எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 28 December 2017

படித்ததில் பிடித்தவை (“மற்றும் சில ஆடுகள்” - தேவதச்சன் கவிதை)


மற்றும் சில ஆடுகள்

"காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை.
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன.
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

- தேவதச்சன்.


(வண்ணத்துப் பூச்சிகள் இயற்கையின் மிகப் பெரிய வரங்கள் அவைகளால் காடுகள் மரங்கள் உருவாகும் ஆதாரமான மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. இயற்கையுடன் ஒன்றிய ஒருவனாக இருக்கும் இடையன் ஆடுகளை மட்டும் மேய்க்கும் காட்சியாக அவனைக் குறுக்க முடியாது. அவன் அந்தச் சூழலையே மேய்ப்பவனாகிறான். 
- சத்யானந்தன்)

Sunday, 24 December 2017

படித்ததில் பிடித்தவை (“கடைசி இலை” - வீரன்குட்டி கவிதை)


கடைசி இலை

மரத்தில்
எஞ்சியிருக்கும்
கடைசி இலைக்கு
பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா?
வாய்க்கும்.

உச்சிவெயிலில்
தரையில் ஒரு சிற்றெறும்பு
நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம்.
காற்றில் ஆடியபடி
தொடர்ச்சியாக
எறும்பின் பாதையில்
நிழலிட
அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.

ஆட்டத்தின் உச்சத்தில்
இலை
மரத்தை விட்டு அகலலாம்.
அப்போதும்,
ர் குடையாய்
எறும்பின் மேலேயே
விழ வாய்த்தால்,
தாய் வந்து
குட்டியை ஒளித்ததற்காக
கண் சிவக்க கோபிக்கும் வரை
அந்த இருப்பு தொடருமானால்,
அதுவே
பெருமகிழ்ச்சி..!”

- வீரன்குட்டி (மலையாளம்)

  தமிழில் : சித்தார்த்.