எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 28 November 2015

படித்ததில் பிடித்தவை (யுகபாரதி கவிதைகள்)


அய்யனார்
“ஊருக்குள்
வர முடியாத
அய்யனார்
உட்கார்ந்திருப்பதோ
குதிரையில்..!”



தனி...தனி...
“எடை போட்டு
விற்கப்படுகிற
சந்தையில்
தனிப்பூவின் அழகு
செல்லுபடியாவதில்லை..!”

-  கவிஞர். யுகபாரதி.

Tuesday, 24 November 2015

படித்ததில் பிடித்தவை (ஏழு பள்ளிகளில் படித்தவன் - நா.முத்துக்குமார் கவிதை)


ஏழு பள்ளிகளில் படித்தவன்

“ஏழு பள்ளிகளில் படித்த
ஆர்.எஸ். கேசவன்
எட்டாவது பள்ளியாக
எங்கள் வகுப்புக்கு
வந்து சேர்ந்தபோது
அரையாண்டு விடுமுறை முடித்து
நாங்கள்
முழு ஆண்டு ஜூரத்தில் இருந்தோம்.

சொல்வதற்கும் அவனிடம்
ஏராளம் கதைகள் இருந்தன.
கேட்பதற்கு எங்களிடம்
இரண்டே இரண்டு
காதுகள் மட்டுமே.

ஒன்பதாவது பள்ளிக்கு
எங்களைச் சுருட்டி
கதையாக மாற்றி
சிரித்தபடி போனான்..!”

-          நா. முத்துக்குமார்.

Saturday, 14 November 2015

படித்ததில் பிடித்தவை (ஒரே ஒரு குடை - கவிதை)


ஒரே ஒரு குடை
“அப்பாவுக்கும் எனக்குமாய்
ஒரே ஒரு குடை.

இன்னொரு குடைக்கான
தேவை இருப்பின்
அதை வாங்க
நானும் அவரும்
விரும்பியதில்லை.

மழை வரும்
குடை எடுத்து போடா என்று
என் கைகளில்
திணித்து விட்டு செல்கிறார்
அப்பா.

அவருக்கு தெரியாமல்
அந்த குடையை
அவரின் பையில்
வைத்துவிட்டு வெளியேறுகிறேன்.

அவர் என்னோடு
அதிகமாய் பேசமாட்டார்.
எல்லா அப்பாவும் அப்படித்தானோ...
அவரின் இந்த அன்புதான்
என்னோடு அதிகமாய் பேசும்.

அதனாலையே
அப்பாவையும் பிடிக்கும்.
அவரை என்னோடு
பேச வைக்கும் மழையையும்
பிடிக்கும்...”

- (மழை பயணம் வலைப்பூவிலிருந்து...)

Monday, 9 November 2015

நகரம் என்னும் நரகம்...


“ஒரு இடிந்த வீட்டிலிருந்தோ
புதரிலிருந்தோ அபூர்வமாக
நகர வீதியின் குறுக்கே
செல்லும் பாம்பை
வால் மறையும் வரை
பதைபதைப்புடன்
பார்க்காமலும்...

சைக்கிளிலிருந்து தவறிக்
கீழே விழும் பள்ளிக்கூடம்
செல்லும் சிறுவனுக்கு
உதவ முடியாமலும்...

வேகமாக செல்லும்
வாகனங்களால்
சாலையைக் கடக்க
முடியாமல் நிற்கும்
ஒரு குழந்தைக்கோ,
முதியவருக்கோ,
பார்வையற்றவருக்கோ
உதவ முடியாமலும்...

எப்போதாவது
பாகனுடன்
நகர் வலம் வரும்
யானையின்
பிரமாண்டத்தை
ரசிக்காமலும்...

செடிகளைத் தேடி
கிடைக்காமல்
சாலையோரம்
நின்றிருக்கும்
கார் மீது அமர்ந்து
செல்லும்
வண்ணத்துப்பூச்சிக்காக
வருந்தாமலும்...

நம்மை ஓட வைக்கிறது
நகரத்து வேகம்..!”

           -   K. அற்புதராஜு.

Friday, 6 November 2015

படித்ததில் பிடித்தவை (அதுதான் வாழ்க்கை - கவிஞர். அப்துல் ர‌குமான் கவிதை)


அதுதான் வாழ்க்கை...
“க‌டைசிப் ப‌க்க‌ங்க‌ள்
கிழிந்துபோன‌
துப்ப‌றியும் ந‌வீன‌த்தை
தெரியாம‌ல் எடுத்துப்
ப‌டித்திருக்கிறீர்க‌ளா..?

அதுதான் வாழ்க்கை..!”
-  கவிஞர். அப்துல் ர‌குமான்.