எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 26 November 2019

படித்ததில் பிடித்தவை (‘குட்பை’ சொன்ன கிளி – ஞானக்கூத்தன் கவிதை)


குட்பை சொன்ன கிளி


பேசுங் கிளிமேல் எனக்கு ஆசை பிறந்தது.

நானொரு பேசுங்கிளியை வாங்கி வந்தேன்.

பேசுங்கிளியை என்னிடம் விற்றவன்
கிளியை எப்படி வளர்க்கணும் என்பதை
என்னிடம் விரிவாகச் சொன்னான்.

கூண்டில் கிளியை வளர்ப்பது
பாவமென்று கூறினார்கள்
பக்கத்துப் போர்ஷன் பெரியவர்கள்.
நானதைப் பொருட்படுத்தாமல்
நல்ல இடமாகப் பார்த்து
பேசுங் கிளியின் கூண்டை அமர்த்தினேன்.

கூண்டில் இருந்த கிளி
பழங்களை விதைகளை நன்றாகத் தின்றது
ஆனால் ஒருநாள் கூடப் பேசவே இல்லை.

என்ன குறையோ என்ன கோபமோ
பேசப் பிடிக்காமல் போயிற்றென்று
சும்மா இருந்தேன் சிலநாட்கள்.
என்னிடம் இல்லை என்றாலும்
வேறு யாரிடமாவது
பேச வேண்டும் அல்லவா அந்தக் கிளி..?

குட் மார்னிங் சொன்னேன்.

சுவையாய் இருந்தனவா பழங்கள் என்றேன்.
எதற்கும் பேசவில்லை அந்தக் கிளி.
வீட்டுக்கு வந்தவர்கள் கிளியிடம்
பேச்சுக் கொடுத்தார்கள். பதிலுக்குப்
பேசவே இல்லை அந்தக் கிளி.
பேசாத கிளியை வளர்ப்பானேன்
என்றார்கள் வீட்டில். நானும்
கிளியை விற்கலாம் என்று தீர்மானித்தேன்.

விலைக்கு வாங்க வந்தவர் கேட்டார்
பேசுமா..? என்று. பேசுமே என்றேன்.
வீட்டுக்குக் கொண்டுபோய்ப்
பழங்கள் தந்து பழக்குங்கள். இரண்டே நாளில்
நன்றாய்ப் பேசும் என்றேன்.
பொய் சொன்ன நெஞ்சில்
பூதங்கள் ஐந்தும் புன்னகை செய்தன.
விலைக்குப் பெற்றவர் கிளியுடன்
கூண்டைப் பெற்றுக்கொண்டு
புறப்படும் போது திடுக்கிட்டுப் போனேன்
குட்பை என்றது அந்தக் கிளி.

      -  ஞானக்கூத்தன்.

1 comment:

  1. அருமை.
    கவிஞர்.ஞானக்கூத்தன் அவர்களின் மொழி நடை கவிதையை மேலும் அழகாக்கிவிடுகிறது.

    ReplyDelete