மரம் இருந்த இடம்
“அதன் நிழலில்
உட்கார்ந்துதான்
கை மணிக்கட்டின் மேடுபள்ளங்களில்
விரல் ஊர வைத்து
ஜனவரி பிப்ரவரி மார்ச்சுக்கு
எத்தனை நாளென்கிற கணக்கை
என் மகனுக்கு சொல்லிக்
கொடுத்தேன்.
******************************************
என் விலாசத்தை
விசாரிப்பவர்களிடம்
நேற்று வரையில்
‘அதோ
மரமிருக்கிற வீடுதான்’ என்று
அடையாளம் காட்டியவர்களால்
‘அதோ
மரமிருந்த வீடுதான்’ என்று
இனி சொல்ல முடியுமா?
*******************************************
சொந்த ஊருக்குப்
போகும்போதெல்லாம்
போய்ட்டு வாரேனென்று
அதனிடம் சொல்லிச் செல்கிற
என் மனைவியிடம்கூட
சொல்லாமக் கொள்ளாமப் போய்விட்டது
வாசல் மரம்.
*******************************************
குழி புண் மாதிரி கிடக்கிறது
மரமிருந்த மண்
அதன் ஆழங்களில்
எங்கள் வீட்டின் வேர்கள்.
யாராலும் நிரப்ப முடியாத
கோடிட்ட இடமாகிவிட்டது
எங்கள் தெரு.
*******************************************
எங்கள் வீட்டுக்கு வரும் லாண்டரி
அண்ணனும்
எப்போதாவது வருகிற அஞ்சல்காரரும்
அதிகாலை பேப்பர் பையனும்
வீட்டு வாசலில் வெறுமையைத்
துழாவினர்
அவர்களின் கண்களில்
உதிர்ந்தன
ஞாபகங்களின் இலைகள்.
******************************************
மரத்தை அறுத்தால்
ஆண்டுவளையம் தெரியுமென்பார்கள்
இப்போது
எங்கள் மனசை அறுக்கிறது
எங்கள் மரத்தின் ஆண்டுவளையம்.
******************************************
கிளைகளின் கதைசொல்லி
காகங்களுக்கும்
செய்திகள் வாசித்த
அணில்களுக்கும்
6, மூணாவது குறுக்குத் தெரு
பெரியார் நகர் என்பது
இனி, பழைய முகவரி..!”
- மானா பாஸ்கரன்.
No comments:
Post a Comment