா (“ஆதியில் சொற்கள் இருந்தன...” கவிதை தொகுப்பிலிருந்து.)

Friday, 16 March 2018

படித்ததில் பிடித்தவை (“பெயரெச்சம்” – தமிழ்ப்பறவை கவிதை)



பெயரெச்சம்
“நதியில் உன் பெயர்
எழுதிமுடிக்கும் முன்பே
நகர்ந்து விட்டிருந்தது
நதியும் பெயரும்.
விரல்களில் உன்
பெயரெச்சம்…”
- தமிழ்ப்பறவை.

Tuesday, 6 March 2018

தூக்கணாங்குருவி கூடு



“தூக்கணாங்குருவி கூடு
பார்க்க வீட்டுக்கு வரீங்களா?
ஞாயிறு காலை
நண்பரிடமிருந்து கைப்பேசி
அழைப்பு.

சிறு வயதில்
கிராமத்தில் பார்த்தது
நகர வாழ்க்கையில்
அபூர்வமான நிகழ்வு என
குளித்து விட்டு உடனே
கிளம்பினேன்
அடுத்த தெருவிலிருக்கும்
நண்பர் வீட்டுக்கு.

சொந்த வீட்டில்
கீழ்தளத்தில்
குடியிருக்கும் நண்பர்
வாடகைக்கு விட்டிருக்கும்
முதல் தளம்
இரண்டாம் தளம் கடந்து
மொட்டை மாடிக்கு
அழைத்துச் சென்றார்.

மூன்றாம் தளம் வரை
உயர்ந்து வளர்ந்து
சூரியனை தரிசிக்கும்
மாமரத்தில் கட்டியிருந்த
தூக்கணாங்குருவி
கூட்டை மிக அருகில்
பார்த்தோம்.

எங்களது குரல் கேட்டு
தூக்கணாங்குருவி
வெளியே வந்தது.
சுற்றும் முற்றும் பார்த்து
கீச் கீச்சென்று சத்தமிட்டு
பறந்து சென்றது.
அதன் துணைக் குருவியும்
அதனை பின் தொடர்ந்தது.
பறவைகளுக்கு 
வார விடுமுறை 
கிடையாது போல.

தனக்கும் துணைக்குமென
இரண்டு அடுக்கு கூடு.
அவ்வளவு அழகான கூட்டில்
காதல் தெரிந்தது.
முக்கியமாக மற்ற குருவிகளுக்கு
வாடகைக்கு விடவில்லை..!”

-    கி. அற்புதராஜு.

Friday, 23 February 2018

பற்றி படறுதுக் கொடி



“நேற்று நண்பர் வீட்டில்
பீர்க்கங் கொடி ஒன்று
வேப்ப மரத்தின் அருகில்
முளைத்து
மரத்தை பற்றிக்கொண்டே
மேல் நோக்கி
படர்ந்துக் கொண்டிருந்ததை
வியந்துப் பார்த்து
கைப்பேசியில்
படமாக்கினேன்.

இன்று காலை
கிராமத்திலிருந்து
ஒரு இறப்பு செய்தி.
குறைந்த வயது
கோவில் குருக்கள் அவர்.
படிக்கும் குழந்தைகள்.
வேறு வருமானம்
இல்லா வீடு.
‘குருக்களின் மனைவியின்
குடும்பத்தார் அன்பானவர்கள்,
பண்பானவர்கள்
தாங்கிக் கொள்வார்கள்’
என்றார் உறவினர்.

பற்றி படறும் கொடியும்
அதை தாங்கும் வேப்பமரமும்
ஏனோ நினைவுக்கு
வந்துச் சென்றது..!”

-    கி. அற்புதராஜு.

Wednesday, 21 February 2018

படித்ததில் பிடித்தவை (“வரதட்சணை” – சரஸ்வதி தாயுமானவன் கவிதை)



வரதட்சணை
“பட்டப்பகலில்
பலரும் பார்த்திருக்க
கெட்டிமேளச் சத்தத்தில்
கொள்ளை போனது
பெண்ணோடு
பொன்னும் பொருளும்..!”
-      மன்னை சரஸ்வதி தாயுமானவன்.


                                 விதைக் கடையில் சரஸ்வதி.
இந்த விதை கடையில் கவிதையும் கிடைக்கும்
-       எஸ்.கோபாலகிருஷ்ணன் (தி இந்து, 18.02.2018)

கவிதைகள் எங்கு உருவாகின்றன? இசையமைப்பாளர் தந்த மெட்டை ஹெட்போனில் கேட்ட படி யோசிக்கும் கவிஞரிடம், காதலில் விழுந்தவரிடம் இருந்து கவிதைகள் வருவது உண்டு. பெரும்பாலும், சலனமற்ற, மனதுக்கு இதமான அமைதியான சூழல்களிலேயே கவிதைகள் உருவாகின்றன. ஆனால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான கடைத்தெருவில், கடை வியாபாரத்தையும் கவனித்தபடி இருக்கும் பெண், கவிதைகள் எழுதுபவர் என்பது ஆச்சரியம்தானே!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாரத ஸ்டேட் வங்கி அருகில் சாலையோரம் இருக்கிறது அந்த தள்ளுவண்டிக் கடை. தோட்டக்கலைச் செடிகளுக்கான விதைகளை தட்டுகளில் வைத்து வியாபாரம் செய்து வருகிறார் சரஸ்வதி (48). விதை விற்கும் தொழி லாளி என்பதோடு இவருக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. அது, கவிதை எழுதும் படைப்பாளி.
‘மன்னை சரஸ்வதி தாயுமானவன்’ என்ற பெயரில், ‘நெல்மணிகள், உயிர்த்துளிகள்’ என்ற தலைப்பில் 284 கவிதைகள் அடங்கிய தொகுப்பை எழுதியிருக்கிறார். இதுதவிர, நூற்றுக்கணக்கான கவிதைகளை கைவசம் வைத்துள்ளார். ‘செம்மலர்’ போன்ற பொதுவுடமை இயக்க இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
விதைக்கடையில் வியாபாரத்தை கணவர் தாயுமானவனுடன் சேர்ந்து கவனித்துக் கொள்கிறார். தினமும் கிடைக்கும் 200, 300 ரூபாய் வருமானத்தைக் கொண்டு தங்களது 3 மகள்களையும் முதுகலை பட்டதாரிகளாக ஆக்கியுள்ளனர். அவர்களில் இருவருக்கு திருமணமும் முடித்துவிட்டனர்.
வீட்டு வேலைகள், கடையில் வியாபாரத்துக்கு நடுவில், சரஸ்வதிக்குள் ஒரு கவிஞர் உருவானது எப்படி? அவரே கூறுகிறார்..
ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். தாய்மாமாவும், அண்ணனும் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதால், இயல்பாகவே எந்த ஒரு நிகழ்வையும் பொதுப் பார்வையோடு பொருத்திப் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. அதனால், பாடப் புத்தகங்களை விட கதை, கவிதை, கட்டுரைகள்தான் அதிகம் படித்தேன்.
கவிதை எழுதவேண்டும் என்று உட்கார்பவர்களுக்கு தான் கற்பனை வேண்டும். என் கவிதைகளில் கற்பனைகள் அதிகம் இருக்காது. என் வாழ்வில் நடந்த சம்பவங்கள், என் கடைக்கு வரும் மக்கள் வெளிப்படுத்தும் ஏக்கங்கள் என என்னை பாதிக்கிற விஷயங்களை கவிதைகள் ஆக்கிவிடுகிறேன்’’ என்று பெருமிதத் தோடு கூறியவர், தான் எழுதிய ‘வரதட்சணை’ என்ற கவிதையைக் காட்டினார்.

‘‘பட்டப்பகலில்
பலரும் பார்த்திருக்க
கெட்டிமேளச் சத்தத்தில்
கொள்ளை போனது
பெண்ணோடு
பொன்னும் பொருளும்..!’’
*** *** *** *** ***

Saturday, 17 February 2018

படித்ததில் பிடித்தவை (“தீராத நினைவு” - வி.யோகேஷ் கவிதை)


தீராத நினைவு
"நம் கடந்த காலங்கள்
ஒரு தேர்ந்த ஓவியனின்
வரைபடப் புத்தகம் போன்றது.

தோன்றும் பொழுதுகளில்
எனக்குப் பிடித்த வர்ணம் தீட்டி
அழகு பார்ப்பதும் பின்பு
நினைவு மயிலிறகை அதற்குள்
சொருகி வைப்பதும்
எனக்கு வாடிக்கையானது.

நேற்று
நாம் பழகிய தருணங்களை
இரு பழக்கூடையில் நிரப்பி
ஒவ்வொன்றையும் இருவரும்
சுமந்த படி பிரிந்தோம்.

தனிமை பசித்திருக்கையில்
ஞாபகப் பழக்கூடையிலிருந்து
ஒவ்வொன்றாய்ப் புசிக்கக் கொடுத்தோம்.

பழக்கூடை தீர்வதற்குள்
மீண்டும் நாம்
சந்திக்க வேண்டும்..!”

– வி. யோகேஷ்.


Thursday, 8 February 2018

படித்ததில் பிடித்தவை (“விஷப் பார்வைகள்...” - அ. வெண்ணிலா கவிதை)


விஷப் பார்வைகள்...
“விஷப் பாம்பொன்று
என் மீதேறி
நிதானமாக
கடந்து போகிறது
புரிதலற்ற உன்
பார்வைகளைச்
சந்திக்கும்போதெல்லாம்..!"

- அ. வெண்ணிலா.