எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 29 December 2019

பிள்ளையாரும் நானும்...





அலுவலக வாயிலில்
பிள்ளையார் கோவில்.

கோவிலுக்கு முன்புறம்
பல நாட்களில்
சரியாக மூடாமல்
சொட்டிக் கொண்டிருக்கும்
தண்ணீர் குழாய்...

மூடி செல்கிறேனா
என தினமும்
சோதிப்பார் போல...

மூடியப்பின்
அவரை வழக்கமாக
வணங்கி செல்வேன்.

அன்றும்
சொட்டிக் கொண்டிருந்தது
குழாயில் தண்ணீர்...
மூடவில்லை நான்.

குழாயின் மீதமர்ந்து
சொட்டும் தண்ணீரைக்
குடித்துக் கொண்டிருந்தது
காகம் ஒன்று.

அதை தொந்தரவு செய்யாமல்
பிள்ளையாரை வணங்கி
கண் திறந்தபோது
அவர் சற்றே
சிரித்ததுப் போல்
தோன்றியது எனக்கு..!

                              
                    - கி. அற்புதராஜு.

No comments:

Post a Comment