எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 28 March 2019

படித்ததில் பிடித்தவை (‘ஒரு விதை புரட்சி’ – ராஜ சுந்தரராஜன் கவிதை)


ஒரு விதை புரட்சி

நானும் என் மந்தையும்
ஒரு விதையின் நிழலில்
இளைப்பாறுகிறோம்
அது மரமாகி வளர்ந்து
நிற்கிறபடியால்..!

- ராஜ சுந்தரராஜன்.

Friday, 22 March 2019

படித்ததில் பிடித்தவை (‘நேரம்!’ – சுஜாதா-வின் குட்டிக்கதை)


நேரம்!

ஒர் இளம் நகரவாசி, ‘நேரம் பொன்னானது. அதை வீணாடிக்கக் கூடாது என்று நம்பினார்.

அதனால், காலை அலுவலகத்துக்குப் புறப்படுமுன் ஷேவ் பண்ணிக்கொண்டே குளிப்பார். பாத்ரூம் போகும்போதே, பேப்பர் படிப்பார். தோசையோ, இட்லியோ வெகுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, கையை காலை ஆட்டி, உடற்பயிற்சி பண்ணிக்கொண்டே, ரேடியோவில் பக்திப் பாடல்கள் கேட்பார்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிஷத்தையும் விரயமடிக்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருமுறை இந்த அவசரத்தின்போது ஒரு சின்ன பிழை நேர்ந்துவிட்டது. மாறுதலுக்காக ஆம்லெட் சாப்பிட எண்ணி, அதைக் கையால் சாப்பிட்டால் நேரமாகும்; கையலம்ப வேண்டும் என்று, முள் கரண்டியால் சாப்பிடும்போது நியூஸ் பேப்பரில் கவனமிருந்ததால், அக்கரண்டி அவர் கண்ணைக் குத்திவிட்டது. கண்ணின் விழி, கரண்டியால் வந்துவிட்டது.

இப்போது அவர் ஒரு கண்ணால் ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறார். நேரம் பொன்னானது என்று யாராவது சொன்னால் சீறுகிறார். அவ்வப்போது அமைதியாக மீன் பிடிக்கச் சென்று விடுகிறார். மணிக்கணக்காக ஒரு மீனுக்காகக் காத்திருக்கிறார், பிடித்து மறுபடி நீரில் விட்டு விடுகிறார்.

நீதி : நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது.

 - சுஜாதா.

Thursday, 21 March 2019

படித்ததில் பிடித்தவை (‘குப்பை’ – கண்மணி குணசேகரன் கவிதை)


குப்பை

உதிர்ந்து கிடந்த
பூக்கள்...
அழகு.

கூட்டும்போதுதான்
குப்பையாகிவிட்டது..!

- கண்மணி குணசேகரன்.

Tuesday, 19 March 2019

படித்ததில் பிடித்தவை (‘பைகள்’ – கண்மணி குணசேகரன் கவிதை)


பைகள்

வண்ண வண்ண
சணற் பைகள்.
வழிமறித்து
விற்றுகொண்டிருந்தான்.

வெளுத்து விடும் என்றேன்.

ஆமா சார்,
வெளுத்து, சாயம் போவனும்.
நாளாவட்டத்தில் கிழியனும்.
கடைசியில...
மண்ணோட மண்ணா-
மக்கிப் போவணும்.

- கண்மணி குணசேகரன்.

Wednesday, 6 March 2019

தட்சணை


சாமி கும்பிட்டபின்
நூறு ரூபாய்க்கு
சில்லறை கேட்ட
பக்தனுக்கு
தீப ஆராதனை
தட்டிலிருந்து எடுத்து
பத்து பத்து ரூபாயாக
சில்லறை கொடுத்தார்
கோவில் அர்ச்சகர்.

அதிலிருந்து
பக்தன் கொடுத்த
பத்து ரூபாய்
தட்சணையை மறைத்து
நூறு ரூபாய் மட்டும்
தெரியும் படி
தட்டின் மீது
வைத்தார் அர்ச்சகர்.

அடுத்து வரிசையில்
வரும் பக்தர்கள்
நூறு ரூபாயாக
வைப்பார்களா என்று
அர்ச்சகரும்,
பரமனும்
அருகில் அமர்ந்திருக்கும்
பார்வதியும்
ஆவலுடன்
பார்த்துக்கொண்டிருந்தனர்..!


-   கி. அற்புதராஜு.