எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 18 August 2023

*பூக்கள் பூக்கும் தருணம்*

 


ரயில் பயணத்தில்

இருக்கை கிடைக்காமல்

நிற்கிறார் முதியவர்.

முன்னும், பின்னும்

பரபரப்பாக தேடுகிறார்

இருக்கை கிடைக்குமாவென...

அவரது பார்வையைத் தொட்டு

எழுந்து இடம் கொடுக்கிறேன்.

உட்கார்ந்தவர் நன்றியோடு பார்க்கிறார்.

அவரருகில் நின்றுக்கொள்கிறேன்.

 

என் மனம் மகிழ்கிறது.

 

நான் இறங்கப் போகிறேன்

என நினனத்திருப்பார் போல...

நான் நிற்பதைப் பார்த்ததும்

எனக்கு இடம் தேடி

மீண்டும் பரபரப்பானார்.

 

சில நிறுத்தங்களுக்குப் பிறகு

எதிர் இருக்கை காலியாகிறது.

மற்றவர்கள் உட்காரும் முன்

அந்த இடத்தைப் பிடித்து

என்னை உட்கார சொல்கிறார்.

சிறிய புன்முறுவலோடு பார்க்கிறார்.

நானும் புன்னகைக்கிறேன்.

 

இப்போது

அவரது மனமும் மகிழ்ந்திருக்கும்..!

 


*
கி. அற்புதராஜு*

Tuesday, 15 August 2023

படித்ததில் பிடித்தவை (“என் கண்களில்...” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*என் கண்களில்...*

 

கைதட்டிக் கூப்பிட்டவர்

அப்பா போலிருந்தார்.

அருகில்போய் கேட்டேன்.

ஒன்னுமில்ல தம்பி

என் பையன் சாயல்ல இருந்தீங்க

அதான் ஒருவாட்டி

பாத்துக்கலாம்னு கூப்பிட்டேன்.’

கண்களைத் துடைத்துக்கொண்டார்.

ஏன் அழறீங்க..?’ என்றேன்.

அவன் போயி சேர்ந்துட்டான் என்றார்.

வேறெதும்

சொல்லிக்கொள்ளாமல்

திரும்பி நடந்தேன்.

என் கண்களில்

நீர் இருந்தது..!

 


*
ராஜா சந்திரசேகர்*



Sunday, 13 August 2023

படித்ததில் பிடித்தவை (“பெருந்துயர்” – யாத்திரி கவிதை)

 


*பெருந்துயர்*

 

புரியாது போன

பிரியங்களில் பெருந்துயர்

எது தெரியுமா..?

வாழும்மட்டும்

அதனை நானே

சுமந்தலைய வேண்டும்..!

இறகான அன்பின்

மலையான கனத்தை..!

 

*யாத்திரி*